உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு பத்து நாள்களே இருக்கும் நிலையில், அங்கு தேர்தல் களத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது. பூர்வாஞ்சல் எனப்படும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் களம் தங்களுக்கு சாதமாக இருப்பதாகவும், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தங்களுக்கு ஆதரவு குறைவாக இருப்பதாக பா.ஜ.க-வினர் கருதுகின்றனர். அரசியல் பார்வையாளர்களின் கருத்தும் அதுவாகவே இருக்கிறது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தீவிரமான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றிய மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மேற்கு உ.பி-யில் பரவலாக இருக்கும் ஜாட் சமூகத்தினரே, அந்த விவசாயிகள் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினர். அவர்கள் மத்தியில் பா.ஜ.க மீது கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அந்த எதிர்ப்பு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற அச்சம் பா.ஜ.க-வுக்கு இருக்கிறது.
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் செல்வாக்கு வகிக்கும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியுடன் (ஆர்.எல்.டி) சமாஜ்வாடி கட்சி கூட்டணி வைத்துள்ளது. 2017 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்த ஆர்.எல்.டி., தற்போது சமாஜ்வாடியுடன் சேர்ந்திருப்பதால் பா.ஜ.க-வின் பலம் குறைந்துள்ளது. மேலும், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் பரவலாக இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் பெரும்பாலும் சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இப்படியான சூழலில், ஜாட் சமூகத்தினர் மத்தியில் பா.ஜ.க மீது இருக்கும் அதிருப்தியைத் தணிப்பதற்கான வேலைகளில் பா.ஜ.க-வினர் ஈடுபட்டுவருகிறார்கள். இதற்காக, காப் பஞ்சாயத்து தலைவர்களை அவர்கள் சந்தித்து வருகிறார்கள். பா.ஜ.க-வைச் சேர்ந்த முசாபர்நகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சய் பல்யான், பாரதிய கிசான் யூனியன் தலைவரான நரேஷ் திகைத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நரேஷ் தியாகத்தின் சகோதரரான ராகேஷ் திகைத் தான், பாரதிய கிசான் யூனியனின் முகமாக இருப்பவர். மேற்கு உ.பி-யில் நடந்த விவசாயிகள் போராட்டத்துக்கு இவர்தான் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 14-ம் தேதி இதே பகுதியில் வேறு 58 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெறவிருக்கிறது. இந்த 116 தொகுதிகளிலும் ஜாட் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். எனவேதான், இந்தப் பகுதியில் வெற்றியைக் குறிவைத்து பா.ஜ.க-வினர் பல்வேறு வேலைகளைச் செய்துவருகிறார்கள்.
ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவரான ஜெயந்த் சௌத்ரியின் தாத்தாவான சௌத்ரி சரண் சிங் 1967-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியபோது, அவருக்கு ஜன சங்கம் எப்படியெல்லாம் ஆதரவு அளித்தது என்பதையும், அந்த ஆதரவின் காரணமாக அவர் உ.பி-யின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் என்பதையும் பா.ஜ.க-வினர் இப்போது நினைவுக்கூர்ந்து பேசுகிறார்கள்.
ஜாட், குஜ்ஜார், தலித் சமூகங்களின் தலைவர்களைச் சந்தித்து பா.ஜ.க-வினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க-வின் தலைமை தேர்தல் வியூக வகுப்பாளருமான அமித் ஷா சமீபத்தில் ஜாட் தலைவர்களைச் சந்தித்தார். வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் ஜாட் சமூகத்தினர் மத்தியில் பா.ஜ.க மீதுள்ள அதிருப்தியை இந்த சந்திப்பு போக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பா.ஜ.க-வுடனான கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று மறுத்திருக்கிறார் ஜெயந்த் சௌத்ரி. தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுக்கு ராஷ்டிரிய லோக் தளம் ஆதரவு அளிக்கும் என்ற கருத்து பா.ஜ.க தரப்பிலிருந்து பரப்பப்படும் நிலையில், அதெற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று ஜெயந்த் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். மேலும், `மேற்கு உ.பி-யில் வந்து ஜாட் தலைவர்களை அமித் ஷா சந்தித்திருக்கலாமே. இங்கு வருவதற்கு அவர்களுக்கு துணிவு இல்லை. அதனால், ஜாட் தலைவர்களை டெல்லிக்கு வரச்சொல்லி மேற்கு டெல்லி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சந்தித்திருக்கிறார்கள்’ என்று சமாஜ்வாடி கட்சியினர் விமர்சிக்கிறார்கள்.
பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் நரேஷ்-வுடனான பா.ஜ.க-வினரின் சந்திப்பு, ஜாட் சமூகத்தினரின் கோபத்தைத் தணிக்கவில்லை என்று தெரிகிறது. மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக காட்டமான சில கருத்துகளை ராகேஷ் திகைத் தற்போது தெரிவித்துள்ளார். ``மத்திய அரசு உத்தரவாதம் அளித்ததால்தான் விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக உத்தரவாதப்படுத்துவது தொடர்பான வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இது விவசாயிகளுக்கு செய்த துரோகம்” என்று அவர் கூறியிருக்கிறார்.
Also Read: உத்தர் அரசியல்: காங்கிரஸ் ஆட்சியில் உள்குத்து, வெளிக்குத்து அட்ராசிட்டிஸ் | மினி தொடர்|பாகம் - 2
தற்போது மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. பா.ஜ.க வேட்பாளர்களுக்கு கருப்புக்கொடி காட்டப்படுவதாகவும், எதிர்ப்பு காரணமாக பல கிராமங்களுக்குள் அவர்களால் நுழைய முடியவில்லை என்றும் செய்திகள் வருகின்றன.
சிவல்காஸ் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான மணிந்தர் பால் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, அவருக்கு பாதுகாப்புக்காக சென்ற வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டன. அதில், ஏழு வாகனங்கள் சேதடைந்தன என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக 85 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அலிகாரில் பா.ஜ.க வேட்பாளர் ஜெய்வீர் சிங்குக்கு எதிராக மக்கள் கோஷமிட்டதால், உடனடியாக அவர் அங்கிருந்து புறப்பட்டார். இப்படியாக கடந்த சில நாட்களில் பல இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு எதிரான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
எதிரணியினரே இதற்கு காரணம் என்றும், அவர்கள் தான் திட்டமிட்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் பா.ஜ.க தரப்பு குற்றம்சாட்டுகிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் இயல்பான கோபத்தின் வெளிப்பாடு இது என்று பாரதிய கிசான் சங்கமும் ஆர்.டி.டி-யும் கூறுகின்றன. இன்னும் 10 நாள்களே இருக்கும் நிலையில், மேற்கு உ.பி மக்களின் அதிருப்தியையும் கோபத்தையும் பா.ஜ.க-வால் தணிக்க முடியுமா?
from தேசிய செய்திகள் https://ift.tt/thQAakI4Y
0 Comments