லதா மங்கேஷ்கர்: 80 ஆண்டுகள் இசைப் பயணம், 36 மொழிகளில் பாடல்கள்; இந்தியாவின் நைட்டிங்கேல்!

இந்தியாவின் பிரபல பின்னணி பாடகியாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 11ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது உடல் நிலை தேறி வந்தார். அவருக்கு பொருத்தப்பட்டு இருந்த செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. ஆனால் திடீரென நேற்று மீண்டும் அவரது உடல்நிலை மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வந்தனர். லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லே நேரில் வந்து பார்த்து சென்றார். இன்று காலையில் சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சையின் போது பல்வேறு உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் காலை 8.12 மணிக்கு லதா மங்கேஷ்கர் மரணம் அடைந்ததாக டாக்டர் சந்தானம் தெரிவித்தார்.

லதா மங்கேஷ்கர்

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட அனைத்து முக்கிய விருதுகளையும் வாங்கிய லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்களும், அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களின் அஞ்சலிக்காக லதா மங்கேஷ்கர் உடல் தாதர் சிவாஜி பார்க்கிற்கு எடுத்துச்செல்லப்படுகிறது. பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து மாலையில் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். இந்தியாவின் நைட்டிங்கேலாக கருதப்படும் லதா மங்கேஷ்கர் 1929ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி பிறந்தார். லதா மங்கேஷ்கர் தனது தந்தையிடம் இளம் வயதிலேயே இசை கற்றுக்கொண்டார். கடந்த 1942ம் ஆண்டு முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் திடீரென தந்தை இறந்ததால் அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்குள்ளானது.

லதா மங்கேஷ்கர்

அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது. தந்தை இறந்த பிறகு மும்பை வந்த லதா மங்கேஷ்கர் 80 ஆண்டுகளாக இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். 1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரஹ்மான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியுள்ளார்.

36 பிராந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடியிருக்கும் லதா மங்கேஷ்கர் திருமணமே செய்து கொள்ளாமல் இசைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தமிழில் இளையராஜா இசையில் கமல்ஹாசன் நடித்த சத்யா படத்தில் 'வளையோசை' பாடல் மிகப் பிரபலமானது. லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி கோவிந்த் உட்பட பலரும் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளனர். 1974-ம் ஆண்டு அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த லதா மங்கேஷ்கருக்கு அவரின் 90வது வயதில் இந்திய மகள் விருதை கொடுத்து மத்திய அரசு கவுரவித்தது. லதா மங்கேஷ்கரின் மரணம் இசைத்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/LkfnQyx

Post a Comment

0 Comments