லோக் ஆயுக்தா சட்டத்திருத்த மசோதா; கேரள அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!

பினராயி விஜயன் தலைமையிலான கேரள கம்யூனிஸ்ட் அரசு ஊழல் தடுப்பு ஆணையமான லோக் ஆயுக்தாவின் அறிவிப்பை நிராகரிக்க வழிவகுக்கும் சட்டத்திருத்தம் ஒன்றை பரிந்துரை செய்திருக்கிறது. லோக் ஆயுக்தாவின் தீர்ப்பை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ அரசுக்கு அதிகாரம் வழங்கும் அவசரச் சட்டத்தை பிறப்பிக்குமாறு ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. தற்போது, சட்டத்தின் 14-வது பிரிவின் கீழ், லோக் ஆயுக்தா உத்தரவிட்டால் ஒரு அரசு ஊழியர் உடனடியாக பணியிலிருந்து விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

லோக் ஆயுக்தா என்றால் என்ன?

லோக் ஆயுக்தா என்பது மாநில அளவில் அமைக்கப்பட்ட ஊழல் தடுப்பு ஆணையம் ஆகும். இது அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை விசாரிக்கும் ஒரு ஆணையம். பொதுமக்களின் குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதே இதன் நோக்கம். எந்த ஒரு அரசாங்க அதிகாரிக்கு எதிராகவும் ஊழல் அல்லது வேறு விதமான முறைகேடு போன்ற புகார்களுக்கு பொதுமக்கள் நேரடியாக லோக் ஆயுக்தாவை அணுகலாம்.

லோக் ஆயுக்தா

புகார்கள் மீதான விசாரணையை நடத்த, ஆளுநர் ஒரு லோக் ஆயுக்தா (ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி) மற்றும் இரண்டு உப லோக் ஆயுக்தாக்கள் (ஓய்வு பெற்ற அல்லது பணியாற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள்) முதல்வரின் ஆலோசனை மற்றும் சபாநாயகரின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்படுவார்கள்.

புகார் அளிக்கப்பட்ட ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் லோக் ஆயுக்தா ஆணையம் ஆளுநர் அல்லது முதல்வரிடம் குறிப்பிட்ட நபர் பணியில் இருக்கத் தகுதி அற்றவர் என அறிவிக்கும். இதை அரசும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

கேரள அரசு என்ன திருத்தம் மேற்கொள்ளவிருக்கிறது?

லோக் ஆயுக்தாவின் தீர்ப்பை ஏற்கவும் நிராகரிக்கவும் அரசுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் கேரள அரசால் முன்மொழியப்பட்ட இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் வழங்கும் படி ஆளுநருக்கு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. ஆனால், கேரள அரசின் சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

பினராயி விஜயன்

எதிர்ப்பு :

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.எல்.ஜலீல் மீது லோக் ஆயுக்தாவில் ஒரு புகார் பதியப்பட்டது. அவர் தன் உறவினர்களுக்கு சாதகமாக நடப்பதாக பதியப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு பதவி விலகினார். அதேபோல, தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது லோக் ஆயுக்தாவில் ஒரு பொது நல வழக்கு பதியப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கேரள அரசின் இந்த சட்டத்திருத்த நடவடிக்கை குற்றவாளிகள் தப்பிக்க வழிவகுக்கும் என அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ஊழலிலிருந்து தப்பிக்க ஒரு சட்டம்... - அட்டகத்தி லோக் ஆயுக்தா!



from தேசிய செய்திகள் https://ift.tt/oHAqb1h

Post a Comment

0 Comments