முஸ்லிம் பெண்களை இழுவுபடுத்திய `புல்லி பாய்' ஆப்; முக்கியக் குற்றவாளி அசாமில் கைது!

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் அவர்களின் புகைப்படங்களை `புல்லி பாய்' என்ற ஆப்பில் வெளியிட்டு, ஏலம் விடப்படுவதாக சமீபத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் மும்பை மற்றும் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். மும்பை சைபர் பிரிவு போலீஸார் விரைந்து செயல்பட்டு பெங்களூருவில் படித்துக்கொண்டிருந்த விஷால் குமார் என்ற பொறியியல் மாணவரை இது தொடர்பாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதன் தொடர்ச்சியாக, உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வேதா சிங் என்ற ஏழை, இளம்பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் பணத்திற்காக மொபைல் ஆப்பை பண்ணிக்கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இரண்டு பேரையும் போலீஸார் மும்பைக்கு கொண்டு வந்து விசாரித்துக்கொண்டிருக்கின்றனர்.

புல்லி பாயியில் வெளியான போட்டோ

Also Read: `புல்லி பாய்' ஆப்பில் முஸ்லிம் பெண்களை இழிவு செய்த சம்பவம்; பெங்களூருவில் 21 வயது மாணவர் கைது!

இதே போன்று மாயக் ராவல் (21) என்பவரையும் கைது செய்துள்ளனர் போலீஸார். இது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் அளித்த பேட்டியில், `` `புல்லி பாய்' விவகாரத்தில் இது வரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொண்டு இருப்பவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவார்கள். இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

ஆப்பை உருவாக்கியவர்கள் சீக்கிய அமைப்பின் பெயர்களைப் பயன்படுத்த முயற்சி செய்துள்ளனர். எதற்காக அவை பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த ஆப்பை பின் தொடர்பவர்கள் குறித்த விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இவ்வழக்கில் விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீஸார், `` `புல்லி பாய்' ஆப்பை உருவாக்கியதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் நீரஜ் பிஸ்னோய் என்பவரை அசாமில் கைது செய்துள்ளனர். `கிட்ஹப்' என்ற தளத்தில் `புல்லி பாய்' என்ற ஆப்பை நீரஜ் பிஸ்னோய் என்பவர்தான் உருவாக்கியதாக டெல்லி போலீஸார் தெரிவித்தனர்.

Woman (Representational Image)

Also Read: ஆப் மூலம் இழிவாகச் சித்திரிக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள்; வழக்கு பதிவு செய்த போலீஸார்; என்ன நடந்தது?

`புல்லி பாய்' ஆப்பில், தனது ட்விட்டர் கணக்கை பயன்படுத்தித்தான் நீரஜ் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். நீரஜ், போபாலில் உள்ள வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில் பி.டெக் படித்து வருவதாகவும் டெல்லி டி.ஜி.பி மல்கோத்ரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் அளித்த பேட்டியில், நீரஜ் அசாம் மாநிலம் திகம்பர் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டு டெல்லி அழைத்து வரப்படுகிறார்" என்று தெரிவித்தார்.

நீரஜ் டெல்லி கொண்டு வரப்பட்ட பிறகு இதில் மேற்கொண்டு எத்தனை பேருக்குத் தொடர்பு இருக்கிறது என்று தெரிய வரும்.



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments