வாவ சுரேஷ்: பலமாக கடித்த பாம்பு; விடாமல் பிடித்த `பாம்பு பிடி மன்னன்’ கவலைக்கிடம்! - அதிர்ச்சி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் வாவ சுரேஷ். இவர் வன உயிரின ஆர்வலராக செயல்பட்டு வருகிறார். பாம்புகள் மீது அதீத பாசம் கொண்டவர். வழக்கமாக வீடுகளுக்கு பாம்பு புகுந்துவிட்டால் வனத்துறைக்கோ, தீயணைப்புத் துறைக்கோ போன் செய்வார்கள். ஆனால் கேரளத்தில் பாம்பை கண்டால் உடனே வாவ சுரேஷை அழைப்பார்கள். இவர் இதுவரை சுமார் ஐம்பதாயிரம் பாம்புகளை பிடித்து வனத்துறை மூலம் காடுகளில் விட்டுள்ளார். அவர் பிடித்ததில் 200-க்கும் மேற்பட்ட ராஜநாக பாம்புகளும் அடங்கும். பாம்புகளை பிடிக்க எந்தவித கருவியும் இல்லாமல் வெறும் கைகளால் பிடித்துவிடுவார். எவ்வளவுபெரிய வீரியம் கொண்ட பாம்பாக இருந்தாலும் வாவ சுரேஷின் கைகளில் அடங்கி, அவர் சொல்படி கேட்கும். அந்த அளவுக்கு பாம்புகளை கையாளுவதில் வல்லவர் வாவ சுரேஷ். வாவ சுரேஷ் பாம்பு பிடிக்கும் ஸ்டைலை பார்க்க ஊரே ஒன்று கூடும். அந்த அளவுக்கு பிரபலமானவர்.

தொடையில் கடித்த பாம்பு

இந்நிலையில் கோட்டயம் மாவட்டத்தில் சங்ஙனாச்சேரி அருகே உள்ள குறிச்சி பகுதியில் நாக பாம்பு ஒன்று ஊருக்குள் சுற்றி திரிவதாக வாவ சுரேசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை 3 மணியளவில் அங்கு சென்றவர் பாம்பை தேடினார். பாம்பு ஒரு கருங்கல் காம்பவுண்ட் சுவர் இடுக்கில் புகுந்தது. காம்பவுண்டை உடைத்தபோது சுமார் 7 அடி நீளமுள்ள நாக பாம்பு வெளியே வந்தது. பாம்பின் வாலை பிடித்த வாவ சுரேஷ் அதை ஒரு டப்பாவில் அடைக்க முயன்றார். பாம்பின் சீற்றம் காரணமாக முடியாமல் போகவே பிளாஸ்டிக் சாக்கில் அடைக்கும் முயற்சியில் இறங்கினார்.

பிளாஸ்டிக் சாக்கினுள் மூன்றுமுறை உள்ளே சென்ற பாம்பு உடனடியாக வெளியே வந்தது. ஆனாலும் விடாமல் பாம்பை சாக்குப்பைக்குள் அடைக்க முயன்ற சமயத்தில் திடீரென வாவ சுரேசின் வலது கால் தொடையில் பாம்பு பலமாக கடித்து பிடித்துக்கொண்டது. பாம்பை பலமாக இழுத்து கீழேபோட்ட சுரேஷ் கடிப்பட்ட இடத்தை நன்றாக அழுத்தி ரத்தத்தை வெளியேற்றினார். அப்போது பாம்பு மீண்டும் கல் சுவருக்குள் செல்ல முயன்றது. அந்த பாம்பை மீண்டும் பிடித்து ஒரு டப்பாவுக்குள் அடைத்த, வாவ சுரேஷ் அங்கேயே மயக்க நிலைக்குச் சென்றார்.

பாம்பு பிடிக்கும் வாவ சுரேஷ்

பாம்பு பிடிப்பதை வேடிக்கை பார்க்க கூடி நின்ற பொதுமக்கள் வாவ சுரேசை மீட்டு கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரின் உடல்நிலை மோசம் அடைந்ததால் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதய துடிப்பு சீராக இருப்பதாகவும், மூளையிலும் பாதிப்பு பெரிதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. பாம்பு கடித்திருப்ப்பதால் 48 மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாவ சுரேசுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும் எனவும், இது சம்பந்தமாக கோட்டயம் மெடிக்கல் காலேஜ் சூப்பிரண்டிடம் பேசியுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் போத்தன்கோட்டில் வைத்து வாவ சுரேஷ் வாகன விபத்தில் சிக்கினார். அப்போது அவரின் தலையில் அடிபட்டதால் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சிபெற்றுவிட்டு வீடுதிரும்பியவர் மீண்டும் பாம்பு பிடிக்க இறங்கிவிட்டார்.

பாம்பை சாக்கில் அடைக்கும் முயற்சியில் வாவ சுரேஷ்

கோட்டயத்தில் பாம்பு பிடிக்கும் போது வாவ சுரேசை பாம்பு கடித்த சம்பவத்தை பொதுமக்கள் சிலர் மொபைல் போனில் பதிவு செய்திருந்தனர். அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் பாம்பு ஆர்வலரான வாவ சுரேஷ் நலமடைய வேண்டி சமூக வலைத்தளங்களில் பலர் வேண்டுதலையும் முன்வைக்கின்றனர். பாம்புபிடி மன்னன் வாவ சுரேசை பாம்பு கடித்த சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/CpzFR7S4W

Post a Comment

0 Comments