தாவூத்துடன் தொடர்பு: சிறையிலிருக்கும் மகாராஷ்டிரா அமைச்சர் மாலிக் இல்லத்தில் அமலாக்கப்பிரிவு ரெய்டு!

மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், பிப்ரவரி 23-ம் தேதி அவரைக் கைது செய்தனர். தாவூத் இப்ராஹிம் சகோதரி ஹசீனா பார்க்கரிடமிருந்து நவாப் மாலிக் சொத்தை விலைக்கு வாங்கியிருந்தார். ஹசீனா பார்க்கர் வேறு ஒருவரின் சொத்தை அபகரித்து அதை நவாப் மாலிக்குக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நவாப் மாலிக் கொடுத்த பணத்தை அவர் சகோதரி தாவூத் இப்ராஹிமிடம் கொடுத்ததாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் மும்பை குர்லாவில் உள்ள நவாப் மாலிக் இல்லத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். பெண் அதிகாரிகள் உட்பட 9 பேர் ஏராளமான மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருடன் ரெய்டுக்கு வந்தனர். நவாப் மாலிக், தாவூத் சகோதரியிடமிருந்து வாங்கிய குர்லாவில் உள்ள கோவாவாலா காம்பவுண்டிலும் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.

நவாப் மாலிக்

அந்தப் பகுதி முழுக்க முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ஏராளமான மத்திய ரிசர்வ் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ரெய்டின் போது அங்கு முதியவர் ஒருவர் வரவழைக்கப்பட்டு அவரிடம் அதிகாரிகள் சர்ச்சைக்குரிய சொத்து தொடர்பாக விசாரித்தனர். அதோடு சொத்து ஆவணங்கள் தொடர்பாக சில சந்தேகங்களையும் கேட்டறிந்தனர். நவாப் மாலிக் தற்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். அமலாக்கப்பிரிவின் இந்த ரெய்டு இந்த வழக்கில் நவாப் மாலிக்குக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவாப் மாலிக்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்று கோரி பா.ஜ.க கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் நவாப் மாலிக்கிடமிருந்த இலாகா மட்டும் பறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கேபினட் அமைச்சராக தொடர்கிறார். அடுத்த இரண்டு மாதங்களில் மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நடக்க இருப்பதால் பா.ஜ.க-வினர் ஆளும் கட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/heAgfVv

Post a Comment

0 Comments