உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாகச் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுவாமி பிரசாத் மவுரியா, தரம்சிங் சானி, தாரா சிங் சவுகான் ஆகிய மூன்று அமைச்சர்களும், சில சட்டப்பேரவை உறுப்பினர்களும் அகிலேஷ் யாதவ் உடன் இணைந்து கொண்டனர்.
இதனால் உத்தரப் பிரதேசத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அகிலேஷ் யாதவுக்கு ஆதரவாகத் தேசிய கட்சிகளான திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஒழித்துவிட வேண்டும் என்ற கருத்துடன் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
உத்தரபிரதேச தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் துணைத் தலைவர் கிரண்மோய் நந்தா தெரிவித்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``உத்தரபிரதேசத்தில் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிட மாட்டார். வாரணாசியில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி கலந்துகொண்டு உரையாற்றுவார்கள். ஆனால் அந்த கூட்டத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார். மறுபக்கம் உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்துள்ளார். பா.ஜ.க அமைச்சர்கள் சமாஜ்வாடி பக்கம் தாவி கொண்டிருக்கும் நிலையில், அகிலேஷ் யாதவ் குடும்பத்தில் இருந்து ஒருவர் பா.ஜ.க பக்கம் தாவி இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
Also Read: உ.பி தேர்தல்: பாஜக-வில் இணைந்த முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா! - சமாஜ்வாடிக்கு பதிலடி?
from தேசிய செய்திகள் https://ift.tt/3FEDNiP
0 Comments