கேரள அரசு வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பதற்கும், நிலமும் வீடும் இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி குடியிருப்பு கட்டிக்கொடுக்கவும் லைஃப் மிஷன் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் வீடு கேட்டு கேரளத்தில் ஒன்பது லட்சம் மனுக்கள் குவிந்தன. அதில் ஐந்து லட்சம் மனுக்கள் வீடு பெறுவதற்கான தகுதி பெற்றுள்ளன. அதில், சுமார் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட மனுதாரர்கள் வீடும், நிலமும் இல்லாதவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு வீடு கட்ட மனமுவந்து நிலம் வழங்க வேண்டும் என கேரள அரசு வேண்டுகோள் விடுத்தது. அதற்காக 'மனதுடன் சிறிது நிலம்' என்ற திட்டத்தையும் அரசு அறிவித்தது. இதையடுத்து லைஃப் மிஷன் திட்டத்துக்கு பிரபல சினிமா இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் தனது பூர்வீக நிலத்தை வழங்கியுள்ளார். கேரள மாநிலம் பத்தணம்திட்டா மாவட்டம் அடூரைச் சேர்ந்தவர் சினிமா இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன். இவரது சினிமாக்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாவில் திரையிடப்படப்பட்டு பாராட்டு பெற்றவை. இவரது பூர்வீகமான அடூர் ஏரத் பஞ்சாயத்தில் குடும்ப சொத்தான 13.5 செண்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தைதான் வீடும், இடமும் இல்லாதவர்களுக்கு வீடுகட்டி கொடுப்பதற்காக இலவசமாக வழங்கியுள்ளார் அடூர் கோபால கிருஷ்ணன்.
தனது நிலத்தை ஏழைகளுக்கு வீடு கட்ட வழங்குவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் கோவிந்தன் மாஸ்டரிடம் தெரிவித்தார் அடூர் கோபாலகிருஷ்ணன். அதுமட்டுமல்லாது அந்த நிலத்தை ஏரத் பஞ்சாயத்து செயலாளர் பெயரில் எழுதியும் கொடுத்துள்ளார். இதுகுறித்து கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் கோவிந்தன் மாஸ்டர் கூறுகையில், "பிரபல சினிமா இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் என்னை போனில் அழைத்து 'மனதுடன் சிறிது நிலம்' திட்டத்தில் தானும் பங்கெடுப்பதாக கூறினார்.
இந்த திட்டத்துக்கு நிறைந்த மனதுடன் அடூர் கோபால கிருஷ்ணன் நிலம் வழங்கியுள்ளார். நாக்பூரில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணிபுரியும் அடூர் கோபாலகிருஷ்ணனின் மகள் அஸ்வதியிடம் இதைக் கூறியபோது அவரும் மகிழ்ச்சியடைந்தார். இதுபற்றி அடூர் கோபாலகிருஷ்ணன் என்னிடம் போனில் கூறியதும், ஆக்குளத்தில் உள்ள அவரது வீட்டுக்கு நான் நேரில் சென்று கேரள அரசு சார்பில் நன்றி தெரிவித்தேன்.
அடூர் ஏரத் பஞ்சாயத்தில் தூவயூரில் 13.5 செண்ட் நிலத்தை அடூர் கோபாலகிருஷ்ணன் வழங்கியுள்ளார். உலக சினிமாவில் மலையாளத்தை அடையாளப்படுத்திய அடூர் கோபாலகிருஷ்ணனின் இந்த செயல் அரசுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. சினிமா துறையிலும், வெளியிலும் உள்ள நல்ல மனசுகளால் இரண்டரை லட்சத்துக்கும் மேல் நிலம் இல்லாத மக்களுக்கு தலைசாய்க்க ஒரு வீடு கட்டிக்கொடுக்கும் அரசின் திட்டம் வெற்றிபெறும்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/hQ8AzbM
0 Comments