முல்லைப்பெரியாறு அணை கண்காணிப்புக்கு கேரள பொறியாளர் நியமனமா? எதிர்க்கும் தமிழக விவசாயிகள்!

தமிழக பகுதிகளில் இருந்து முல்லையாறு, பெரியாறு என ஆறுகளில் இருந்து கிடைக்கும் நீர்தான் கேரள பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையில் தேங்குகிறது. இந்த அணை தொடர்பாக 999 ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டு அணையின் பராமரிப்பு, கண்காணிப்பு தமிழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டு மழைகாலத்தின் போதும், அணையின் நீர்மட்டம் உயரும் தருவாயில் கேரள தரப்பில் இருப்பில் அணையில் 142 அடியை தேக்கவிடாமல் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அணை பலவீனமாக இருப்பதாகவும் இடிந்துவிழும் நிலையில் இருப்பதாகவும், இதனால் பல லட்ச மக்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

அணை

கடந்த ஆண்டு நவம்பரில் கேரள நீர்வளத்துறை அமைச்சர், பீர்மேடு எம்எல்ஏ, இடுக்கி மாவட்ட கலெக்டர் உள்பட 150 பேர் சென்று தண்ணீரைத் திறந்து முல்லைப்பெரியாறு அணையில் பின்பற்றப்பட்டுவந்த 125 ஆண்டுகால நடைமுறையை மீறினர். இதேபோல அணையின் நீர்பிடிப்பு பகுதி, அணையின் பாதுகாப்பு, படகு விடும் உரிமை, பராமரிப்பு வேலைகளை செய்தல் என பல்வேறு உரிமைகளை தமிழகம் இழந்தது. இதற்கிடையே எத்தனையோ முறை அணை பலமாக உள்ளது என நிரூபணம் ஆனபோதிலும், மீண்டும் அணை பாதுகாப்பு தொடர்பாக மறுஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் கண்காணிப்பு பணிக்காக தனியாக கேரள பொறியாளரை நியமனம் செய்யும் முயற்சியை கேரள அரசு எடுத்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அன்வர் பாலசிங்கம்

இது குறித்து பேசிய ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ``கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நீர்வளத் துறை அமைச்சர் ரோசி அகஸ்டின், `முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டிற்கு என்று தனி செயற்பொறியாளர் இருக்கிறார். ஆனால் கேரளாவுக்கு இல்லை. இதனால் அணையில் நீர் வரத்து, நீர் வெளியேற்றம் உள்ளிட்ட தகவல்களை தமிழகத்திடம் இருந்து கேட்டுப் பெற வேண்டிய தேவை இருக்கிறது. எனவே பெரியாறு அணைப்பகுதிக்குள் கேரள மாநில அரசு, தனி செயற்பொறியாளரை நியமிக்க வேண்டும்' எனக் கூறினார்.

இதையடுத்து தேனி மாவட்ட ஆட்சியரின் எவ்வித அனுமதியும் இன்றி, கேரளா அரசின் சார்பாக உச்சநீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக வாதாடும் வழக்கறிஞர் ஜெ.பி.குப்தா, கேரள மாநில நிலைக்குழு வழக்கறிஞர் பிரகாஷ், கேரள மாநில நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், இடுக்கி மாவட்ட நீர்வளத்துறை பொறியாளர் பிந்து, மற்றும் செயற்பொறியாளர் ஹரிகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், திடீரென வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரியாறு அணைக்கு வந்து, மெயின் அணைப் பகுதியையும், ஷட்டர் பகுதிகளையும் பார்வையிட்டார்கள்.

தமிழக பொறியாளர்கள் கேரள மாநில அரசுக்கு பராமரிப்பு பணிகள் தொடர்பாக விண்ணப்பித்திருப்பதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெ. பி.குப்தா, அணைப் பகுதிக்குள் வரவேண்டிய தேவை எங்கே வந்தது.

முல்லைப்பெரியாறு

தமிழக பொறியாளர்களின் வேண்டுகோளை ஏற்றுத்தான், அணைப்பகுதிக்குள் கேரள மாநில அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் வந்தார்களா, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெ. பி.குப்தா மற்றும் கேரள மாநில நிலைக்குழு வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர், அணைப் பகுதிக்குள் வந்த தகவலை யாருக்கு தெரிவித்தார்கள், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற உங்களது முடிவை, தேனி மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்திற்கோ எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததற்கான கடித நகல் இருக்கிறதா, கேரள மாநில நீர்ப்பாசனத்துறை தலைமை பொறியாளருக்கோ அல்லது அது சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கோ எழுதிய கடிதத்தின் நகல் இருக்கிறதா, அணைப் பகுதிக்குள் அத்துமீறி வந்து பார்வையிடும் கேரள மாநில அதிகாரிகளின் வருகை பதிவேடு பராமரிக்கப்படுகிறதா, டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை அணைப் பகுதிக்குள் வந்து சென்ற கேரள மாநில அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பட்டியல் வருகைப் பதிவேட்டில் பதிவாகி இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்த வேண்டும்'' என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/Kq3rzwT

Post a Comment

0 Comments