உத்தர் அரசியல்: வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த சட்டம் ஒழுங்கு சம்பவங்கள்| மினி தொடர்|பாகம் - 3

சஞ்சய் காந்தியால் பறிபோன பதவி!

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்திருந்தது. அத்தகைய சூழலில், ஸ்தாபன காங்கிரஸ் என்று அறியப்பட்ட காங்கிரஸ் (ஓ) உடன் இணைந்து சத்யுக்த விதயக் தளம் (எஸ்.வி.டி) என்ற பெயரில் உருவாகியிருந்த ஒரு கூட்டமைப்பின் தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் புதிய ஆட்சி அமைந்தது. 1970-ம் ஆண்டு அக்டோபர் மாதம், டி.என்.சிங் என்கிற திரிபுவன் நாராயண் சிங் முதல்வராகப் பதவியேற்றார். அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டி.என்.சிங் தோற்றுப்போனார். அதனால், முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

டி.என்.சிங்

டி.என்.சிங்கைத் தொடர்ந்து, கமலாபதி திரிபாதி முதல்வரானார். அவர் 1973, ஜூன் வரை முதல்வராக இருந்தார். அப்போது மாகாண ஆயுதப்படைப் பிரிவில் (the Provincial Armed Constabulary) ஏற்பட்ட கலகம் காரணமாக, அவர் பதவி விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு, 1973-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றது.

குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு, 1973 நவம்பரில் உ.பி முதல்வராக ஹேமாவதி நந்தன் பகுகுணா பொறுப்பேற்றார். பின்னர், காங்கிரஸ் கட்சிக்குள் அளவற்ற அதிகாரம் பெற்றிருந்த இந்திரா காந்தியின் புதல்வர் சஞ்சய் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 1975 நவம்பரில் முதல்வர் பதவியிலிருந்து நந்தன் பகுகுணா விலகினார். அவருக்குப் பின், என்.டி.திவாரி முதல்வரானார்.

காங்கிரஸுக்கு எதிராக உருவான ஜனதா:

அந்தக் காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி சில ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தபோதிலும்கூட, வலுவான ஓர் அரசியல் இயக்கமாக அது தொடர்ந்தது. இந்நிலையில்தான், தேசிய அளவில் சில கட்சிகள் ஒன்றுகூடி, காங்கிரஸுக்கு எதிராக மிகப்பெரிய இயக்கத்தைத் தோற்றுவித்தன. ஜனதா கட்சி என்கிற ஒரு புதிய அரசியல் கட்சி உதயமானது.

1977 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது ஜனதா கட்சி. மொராஜி தேசாய் பிரதமரானார். அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் இருந்த மாநில அரசுகளையெல்லாம் ஜனதா அரசு கலைத்தது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தில் இருந்த என்.டி.திவாரி அரசும் கலைக்கப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் 352 இடங்களைப் பிடித்து மிகப்பெரிய வெற்றியை ஜனதா கட்சி பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 47 இடங்களில் ஜெயித்தது.

ராம் நரேஷ் யாதவ்

ஜனதா கட்சி 352 இடங்களைப் பிடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றபோதிலும், முதல்வரைத் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. முதல்வர் பதவிக்கு அடிதடி நடந்தது. அதனால், எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டது. வாக்கெடுப்பில், ஆஸம்கரைச் சேர்ந்த வழக்கறிஞரான ராம் நரேஷ் யாதவுக்கு ஆதரவாக 277 பேர் வாக்களித்தனர். அதையடுத்து, 1977-ம் ஆண்டு ஜூன் மாதம் ராம் நரேஷ் யாதவ் முதல்வரானார்.

பிறகு, ஒரு காவல்துறை வன்முறை சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால்,1979 பிப்ரவரியில் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ராம் நரேஷ் யாதவ் பதவி விலகியதால், பெனார்சி தாஸ் என்பவர் முதல்வரானார். 1980 பிப்ரவரி வரை, ஓராண்டு காலம் முதல்வராக அவர் இருந்தார். 1980 பிப்ரவரியில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரான பிறகு, உ.பி அரசு கலைக்கப்பட்டது.

உ.பி முதல்வராக வி.பி.சிங்!

1980-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. வி.பி.சிங் முதல்வரானார். இவரின் ஆட்சியில் போலி என்கவுன்டர் சம்பவங்கள் உள்பட சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஏராளமான புகார்கள் எழுந்தன. வி.பி.சிங் ஆட்சியின்போதுதான், இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பெஹ்மை படுகொலை சம்பவம் நிகழ்ந்தது. தன்னை பாலியல் வன்கொடுமை செய்த தாகூர் சமூகத்தினரைப் பழிவாங்குவதற்காக, கான்பூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பெஹ்மை என்ற கிராமத்தில் தாகூர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 20 ஆண்களை பூலான் தேவி சுட்டுக்கொன்றார். அந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உ.பி அரசியலில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது.

வி.பி.சிங்

1981-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நிகழ்ந்த பெஹ்மை படுகொலை சம்பவம் உ.பி-யில் அரசியல் மாற்றத்துக்கும் காரணமாக அமைந்தது. வி.பி.சிங்கின் சகோதரரான சந்திரசேகர் பிரதாப் சிங் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். அவரை, 1982-ம் ஆண்டு கொள்ளையர்கள் கொலை செய்தனர். அதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து வி.பி.சிங் பதவி விலகினார்.

வி.பி.சிங்கைத் தொடர்ந்து ஸ்ரீபதி மிஷ்ரா என்வர் முதல்வர் பதவிக்கு வந்தார். பிறகு, 1984 ஆகஸ்ட் மாதம் என்.டி.திவாரி முதல்வரானார். அடுத்து நடைபெற்ற தேர்தலில் திவாரி தலைமையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. ஆனால், வீர் பகதூர் சிங் என்பவருக்கு முதல்வராகும் வாய்ப்பை அளித்தார் ராஜீவ் காந்தி. 1985 செப்டம்பர் 24 முதல் 1988 ஜூன் 24 வரை வீர் பகதூர் சிங் முதல்வராக இருந்தார்.1988-ம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் முதல்வர் பதவியை என்.டி.திவாரி பிடித்தார்.

Also Read: உத்தர் அரசியல்: காங்கிரஸ் ஆட்சியில் உள்குத்து, வெளிக்குத்து அட்ராசிட்டிஸ் | மினி தொடர்|பாகம் - 2

வந்தார் முலாயம் சிங் யாதவ்!

1980-களில் செல்வாக்குமிக்க தலைவராக முலாயம் சிங் யாதவ் வளர்ந்தார். 1989-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முலாயம் சிங் யாதவின் அரசியல் செல்வாக்கை உறுதிசெய்தது. ஜனதா தளம், முதல்வராக முலாயம் சிங் யாதவை தேர்வுசெய்தது. முலாயம் அரசுக்கு பா.ஜ.க வெளியிலிருந்து ஆதரவு அளித்தது. மத்தியில் வி.பி.சிங் ஆட்சி நடைபெற்றது.

1990-ம் ஆண்டு அன்றைய பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி அயோத்தியை நோக்கி ரத யாத்திரை மேற்கொண்டார். ரத யாத்திரை பீகாருக்கு வந்தபோது, லாலு பிரசாத் யாதவ் அரசு அத்வானியை கைது செய்தது. அதையடுத்து, முலாயம் சிங் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை பா.ஜ.க வாபஸ் பெற்றது. ஆனாலும், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியில் தொடர்ந்தார் முலாயம் சிங் யாதவ்.

முலாயம் சிங் யாதவ்

மத்தியில் இருந்த வி.பி.சிங் அரசுக்கான ஆதரவையும் பா.ஜ.க வாபஸ் பெற்றது. அதையடுத்து, சந்திரசேகர் பிரதமரானார். ஒரு கட்டத்தில், இரு அரசுகளுக்குமான ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற்றது. அதனால், இரு அரசுகளும் கவிழ்ந்தன. அந்த அரசியல் சூழலில், ‘காங்கிரஸ் அல்லாத’, ‘பா.ஜ.க அல்லாத’ ஒரு வலிமையான தலைவராக உத்தரப்பிரதேசத்தில் உருவெடுத்தார் முலாயம் சிங் யாதவ். அதே காலக்கட்டத்தில், உத்தரப்பிரதேசத்தில் இன்னொரு சிங்கும் செல்வாக்கு மிகுந்த தலைவராக உருவெடுத்தார். அவர்தான் கல்யாண் சிங். இவரது ஆட்சியில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

(உத்தர் அரசியல்.... அலசுவோம்)



from தேசிய செய்திகள் https://ift.tt/Swth0vzlO

Post a Comment

0 Comments