உத்தரப் பிரதேச பாரதிய ஜனதா கட்சியிலிருந்து மூன்று அமைச்சர்களை தனது சமாஜ்வாடி கட்சிக்கு இழுத்தார் அகிலேஷ் யாதவ். உ.பி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் நிலையில், இரண்டு கட்சிகளுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக பலர் தாவுகின்றனர். இந்த சூழலில் அகிலேஷ் குடும்பத்திலிருந்தே ஒருவரைத் தங்கள் கட்சிக்கு இழுத்திருக்கிறது பா.ஜ.க. அவர், அபர்ணா யாதவ். அகிலேஷ் யாதவின் தம்பி ப்ரதீக் யாதவ்வின் மனைவி. இந்த அபர்ணா யார் என்று பார்ப்பதற்கு முன்பாக அகிலேஷ் குடும்பம் பற்றி பார்த்துவிடலாம். தன் தந்தை முலாயம் சிங் யாதவின் கரம் பற்றி அரசியலுக்கு வந்தவர் அகிலேஷ் யாதவ். மூன்று முறை உ.பி முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவின் முதல் மனைவி மாலதி தேவி. இவர்களின் ஒரே மகன், அகிலேஷ். பிரசவத்தின்போது ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, நினைவிழந்து படுத்த படுக்கையாகிவிட்டார் மாலதி தேவி. 30 ஆண்டுகள் அப்படியே இருந்து 2003-ம் ஆண்டு மறைந்தார்.
இதற்கிடையே சாதனா குப்தா என்ற பெண்மணியுடன் முலாயமுக்கு உறவு ஏற்பட்டது. இந்த சாதனா குப்தா ஏற்கெனவே சந்திர பிரகாஷ் குப்தா என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ப்ரதீக் குப்தா என்ற மகன் இருந்தார். முலாயமுக்கும் சாதனாவுக்கும் உறவு ஏற்பட்டதும், சந்திர பிரகாஷ் குப்தா தன் மனைவியிடமிருந்து விலகிவிட்டார். ரகசிய உறவாக இருந்த இதனை ஒருகட்டத்தில் நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைமை முலாயம் சிங்கிற்கு ஏற்பட்டது. அதன்பின் ப்ரதீக் குப்தாவை தனது வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். ப்ரதீக் யாதவ் என்று அவர் பெயர் மாறியது. அகிலேஷும் அவரைத் தன் தம்பியாக ஏற்றுக்கொண்டார். முலாயம் குடும்ப சொத்துகளில் சரி பங்கு அவருக்குக் கிடைத்தது. இந்த பிரதீக் யாதவ் 2011-ம் ஆண்டு அபர்ணாவை திருமணம் செய்தார். அண்ணன் அகிலேஷ் போல அரசியல் ஆர்வம் கொண்டவர் அல்ல ப்ரதீக். அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பெரிய தொழிலதிபராக மாறியிருக்கிறார்.
ஆனால், அபர்ணா அப்படி இல்லை. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபர்ணாவின் தந்தை அரவிந்த்சிங் ஒரு பத்திரிகையாளராக இருந்தவர். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் போலவே தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆதித்யநாத்துக்கு நெருக்கமானவர். அபர்ணாவின் தந்தை அரவிந்த்சிங், உ.பி தகவல் ஆணையராக யோகி ஆதித்யநாத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். அபர்ணாவின் அம்மா லக்னோ மாநகராட்சியில் பணிபுரிகிறார்.
பிரிட்டன் சென்று மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் படித்தவரான அபர்ணா, சிறந்த பாடகியும் கூட! கடந்த 2017 தேர்தலில் லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டார். ஆனால், தோற்றுப் போனார். அந்தத் தேர்தலில் அகிலேஷ் ஆட்சியை இழந்தார். அவரை வீழ்த்தி முதல்வரான யோகி ஆதித்யநாத்தை அபர்ணா நேரில் சென்று வாழ்த்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'அவர் எல்லோருக்குமான முதல்வர்' என்று காரணம் சொன்னார் அபர்ணா. பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு தொண்டு நிறுவனம் நடத்தும் அபர்ணா, பசு பாதுகாப்பு இல்லம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர் அழைப்பை ஏற்று இந்த இல்லத்துக்கு உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் போய்வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு 11 லட்ச ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார் அபர்ணா. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் குடும்பத்து மருமகள் என்றாலும், அடிக்கடி பிரதமர் நரேந்திர மோடியையும், உ.பி முதல்வர் யோகி ஆதித்ய நாத்தையும் புகழ்ந்து பேசுவது அபர்ணாவின் வழக்கம். மோடியுடன் ஒருமுறை செல்ஃபி எடுத்துக்கொண்டு, 'நான் மோடியின் ரசிகை' என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். இதேபோல அகிலேஷை விமர்சனம் செய்தும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
உ.பி பா.ஜ.க அரசு அபர்ணாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. இவ்வளவு காலம் வெளியில் இருந்தபடி பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பேசிவந்த அபர்ணா, இப்போது முறைப்படி உறுப்பினர் ஆகியிருக்கிறார்.
தான் முன்பு தோற்ற லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட விரும்புகிறார் அபர்ணா. காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ரீட்டா பகுகுணா ஜோஷி கடந்த தேர்தலின்போது பா.ஜ.க-வுக்குத் தாவி இங்கு ஜெயித்தார். அவர் இம்முறை தன் மகனுக்காக சீட் கேட்கிறார். முன்னாள் காங்கிரஸ்காரருக்கு சீட்டா, முன்னாள் சமாஜ்வாடி கட்சிக்காரருக்கு சீட்டா என்பதை பா.ஜ.க முடிவு செய்யும். அகிலேஷுடன் அபர்ணாவுக்குக் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது அரசியல் களத்தில் மட்டுமே இருக்கிறது. அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவும் அபர்ணாவும் நெருங்கிய தோழி போல பழகுகிறார்கள். இவர் வீட்டுக்கு அவரும், அவர் வீட்டுக்கு இவரும் அவ்வப்போது போகிறார்கள். குடும்ப நிகழ்வுகளில் ஒன்றாக இணைந்து பங்கேற்கிறார்கள்.
from தேசிய செய்திகள் https://ift.tt/3A9FRON
0 Comments