போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த ரூ.1.6 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகள்; ரிசர்வ் வங்கிக்கு கோர்ட்டின் உத்தரவு

மும்பை அருகில் உள்ள டோம்பிவலியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் மோசடி புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது கல்யான் நீதிமன்றம் கிஷோரிடம் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் ரூ.1.6 லட்சத்தை டெபாசிட் செய்யும்படி கேட்டுக்கொண்டது. 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் கிஷோர் ரூ.1.6 லட்சத்தை போலீஸ் நிலையத்தில் டெபாசிட் செய்தார். 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்டார். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள மத்திய அரசு 2016-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை காலக்கெடு வழங்கியது. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் உள்ள தனது பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கோரி கிஷோர் விசாரணை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

பழைய நோட்டு

ஆனால் கோர்ட் பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ள கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தீர்ப்பு வழங்கவில்லை. 2017-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதிதான் விசாரணை நீதிமன்றம் அதற்கு அனுமதித்தது. ஆனால் கோர்ட் உத்தரவிட்ட பிறகும் பணம் போலீஸ் நிலையத்தில்தானே இருக்கிறது. தேவைப்படும்போது வாங்கிக்கொள்ளலாம் என்று கிஷோர் நினைத்தார். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிஷோர் தனது பணத்தை வாங்க போலீஸ் நிலையம் சென்றார். போலீஸார் தேடி எடுத்து கிஷோர் கொடுத்திருந்த பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தனர். அந்த பணத்தைப் பார்த்த கிஷோர் அதிர்ச்சியடைந்தார். பணம் அனைத்தும் பழைய செல்லாத நோட்டுகள். அவற்றை வாங்கிக்கொண்டு ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றுவதற்கு சென்ற போது ரிசர்வ் வங்கி மாற்றிக்கொடுக்க மறுத்துவிட்டது. உடனே இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கௌதம் பட்டேல், மாதவ் ஜாம்தார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் கிஷோரிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொடுக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது. ரிசர்வ் வங்கி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அதிதி பதக், `மத்திய நிதியமைச்சகம் 2017-ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி வெளியிட்ட அரசாணையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நோட்டுகளை கையகப்படுத்தி அதனை திரும்ப கொடுக்க கோர்ட் உத்தரவிட்டு இருந்தால், கோர்ட் உத்தரவை காட்டி பழைய நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம்' என்று குறிப்பிட்டு இருப்பதை சுட்டிக்காட்டினார். ரிசர்வ் வங்கி வழக்கறிஞரின் கருத்தை தொடர்ந்து கிஷோரின் 1.6 லட்சம் பழைய நோட்டுக்களை மாற்றிக்கொடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/Puz7Jae

Post a Comment

0 Comments