`அலிகரா... ஹரிகரா?!' - உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்!

``பேசாம நம்ம ரெண்டு பெரும் இங்கயே செட்டில் ஆயிடலாம் ப்ரோ”

அலிகர் ரயில் நிலையத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் பேட்டரி ரிக்க்ஷாவில் போகும் போது எங்கள் இருவரில் யார் இந்த வாக்கியத்தை சொன்னோம் என்று நினைவில்லை. ஆனால் நிச்சயம் இருவரின் எண்ண ஓட்டமும் அதுவாகவே இருந்தது.

நச்சினார்க்கினியன்: ``லவ் அட் பிரஸ்ட் சைட் ப்ரோ! அழகழகான பகட்டில்லாத குட்டிக் கட்டடங்கள், ரொம்ப இதமான ஒரு உணர்வு… அலிகர் கிட்ட நான் விழுந்துட்டேன்.”

பியர்சன்: ``பாருங்களேன் ப்ரோ, போற வழியில எல்லா ரோட்லயும் எதாவது ஒரு கட்டடம், `இது அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்துக்கு சொந்தம்னு’ போட்ருக்கு.”

ந.இனியன்: ``ஆமா. ஒரு நகரமே ஒரு பல்கலைக்கழகத்தோடு தன்னை ஏதோ ஒரு விதத்தில் இணைச்சுட்டு இருக்குறது ரொம்ப ஆச்சரியமா தான் இருக்கு!”

இருவரும் ‘சுங்கி’ என்று அழைக்கப்படும் அலிகர் பல்கலைக்கழகத்தின் பெரும் வாயிலில் வந்திறங்கினோம். ஒரு டீ குடிக்க போனபோது பேப்பர் பார்க்க கேட்டோம். இல்லை என்றார்கள். இந்த நகரத்தில் நாங்கள் இருந்த நான்கு நாள்களில் ஒரு நாளிதழ் விற்கும் கடையைக் கூட பார்க்க முடியவில்லை. `இந்த-இந்த இடத்துல லாம் பேப்பர் கிடைக்கும் பா’ என்று தகவலாகச் சொன்னார்களே தவிர நம் தமிழ்நாடு போல டீ கடை தோறும் பேப்பர் என்ற கலாசாரத்தை பார்க்கவே முடியவில்லை. இது இந்நகரத்தை பற்றிய ஒட்டுமொத்த மதிப்பீட்டிற்கு முக்கியமாகப்பட்டது.

முதலில் நாம் அலிகரைப் புரிந்துகொள்வோம்!

உத்திரபிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள அலிகர் மாவட்டமானது, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், கரும்பு விவசாயம் மற்றும் பூட்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்றது.

அலிகர் | உத்தரப்பிரதேசம்

அலிகர் மாவட்டத்தின் மக்கள் தொகையில் 60% க்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களில் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டவர்கள். கரும்பு, உருளைக்கிழங்கு போன்ற பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டமாக அலிகர் உள்ளது. நகரத்தை பொறுத்த வரை சிறு தொழிற்சாலைகளை நம்பியே மக்கள் வாழ்கிறார்கள்.

மொத்தம் ஏழு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய இந்த மாவட்டதில் கடந்த முறை அனைத்து தொகுதிகளிலும் பாஜக வென்றுள்ளது. தற்போது ஜாட் சமூகத்தை சேர்ந்த விவசாயிகள் அதிகம் வாழும் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தனது கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக் தல் கட்சிக்கு (ஆர்.எல்.டி) ஒதுக்கியுள்ளது. ஆக அலிகர் மாவட்டத்தை கைப்பற்ற சமாஜ்வாடி கட்சி கூட்டணிக்கும் பாஜகவிற்கும் கடும் போட்டி நிலவி வரும் நிலை பரவலாக காணப்படுகிறது.

அலிகர் | உத்தரப்பிரதேசம்

நாமிருக்கும் `அலிகர்’ பல்கலைக்கழக நகர் தொகுதியானது, கடந்த 2017 சட்டமன்ற தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் என தொடர்ந்து அலிகர் நகரில் அனைத்து தேர்தல்களிலும் பாரதிய ஜனதா கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சமாஜ்வாடி கட்சியானது அதிக இடங்களில் வென்றுள்ளது. இந்த வெற்றியின் தாக்கம் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதா? இந்தக் கேள்வி தான் தற்போது இந்த தொகுதியை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

அலிகர் | உத்தரப்பிரதேசம்

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நகரத் தொகுதியை பொறுத்தவரை பாஜகவின் எம்.எல்.ஏ சஞ்சீவ் ராஜா மீது நிலுவையில் உள்ள பழைய வழக்கின் காரணமாக போட்டியிட முடியாததால் அவரின் மனைவி முக்தா ராஜாவை களமிறங்கியுள்ளது பாஜக. சமாஜ்வாடி கட்சியின் சார்பாக முன்னாள் அமைச்சரும், பூட்டுத் தொழிற்சாலையின் அதிபதியான ஷபர் ஆலம் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் சார்பாக அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் சல்மான் இம்தியாஸ் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு மனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் அவர் மீதான பழைய வழக்கை காரணம் காட்டி மாவட்டத்திற்குள் வருவதற்கு தடை விதித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.

Also Read: உத்தர் அரசியல்: வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த சட்டம் ஒழுங்குச் சம்பவங்கள்| மினி தொடர்|பாகம் - 3

``தேர்தல் நேரத்தில் பழைய வழக்கை காரணம் காட்டி போடப்பட்ட தடை, பாஜக தூண்டுதலில் நடத்தப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நெருக்கடி கொடுப்பதற்காக நிகழ்த்தப்பட்ட செயல்” என அலிகர் பல்கலைக்கழக மாணவரும் கேரள காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவின் மாநில நிர்வாகியுமான வசீல் தெரிவித்தார்.

``காங்கிரஸ் தோல்வி பயத்தில் இருப்பதாகவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலிகர் மாவட்டத்திற்கு நிறைய வளர்ச்சித் திட்டங்களை செய்திருக்கிறார். அதுவே தேர்தல் வெற்றி வாய்ப்புகளை தங்களுக்கு பெற்றுக் கொடுக்கும் என்றும் இதுபோன்ற பழிவாங்கல் செயல்களில் ஈடுபட பாஜக-வுக்கு அவசியம் இல்லை” என்று இப்பகுதியைச் சேர்ந்த பாஜகவின் மூத்த நிர்வாகி சஞ்சய் கோயல் தெரிவித்தார்.

அலிகர் தொகுதியின் மக்கள் மனசு!

இத்தொகுதியில் பலதரப்பட்ட மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக, மார்கெட் பகுதி மற்றும் பொது இடங்களுக்கு சென்று கேட்டோம்.

அலிகரின் அமிர் நிஷான் மார்க்கெட்டில் ஜவுளி கடை நடத்தும் ராஜிவ் ஆதித்யா நம்மிடம் பேசிய போது, ``ஜிஎஸ்டியின் காரணமாக இரட்டிப்பாக வரி கட்டுகிறோம். இதனால் சிறு வியாபாரிகள் தான் பெருமளவில் பாதிக்கப்படுகிறோம்” என்று தெரிவித்தார். மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் கடைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய உதவித் தொகை தரக்கோரி அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் நிறைவேற்றாததால் அமிர் நிஷா பகுதியில் பல கடைகள் தற்போது வரை திறக்கப்படாமலேயே இருப்பதாக அவர் கவலை தெரிவித்தார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத் ரேஷன் பொருட்கள் அனைவருக்கும் வழங்குவதாக சொன்னாலும், திட்டமிட்டு இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் ரேஷன் பொருட்களை குறைவாக தருவதாக தனது துணிக்கடையில் அடுக்கி வைத்தவாறு முஹம்மது அயூப் தெரிவித்தார்.

செருப்புக்கடை வைத்திருக்கும் மொஹம்மது அன்வரோ, ``யோகிஜியின் ஆட்சியில் மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து கொடுத்ததால் தனது ஓட்டு யோகிக்கு தான்” என்று தெரிவித்தார்.

இந்தத் தொகுதியின் உள்ளார்ந்த பிரச்னைகளை புரிந்துகொள்ள சசிகாந்த் எனும் ஒரு சமூக செயற்பாட்டாளரை சந்தித்தோம். `அலிகரைப் பொறுத்த வரை தனது குடும்பம் உட்பட பல ஆயிரம் குடும்பங்கள் பூட்டு தொழில்கள் நசிந்ததால் பாதிக்கப்பட்டதாகவும், ஒரு காலத்தில் கான்பூர் உள்ளிட்ட உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் இருந்து இங்கு பணிக்கு வந்து வேலை செய்தார்கள், ஆனால் அரசின் தவறான கொள்கைகள் காரணமாக இந்தத் தொழிலே பாதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

நம்மிடம் பேசிய சில அலிகர் பல்கலைக்கழக மாணவர்கள், ``தேர்தலில் ஓட்டளிப்பது சாதியின் அடிப்படையிலோ அல்லது மத அடிப்படையிலோ இருக்கக் கூடாது மாறாக திட்டங்களின் அடிப்படையிலும் மக்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுத்து இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தனர்.

அலிகர் பல்கலைகழகம்

அதன் பின் ஓய்வு பெற்ற பேராசிரியரும் விவசாயிகளின் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவருமான அசோக் ப்ரகாஷிடம், பேசும்போது, ``இந்த ஒட்டுமொத்த பகுதி விவசாயிகளுக்கும் சத்தா மில் என்னும் கரும்பு ஆலை தான் வேலை தந்தது. ஆனால் கடந்த காலத்தில் அது மூடப்பட்டதும், விவசாயிகளுக்கு தரவேண்டிய பல நிலுவைத் தொகையை தராததும் ஒட்டுமொத்த கரும்பு விவசாயத்தையே இப்பிராந்தியத்தில் பாதித்துள்ளது” என்று நம்மிடம் தெரிவித்தார்.

அலிகர் | உத்தரப்பிரதேசம்
அலிகர் | உத்தரப்பிரதேசம்
அலிகர் | உத்தரப்பிரதேசம்
அலிகர் | உத்தரப்பிரதேசம்
அலிகர் | உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை வரும் பிப்ரவரி 10 முதல் ஐந்து கட்டங்களாக நிகழவுள்ளது. அலிகரோ முதல் கட்டமான 10 ஆம் தேதியே தனக்கான தேர்தலை சந்திக்கிறது.

தொழிலாளர்கள் பிரச்னை, கரும்பு விவசாயம் என்று என்ன சிக்கல்கள் இருந்தாலும் அலிகர் நகரின் பெயரை ஹரிகர் என்று மாற்றுவோம் என்ற ஆளும் பாஜக அரசின் “அலிகரா அரிகரா” என்ற கோஷம் தேர்தல் நேரத்தில் பல தரப்பிலும் புதிய தாக்கங்களை உருவாக்கலாம் என்பதே அரசியல் நோக்கர்களின் பார்வையாக உள்ளது.

2017- பாஜக வெற்றி

சஞ்சிவ் ராஜா - பா.ஜ.க

வாக்குகள்- 113,752

வாக்கு சதவிகிதம் -46.22%

சமாஜ்வாதி கட்சி

சபர் ஆலம்

வாக்குகள்-98,312

வாக்கு சதவிகிதம்- 39.95%

2012 -சமாஜ்வாதி கட்சி வெற்றி

சபர் ஆலம்- சமாஜ்வாதி கட்சி

வாக்குகள்- 68,291

வாக்கு சதவிகிதம்- 37%

அஷுதோஷ் வர்ஷ்னே- பாஜக

வாக்குகள்-45,205

வாக்கு சதவிகிதம்- 24%

2007-சமாஜ்வாதி கட்சி வெற்றி

சமீர் உல்லாஹ் - சமாஜ்வாதி கட்சி

வாக்குகள்- 44,541

வாக்கு சதவிகிதம்- 37%

சஞ்சிவ் ராஜா-பாஜக

வாக்குகள்-36,689

வாக்கு விகிதம் -30%

2002- இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி

விவேக் பன்சால்- இந்திய தேசிய காங்கிரஸ்

வாக்குகள்-47,801

வாக்கு சதவிகிதம்- 42%

தீபக் மிட்டல் - பாஜக

வாக்குகள்- 23,357

வாக்கு சதவிகிதம்- 20%



from தேசிய செய்திகள் https://ift.tt/7j3gYfItL

Post a Comment

0 Comments