கேரளாவின் பிரபல செய்தி சேனலான மீடியா ஒன் டிவியின் ஒளிபரப்புக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தடை விதித்திருப்பது அந்த மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது மதப்பாகுபாடு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மத்திய அரசின் நேரடித் தாக்குதல் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
மீடியா ஒன் சேனல்:
மீடியா ஒன்(Media One) செய்தி சேனல், மத்யமம் பிராட்காஸ்டிங் (Madhyamam Broadcasting) என்ற மீடியா நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த சேனலின் ஆசிரியராக பிரமோத் ராமன் ( Pramod Raman) என்பவர் செயல்பட்டுவருகிறார். மேலும், மீடியா ஒன் சேனலின் முக்கியப் பங்குதாரர்களாக ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் கேரளப் பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
மத்திய அரசின் தடை:
இந்த நிலையில், அரசியல் விவாத நிகழ்ச்சிகளுக்குப் பெயர்போன மீடியா ஒன் சேனலின் ஒளிபரப்புக்கு, மத்திய அரசு நேற்று மதியம் 1:00 மணியளவில் தடை விதித்தது. அதாவது, மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சேனல்களின் பட்டியலிலிருந்து மீடியா ஒன் டிவி சேனலின் பெயர் நீக்கப்பட்டது. இதனால், அதன் ஒளிபரப்பு சேவை தடைபட்டது.
கடந்த ஆண்டு முதலே மீடியா ஒன் டிவி சார்பில், சேனல் உரிமத்தை புதுபிப்பதற்கான விண்ணப்பம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் மீடியா ஒன் சேனலுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்கவில்லை என்று கூறி சேனலின் உரிமத்தை புதுபிக்க ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சேனல் ஆசிரியர் அறிக்கை:
இந்த நிலையில், மீடியா ஒன் சேனல் தடை குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் சேனல் ஆசிரியர் பிரமோத் ராமன், ``பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால், இன்னும் எங்களுக்கு முறையான விவரங்கள் கிடைக்கவில்லை. மத்திய அரசு முறையான விவரங்களை எங்களுக்கு கொடுக்கவில்லை என்பதே உண்மை. தடைக்கு எதிராக நாங்கள் சட்டபூர்வ நடவடிக்கையை மேற்கொள்வோம். அந்த செயல்முறைகள் முடிந்தபின்பு சேனலின் ஒளிபரப்பு சேவை தொடங்கும். எப்போதும் நீதி வெல்லும் என்ற நம்பிக்கையில் சேனலின் ஒளிபரப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம்!" எனத் தெரிவித்திருந்தார்.
அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனம்:
மீடியா ஒன் சேனலுக்கு மத்திய அரசு விதித்த தடைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன், ``கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்பது அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளில் ஒரு பகுதி! பொதுவெளியில் பலதரப்பட்ட கருத்துகள் இருக்க வேண்டும், இல்லையென்றால் ஜனநாயகம் ஆபத்தை நோக்கிச் சென்றுவிடும். நமது சமுதாயம், இதுபோன்ற ஆபத்து குறித்து விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டும். செய்தி சேனலின் செயல்பாடு ஏன் தடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. கடுமையான பிரச்னைகள் இருந்தால், அவை தனித்தனியாக ஆராயப்பட்டு அரசியலமைப்பு வழிகளில் தீர்க்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் 19-வது பிரிவு மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அடக்குமுறையை ஒருபோதும் நம் நாட்டில் அனுமதிக்கக்கூடாது!" என தன் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், இந்தச் சம்பவத்தை `ஜனநாயக விரோதம்' என்று குறிப்பிட்டு, ``மத்திய பா.ஜ.க அரசாங்கம், சங்பரிவாரங்களுக்கு விருப்பமில்லாத செய்திகளின் மீதும், அதை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் மீதும் தனது சகிப்புத்தன்மையின்மையை வெளிப்படுத்துகிறது" என விமர்சனம் செய்திருக்கிறார்.
மேலும், சபாநாயகர் எம்.பி.ராஜேஷ், ``மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்திய ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டது" என காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
அதேபோல, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ, முனீர், ``மீடியா ஒன் உரிமத்தை ரத்து செய்யும் தகவல்-ஒலிபரப்பு அமைச்சகத்தின் முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கைகளை விமர்சனக் குரல்களை ஒடுக்குவது போல் உள்ளது. எனவே, தடையை விரைவில் நீக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
Also Read: நவம்பர் 12 - பொது சேவை ஒலிபரப்பு தினம்; இதன் முக்கியத்துவம் என்ன?
தடையை எதிர்த்து வழக்கு:
இந்த நிலையில், மத்திய அரசின் தடையை எதிர்த்து, மீடியா ஒன் சேனலின் தாய் நிறுவனமான மத்யமம் பிராட்கேஸ்டிங், கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதி என்.நாகரேஷ் (N. Nagaresh), ``மீடியா ஒன் சேனல் மீது மத்திய அரசு விதித்திருக்கும் தடையை ரத்துசெய்து உத்தரவிட்டார். மேலும், மீடியா ஒன் சேனல் தொடர்ந்து இரண்டு நாள்களுக்கு ஒளிபரப்பவும் அனுமதி வழங்கியதோடு, வழக்கு விசாரணையை மேலும் ஒருநாள் ஒத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
தடைக்கான பின்னணி:
மீடியா ஒன் சேனலுக்கு, மத்திய அரசு தடை விதித்திருக்கும் சம்பவம் முதல்முறை நடப்பது அல்ல; ஏற்கெனவே 2020-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து, கேரளாவைச் சேர்ந்த மீடியா ஒன், ஏசியாநெட் ஆகிய சேனல்கள் ஒருதலைப்பட்சமாக செய்தி ஒளிபரப்பியதாகவும், மத்திய அரசின் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி, 48 மணி நேரத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது.
குறிப்பாக, மீடியா ஒன் டிவி செய்திகள் சி.ஏ.ஏ ஆதரவாளர்களின் கலவரத்தின்மீது மட்டுமே கவனம் செலுத்தியதாகவும், இரண்டு சேனல் செய்தியாளர்களின் வார்த்தைகள் இரு சமுதாயத்திடையேயான நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இருந்ததாகவும்கூறி தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பில் தடைக்கான காரணம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முறையான விளக்கம் எதுவும் அளிக்கப்படாமல் மீண்டும் மீடியா ஒன் சேனல்மீது மத்திய அரசு தடை விதித்திருப்பதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: தமிழகம், கேரளா, மேற்கு வங்க ஊர்திகளின் நிராகரிப்புக்குப் பின்னால்..! - விரிவான `அரசியல்’ பார்வை!
from தேசிய செய்திகள் https://ift.tt/g7sG0vEMc
0 Comments