உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக பா.ஜ.க மத்திய அமைச்சரை களத்தில் இறக்கி இருக்கிறது. பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சென்று நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில், கடந்த 26 ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக கோரக்பூர் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
முஜாபர்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அருகில் ஷெட் அமைத்து கடந்த 26 ஆண்டுகளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் முன்னாள் ஆசிரியர் விஜய் சிங் ஊழலுக்கு எதிராகவும், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை மீட்கக் கோரியும் தர்ணா நடத்தி வருகிறார்.
ஆசிரியராக இருந்த விஜய் சிங் திடீரென 1996-ம் ஆண்டு தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு, ஊழல் மற்றும் நில மாஃபியாக்களுக்கு எதிராகப் போராட்டத்தை தொடங்கினார். கடந்த 26 ஆண்டுகளில் எந்த அரசும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து அரசு நிலத்தை மீட்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறும் விஜய், தற்போது தனது எதிர்ப்பை காட்ட உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். அதோடு சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவிற்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``கடந்த 26 ஆண்டுகளில் எந்தக்கட்சியும் ஊழல் மற்றும் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக தீவிரமாக இல்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். அனைத்து அரசியல் கட்சிகளுக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகிக்க இருக்கிறேன். நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கோரி மனு கொடுப்பதற்காக முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கச் சென்றேன். ஆனால், என்னை முதல்வரை சந்திக்க அனுமதிக்கவில்லை. எனது மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டனர். எனது மனுமீது இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேதான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன்" என்று தெரிவித்தார்.
Also Read: ``கடந்த 5 வருடங்களில் கலவரங்கள், பயங்கரவாதங்கள் இல்லாத முதல் மாநிலம் உ.பி!" - யோகி ஆதித்யநாத்
from தேசிய செய்திகள் https://ift.tt/Z7O5R3l
0 Comments