கொரோனா கட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ஆட்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த கட்டுப்பாடுகளை மீறி சண்டையில் வெற்றி பெற்ற எருதுக்க அதன் உரிமையாளர் மிகவும் பிரமாண்டமான முறையில் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்.
மும்பை அருகில் உள்ள பிவாண்டி அருகில் இருக்கும் வடுநவ்கர் என்ற கிராமத்தில் வசிப்பவர் கேதன் பல்ராம் பாட்டீல்(25). இவர் தனது வீட்டில் 10 வயதான எருமைமாடு ஒன்றை போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வளர்த்து வருகிறார். அதற்கு ராஜா என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். சமீபத்தில் வஜ்ரேஷ்வரி என்ற இடத்தில் எருமை மாடுகளிடையே எருது சண்டை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதில் ராஜா கலந்து கொண்டு வெற்றி பெற்றது. இதனால் ராஜாவின் உரிமையாளர் கேதன் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். எனவே தனது ராஜாவின் பிறந்தநாளை மிகவும் விமரிசையாக கொண்டாட முடிவு செய்தார். இதற்காக தனது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரையும் விழாவிற்கு கேதன் அழைத்திருந்தார். பிறந்தநாள் விழாவிற்கு 500 பேர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ராஜாவிற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். அதோடு விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து விழாவிற்கு ஏற்பாடு செய்த கேதன் கூறுகையில், ``ராஜாவை 10 ஆண்டுகளுக்கு முன்பு 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கி வந்தோம். அதிலிருந்து அவனை நன்றாக கவனித்துக்கொள்கிறேன். எனது முழு நேரத்தையும் ராஜாவை கவனித்துக்கொள்ள செலவிடுகிறேன். ராஜாவுக்கு பிவாண்டியில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்கள் பிறந்தநாளுக்கு கேக் வாங்கி வந்திருந்தனர். விழாவில் 16 கேக் வெட்டப்பட்டது” என்று தெரிவித்தார். எருது காளை போட்டிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் சட்டவிரோதமாக போட்டிகள் நடத்தபட்டுக்கொண்டுதான் இருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/3HIp5J6
0 Comments