கேரள மாநிலம் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 3 நாள் ஆன குழந்தை திருடப்பட்டதாக கடந்த 6-ம் தேதி மாலை 3 மணி அளவில் காந்திநகர் காவல் நிலையத்துக்கு புகார் சென்றது. குழந்தையின் தாய் அஸ்வதியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். `டாக்டர் உடையில் வந்த பெண் ஒருவர் குழந்தைக்கு மஞ்சள் காமாலை தொற்று தென்படுவதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்க கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறி குழந்தையை கேட்டதாகாவும், டாக்டர் உடையில் இருந்ததால் குழந்தையை கொடுத்ததாகவும் தெரிவித்தார். ஆனால் சிறிது நேரம் ஆனதால் குழந்தை எங்கே என மருத்துவர்களிடம் கேட்டபோதுதான் வந்தது டாக்டர் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்துதான் குழந்தை திருடப்பட்ட சம்பவமே தெரியவந்தது’ என அஸ்வதி தெரிவித்தார். இதையடுத்து கண்காணிப்பு கேமராக்களை பரிசோதித்தபோது ஒரு பெண் டாக்டர் உடையில் குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறுவது தெரியவந்தது.
இது ஒருபுறம் இருக்க கோட்டயம் மருத்துவ கல்லூரி அருகே உள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்த திருவல்லாவைச் சேர்ந்த நீதுராஜ் (33) என்ற பெண், ஓட்டல் ரிசப்ஷனுக்கு போன் செய்து, ``மூன்று நாள் ஆன என் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க கொச்சி அமிர்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் உடனடியாக ஒரு டாக்சி வேண்டும்” எனக் கேட்டுள்ளார். ஓட்டல் ரிசப்ஷனில் இருந்து டாக்ஸி டிரைவர் அலெக்ஸ் என்பவருக்கு போன் செய்து குழந்தையுடன் கொச்சி செல்ல வேண்டும் என்ற விபரத்தை கூறியுள்ளனர். உடனே உஷாரான அலெக்ஸ், கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் பிறந்து மூன்று நாள் ஆன குழந்தை கடத்தப்பட்ட விவரத்தை கூறியுள்ளார். உடனே ஓட்டல் ஊழியர்களும் பரபரப்பாகி விஷயத்தை மேலாளரிடம் கூறியுள்ளனர். ஓட்டல் மேலாளர் உடனே காந்திநகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் வேகமாகச் சென்று குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
குழந்தை காணாமல் போன ஒரு மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அனைவரும் மகிழ்ந்தனர். அதே சமயம் `குழந்தையை கடத்தியது ஏன்?’ என போலீஸார் விசாரித்தபோது நீதுராஜ் சொன்ன கதை போலீசாரையே தலைசுற்ற வைத்தது.
இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ``திருவல்லாவைச் சேர்ந்த நீதுராஜிக்கு திருமணம் ஆகி, 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவர் துபாயில் வேலை செய்துவருகிறார். சில வருடங்களுக்கு முன் டிக் டாக்கில் அதிக நேரம் செலவிட்ட நீதுராஜிக்கு கொச்சி களமசேரியைச் சேர்ந்த இப்ராஹிம் பாதுஷா(35) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு, அது திருமணம் தாண்டிய உறவாக மாறியது.
நிரந்த வேலை இல்லாத இப்ராஹிம் பாதுஷா கார் ஓட்டுவது போன்ற வேலைகளுக்குச் செல்வாராம். இதனால் அடிக்கடி நீது ராஜிடம் இருந்து பணம் வாங்கியிருக்கிறார். இதுவரை சுமார் முப்பது லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை வாங்கியுளாராம். இப்ராஹிம் பாதுஷாவின் பெற்றோரிடமும் நீதுராஜ் அறிமுகம் ஆகி பேசிவந்துள்ளார். இதற்கிடையே கர்ப்பம் ஆன நீதுராஜ் அதுபற்றி இப்ராஹிம் பாதுஷாவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், எப்படியோ கரு கலைந்திருக்கிறது. அந்த தகவலை இப்ராஹிம் பாதுஷா தரப்புக்கு சொல்லாமல் மறைத்துள்ளார் நீதுராஜ்.
இந்த சமயத்தில்தான் இப்ராஹிம் பாதுஷா வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியான நீதுராஜ் கோட்டயம் மெடிக்கல் காலேஜில் இருந்து குழந்தை ஒன்றை திருடி அதை தனக்கும், இப்ராஹிம் பாதுஷாவுக்கும் பிறந்த குழந்தை எனக்கூறி திருமணத்தை தடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக கடந்த 4-ம் தேதி கோட்டயம் மெடிக்கல் காலேஜ் அருகேயே ஓட்டலில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார். மெடிக்கல் ஸ்டோரில் இருந்து கோட் போன்றவற்றை வாங்கி, டாக்டர்போல வேடமிட்டு, மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் வார்டுக்குச் சென்றுள்ளார். அங்கு முதல் வார்டில் இருந்த அஸ்வதியின் பிறந்து மூன்று நாள் ஆன குழந்தையை திருடியுள்ளார். ஓட்டல் அறைக்குச் சென்றதும் குழந்தையுடன் செல்பி எடுத்து இப்ராஹிம் பாதுஷாவுக்கு அனுப்பிக் கொடுத்து, `இது நம்ம குழந்தை' என கூறியுள்ளார். மேலும் இப்ராஹிமின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி குழந்தையையும் காண்பித்திருக்கிறார்.
சிகிச்சைக்காக கோட்டயத்துக்கு வந்ததாகவும், உடனே கொச்சி திரும்பி வருகிறேன் என இப்ராஹிமின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அதன்பிறகு டாக்ஸி ஏற்பாடு செய்யும் சமயத்தில் வசமாக சிக்கிக்கொண்டார்.
இதுகுறித்து கோட்டயம் எஸ்.பி ஷில்பா கூறுகையில், "திருடிய குழந்தையை தன் குழந்தை போல வளர்க்க முடிவு செய்ததாக நீது கூறினார். குழந்தை கடத்தல் வழக்கில் நீது கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தலில் இப்ராஹிம் பாதுஷாவுக்கு பங்கு இல்லை. ஆனால், நீதுவிடம் பணம் மோசடி செய்த வழக்கில் இப்ராஹிம் பாதுஷா கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.
திருமணம் தாண்டிய உறவால், ஆண் நண்பரின் திருமணத்தை தடுத்து நிறுத்த குழந்தையை திருடிய இளம் பெண்ணின் செயல் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
from தேசிய செய்திகள் https://ift.tt/3f5GAH3
0 Comments