உத்தரப்பிரதேச தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு சூடு பிடித்துள்ளது. பாஜகவின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இருந்து அமைச்சர்கள் சுவாமி பிரசாத் மவுரியா, தரம்சிங் சைனி, தரம் சிங் சவுகான் ஆகியோர் சமாஜ்வாடி கட்சிக்கு சென்றுள்ளனர். இது தவிர பாஜகவை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்களும் சமாஜ்வாடியில் சேர்ந்துள்ளனர். இதனால் சமாஜ்வாடி கட்சியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. சமீப காலமாக முலாயம் சிங் யாதவ் மருமகள் அபர்ணா யாதவ் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வந்தார். அதோடு அயோத்தியில் ராமர் கோயில் கட்டவும் ரூ.11 லட்சம் வழங்கினார்.
இதையடுத்து முலாயம் சிங் யாதவ் இளைய மகன் பிரதிக்(அகிலேஷ் யாதவ்-ன் சகோதரர்) மனைவி அபர்ணா யாதவை பாஜக-வுக்கு இழுக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு இருந்தது. அவர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அபர்ணா யாதவ் பாஜகவில் இணைவார் என்று அக்கட்சியின் பாஜகவின் நிர்வாகி அருண் யாதவ் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். சொன்னபடி புதன் காலை 10 மணிக்கு அபர்ணா யாதவ் லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
இது சமாஜ்வாடி கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அபர்ணா யாதவ் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் லக்னோவில் சமாஜ்வாடி சார்பாக போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் தோல்வியை தழுவினார். தேர்தல் தோல்வியை தொடர்ந்து சட்டமேலவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று சமாஜ்வாடி தரப்பில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி சட்டமேலவை உறுப்பினர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் சமாஜ்வாடி தலைமை மீது அபர்ணா சமீப காலமாக அதிருப்தியில் இருந்து வந்தார். தற்போது பாஜக சார்பாக லக்னோவில் ஒரு தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
அபர்ணா யாதவ் பெண்களின் வளர்ச்சிக்காக தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதோடு, பசு மாடுகளுக்காக கோசாலை ஒன்றையும் நடத்தி வருகிறார். அரசியலில் முதுகலைப்பட்டம் பெற்ற அபர்ணா தனது கல்லூரி படிப்பை இங்கிலாந்தில் முடித்துள்ளார். உத்ராகண்ட்டை பூர்வீகமாக கொண்டவர் அபர்ணா என்பது குறிப்பிடதக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/3FIua2u
0 Comments