உத்தவ் தாக்கரேயை நெருங்கிய அமலாக்கத்துறை... மகாராஷ்டிரா முதல்வர் மைத்துனரின் 11 வீடுகளுக்கு சீல்!

மகாராஷ்டிராவில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், சிவசேனா தலைவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு மும்பை மாநகராட்சியின் நிலைக்குழுத்தலைவர் யஷ்வந்த் ஜாதவ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. தற்போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மைத்துனர் ஸ்ரீதர் மகாதேவ் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது. உத்தவ் தாக்கரேயின் மனைவி ரேஷ்மி தாக்கரேயின் சகோதரரான ஸ்ரீதர் மகாதேவ் சொந்தமாக ஸ்ரீசாய்பாபா கிரஹநிர்மிதி என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட வீடுகள்

இந்த நிறுவனம் கட்டி வரும் கட்டடத்தில் 11 வீடுகளை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6.45 கோடியாகும்.

2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பிஹு கோல்டு மற்றும் சத்னம் ஜூவல்லர்ஸ் ஆகிய இரு கம்பெனிகள் தரப்பில் 84.5 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. அந்த பணம் பின்னர் 258 கிலோ தங்கம் வாங்குவதற்காக புஸ்பக் புல்லியன் என்ற நிறுவனதின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டது. புஸ்பக் புல்லியன் நிறுவனம் இத்தனை பெரிய பண பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு பெரிய நிறுவனம் இல்லை என்பதை விசாரணையில் தெரிந்து கொண்ட அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் 2017-ம் ஆண்டு அந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில் பிஹு கோல்டு மற்றும் சத்னம் ஜூவல்லர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஷெல் கம்பெனிகள் என்று தெரிய வந்தது. பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுக்களை வாங்குவதற்காக மட்டுமே இக்கம்பெனி பயன்படுத்தபட்டது தெரிய வந்தது, அத்தோடு புஸ்பக் நிறுவனத்தின் இயக்குநர் மகேஷ் பட்டேல் கம்பெனியில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டார். இதனால் புஸ்பக் நிறுவனம் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் புஸ்பக் குரூப் நிறுவனம் ஹம்ஷபர் டீலர் பிரைவேட் லிமிடெட் என்ற ஷெல்(போலி) கம்பெனிக்கு ரூ.30 கோடியை பரிமாற்றம் செய்தது. அப்பணத்தை ஹம்ஷபர் நிறுவனம் உத்தவ் தாக்கரேயின் மைத்துனர் நிறுவனமான ஸ்ரீசாய்பாபா நிறுவனத்திற்கு உத்தரவாதம் இல்லாத கடனாக கொடுத்து இருப்பதாக அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் உத்தவ் தாக்கரே மைத்துனர் ஸ்ரீதர் மகாதேவ் மும்பை அருகில் உள்ள தானேயில் புதிதாக கட்டி வரும் கட்டடத்தில் இருக்கும் 11 வீடுகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

உத்தவ் தாக்கரே

அமலாக்கத்துறையின் இந்நடவடிக்கையை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``மத்திய விசாரணை ஏஜென்சி தவறுதலாக பயன்படுத்தப்பட்டு வருவது துரதிஷ்டவசமானது” என்று தெரிவித்தார்.

சிவசேனா செய்திதொடர்பாளர் சஞ்சய் ராவத் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ``ஸ்ரீதர் மகாதேவ் தனது தரப்பில் விளக்கம் கொடுக்க வாய்ப்பு கொடுக்காமல் அமலாக்கப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். இது சர்வாதிகாரத்தின் தொடக்கமாகும். இதற்கான விலையை பாஜக கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் முன்பாக மும்பையில் பாஜக நிர்வாகி மொஹித் கம்போஜி வசிக்கும் 14 கட்டடத்திற்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. கட்டடத்தில் விதிகளுக்கு மாறாக மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மாநகராட்சி அதிகாரிகள் பாஜக பிரமுகர் வசிக்கும் கட்டிடத்தில் சோதனை செய்ய இருக்கின்றனர். ஏற்கனவே பாஜக மத்திய அமைச்சர் நாராயண் ராணே வசிக்கும் கட்டடத்திற்கும் மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/ArPdUDY

Post a Comment

0 Comments