`எல்லோரும் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர்' - 2024 தேர்தலில் பிரியங்காகாந்தி கணவர் போட்டியிட முடிவு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி சமீபகாலமாக அரசியலில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். உத்தரப்பிரதேச தேர்தலில் பிரியங்கா காந்திதான் காங்கிரஸ் கட்சியை முன்னின்று நடத்தி வருகிறார். ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தொழிலதிபர் ஆவார். அவர் அரசியல் பக்கம் வருவதே கிடையாது. இந்த நிலையில், அவர் தற்போது திடீரென தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ``எல்லோரும் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மொதராபாத் தொகுதியில் போட்டியிடுவதா அல்லது வேறு தொகுதியில் போட்டியிடுவதா என்பது குறித்து விரைவில் முடிவு செய்வேன். நான் மக்களுக்கு தினமும் சேவை செய்கிறேன். தேர்தல் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நாடு முழுவதும் இருக்கும் கோயில்கள், மசூதிகள், சர்ச்கள், குருத்வாராக்களுக்கு சென்று கொண்டுதான் இருக்கிறேன். அரசியலில் என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறேன். மக்களின் வாழ்க்கை சிறப்பாக மாறவேண்டும் என்று விரும்புகிறேன். பிரியங்கா வீட்டிற்கு வந்ததும், கிராமங்களில் உள்ள மக்களின் துன்பங்களை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து விவாதிப்போம்" என்றார்.

பிரியங்கா காந்தி

அவரிடம், ``பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேச முதல்வராக வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா" என்று கேட்டதற்கு, ``உத்தரப்பிரதேச மக்கள் அதை விரும்புகின்றனர். ஆனால் அது அவருடைய முடிவு. உத்தரப்பிரதேசத்திற்குள் மட்டும் தன்னை கட்டுப்படுத்திக்கொள்வதா அல்லது தேசிய அரசியலில் ஈடுபடுவதா என்பது குறித்து பிரியங்காதான் முடிவு செய்யவேண்டும். ராகுல் காந்தியும், பிரியங்காவும் எந்தவித பதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். அரசியல் அவர்களின் ரத்தத்தில் ஊறி இருப்பதால் அவர்கள் எல்லா இடங்களிலும் மக்களுக்காக உழைக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் இந்த முறை இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/3Msvpi4

Post a Comment

0 Comments