அரை நூற்றாண்டுகளாக சினிமாவில் ரசிகர்களுக்கு பிரியமான நடிகையாக இருந்த லலிதா சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள மகன் சித்தார்த்தின் வீட்டில் மரணமடைந்தார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சையிலிருந்த நிலையில் அவர் தனது 74-வது வயதில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் கொச்சியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் திருச்சூர் சங்கீத, நாடக அகாடமியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசு மரியாதையுடன் வடக்காஞ்சேரியில் உள்ள அவரது வீட்டின் அருகே நேற்று மாலை 6 மணியளவில் லலிதாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. லலிதா-வின் இறப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக 600-க்கும் மேற்பட்ட்ட திரைப்படங்களில் நடித்து சினிமா உலகில் துணை நடிகையாக கவனம் ஈர்த்தவர் கேபிஏசி லலிதா. குரலில் ஏற்ற இறக்கம் மூலம் கதாபாத்திரத்துக்கு உயிரோட்டம் கொடுத்து ரசிகர்களை சிரிக்கவைப்பதில் வல்லவர் கேபிஏசி லலிதா. ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்துவந்தர். அதில் 'கூட்டு குடும்பம்' என்ற நாடகத்தை 1969-ல் கே.எஸ்.சேதுமாதவன் சினிமாவாக எடுத்தார். அந்த சினிமா மூலம் திரை உலகுக்கு வந்தார் கேபிஏசி லலிதா. நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த முதல் நாள் ஷூட்டிங்க்குச் சென்ற லலிதா டென்சனாகவே இருந்தார். 'எனக்கு சினிமா சரிப்பட்டுவராது. என்னை விட்டுருங்க' என ஷூட்டிக் ஸ்பாட்டில் வைத்து இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவனிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார் லலிதா. 'முதலில் காட்சியை எடுத்து பார்ப்போம். சரியாக வராமல் இருந்தால் நீ போகலாம்' எனச் சொன்னார் சேதுமாதவன்.
கூட்டுக்குடும்பம் சினிமாவுக்காக முறத்தில் அரிசியைப் போட்டு புடைக்கும் காட்சி படமாக்கப்பட்டது. காட்சி அட்டகாசமாகவும், இயல்பாகவும் வந்தது. அன்று மூன்று காட்சிகள் படமாக்கப்பட்டன. காட்சி படப்பிடிப்பு முடிந்ததும் இனி சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாமா என சேதுமாதவன் கேட்டார். 'சினிமா இவ்வளவுதானா' என வெளிப்படையாகவே கேட்டுவிட்டார் லலிதா. அவர் சினிமாவில் மகா நடிகையாக வருவார் என அப்போதே கணித்தார் சேதுமாதவன். அதன்பிறகு வாழ்வே மாயம் போன்ற கே.எஸ்.சேதுமாதவனின் சினிமாக்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். கேரள குடும்ப பாரம்பர்யத்தை வெளிப்படுத்துவதுடன், அந்த கதாபாத்திரத்தில் நகைச்சுவையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் முத்திரை பதித்தவர் லலிதா.
காயாங்குளம் ராமபுரத்து கடய்க்கால் தறயில் அனந்தன் நாயர் - பார்கவி அம்மா ஆகியோரது மகளாக 1947 மார்ச் 10-ம் தேதி பிறந்தார். மகேஷ்வரி எனதுதான் அவருக்கு பெற்றோர் இட்ட பெயர். பள்ளியில் படிக்கும்போதே நடனத்தின்மீது ஆர்வம் இருந்தது. ராமபுரம் பள்ளியில் நடனம் ஆடி அரங்கேற்றம் செய்தார். 10-வது வயதில் கே.பி.ஏ.சி நாடக கம்பெனியில் சேர்ந்து 'பலி' என்ற நாடகத்தில் நடித்தர். அதன்பிறகு தனது பெயரை கே.பி.ஏ.சி லலிதா என மாற்றிக்கொண்டார். குறுகிய காலத்திலேயே நாடகங்கள் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
1978-ல் இயக்குநர் பரதனை திருமணம் செய்துகொண்டார். மாதவிக்குட்டி, சக்கரவாகம், நீலக்கண்ணுகள் போன்ற சினிமாக்களில் ஒன்றாகப் பணிபுரிந்தபோது ஏற்பட்ட பழக்கம் இருவரையும் திருமணத்தில் இணைத்தது. திருமணத்துக்குப் பிறகு பரதன் தன் சினிமாக்களில் கே.பி.ஏ.சி.லலிதாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். 1998-ல் கணவர் பரதன் காலமானதைத் தொடர்ஞு சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். சத்யன் அந்திக்காடு இயக்கிய 'வீண்டும் சில வீட்டுகார்யம்' என்ற சினிமா மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இரண்டு முறை துணை நடிகைக்கான தேசிய விருதும், நான்கு முறை கேரள மாநில விருதும் பெற்றுள்ளார்.
மகன் சித்தார்த் பரதன் சினிமா இயக்குநராகவும் நடிகராகவும் உள்ளார். ஸ்ரீகுட்டி என்ற மகளும் உண்டு. கே.பி.ஏ.சி லலிதா 2016 முதல் கேரள சங்கீத, நாடக அகாடமியின் தலைவராக இருந்தார். கேரள சங்கீத, நாடக அக்காடமியின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. சி.பி.எம் கட்சியில் இருந்தவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் அடிக்கடி வெளியாகும். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவே இல்லை.
காதலுக்கு மரியாதை, மணிரத்தினத்தின் அலைபாயுதே, காற்று வெளியிடை உள்ளிட்ட தமிழ் சினிமாக்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். மாமனிதன், ஒருத்தி, டேரி மில்க், பெற்றம்மா, லாசதின்றெ லோகம் போன்ற சினிமாக்களில் கடைசியாக நடித்திருந்தார். நடிகர் இன்னசெண்ட் உடன் இவருக்கு கெமிஸ்ட்ரி நன்றாக வருவதாக மலையாள சினிமா உலகில் ஒரு நம்பிக்கை உண்டு. அதனால்தான் கஜகேசதி யோகம், அபூர்வம்சிலர், கோட்டயம் குஞ்சச்சன், மக்கள் மஹாத்மியம் என பல சினிமாக்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடியாக இன்னசெண்டும் கே.பி.ஏ.சி.லலிதா-வும் நடித்திருந்தனர். மகா நடிகையை இழந்து தவிக்கிறது மலையாள திரை உலகம்.
from தேசிய செய்திகள் https://ift.tt/MxdaR1H
0 Comments