ஆந்திராவின் முன்னாள் பி.ஜே.பி மாநிலத் தலைவர், கண்ணா லட்சுமிநாராயணா. அவர் மருமகள் ஶ்ரீலட்சுமி கீர்த்தி தொடர்ந்த குடும்ப வன்முறை வழக்கில், அவரும், அவர் மகன், மனைவியும் பாதிக்கப்பட்ட மருமகளுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, விஜயவாடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், மருமகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் காவல்துறையை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பிரிக்கப்படாத ஆந்திராவில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இரண்டு முறை அமைச்சராக இருந்தவர் கண்ணா லட்சுமிநாராயணா. குண்டூர் மேயராகவும் இருந்தார். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது, பி.ஜே.பி கட்சியில் சேர்ந்த அவர், 2018-ல் ஆந்திர மாநில பி.ஜே.பி தலைவராக நியமிக்கப்பட்டார்.
கண்ணா லக்ஷ்மிநாராயணாவின் மருமகள் கீர்த்தி, தன் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினரால் தான் குடும்ப வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் நீதிமன்றத்தில் தனக்கான பாதுகாப்பு, மற்றும் பண இழப்பீடு கோரினார்.
விஜயவாடா முதலாவது கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றம், கண்ணா லக்ஷ்மிநாராயணா, அவரின் மனைவி கண்ணா விஜயலட்சுமி, மகன் கண்ணா நாகராஜு ஆகியோரின் வீட்டில் கீர்த்தி மற்றும் அவரின் மகளுக்குத் தங்குமிடம் வழங்கவும், தவறினால் மாதம் ரூ.50,000 வழங்கவும் உத்தரவிட்டது.
கண்ணா நாகராஜுக்கும் கீர்த்திக்கும் 2006-ம் ஆண்டு காதல் திருமணம் முடிந்தது. அவர்களுக்கு 2013-ல் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கீர்த்தி தன் கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் மீது குடும்ப வன்முறை வழக்குத் தொடர்ந்தார்.
Also Read: வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடியதால் மணப்பெண்ணை அறைந்த மாப்பிள்ளை; முறைமாமனுடன் நடந்த திருமணம்!
தன் மாமியார் தன்னை துன்புறுத்தியதாகவும், தன் பெற்றோரைப் பார்க்க அனுமதிக்காததாகவும், தன் கணவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகவும், அதைப் பற்றிக் கேட்டபோது 2015-ம் ஆண்டு தன் கணவர் தன்னை ஒருமுறை அடித்ததாகவும், அதிலிருந்து தன்னைப் பிரித்துவைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார். குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு, வசிப்பிடம், சிகிச்சை செலவு, இழப்பீடு வழங்கக் கோரினார்.
விஜயவாடா நீதிமன்றம், கண்ணா லக்ஷ்மிநாராயணா மற்றும் அவர் குடும்பத்தினர், கீர்த்திக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், தங்குமிட செலவுகள் வழங்கவும், மேலும் கீர்த்தியின் மகள் சிகிச்சைக்காக 50,000 ரூபாயை வழங்கவும் உத்தரவிட்டது. மூன்று மாதங்களுக்குள் தொகையை வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், தவறினால் 12% வட்டி செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
- வைஷ்ணவி
from தேசிய செய்திகள் https://ift.tt/33GQVHb
0 Comments