மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ளது தலுபுரா கிராமம். இந்த கிராமத்தில் ஒரு வினோதமான வழக்கம் உள்ளது. குரங்குகள் இறந்தால் அவற்றிற்கு மனிதர்களைப் போலவே ஈமச்சடங்கு செய்து வழியனுப்பி வைப்பர். கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி அன்று இறந்த லங்கூர் வகை குரங்கு ஒன்றிற்கு கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி 30-ம் தேதி அன்று இறுதி சடங்கு நடத்தினர். அவர்களின் பாரம்பரிய முறைப்படி பாடல்கள் பாடிக் கொண்டே குரங்கின் சடலத்தை எடுத்துக்கொண்டு இறுதி ஊர்வலம் சென்றுள்ளனர். குரங்கிற்கு ஈமச்சடங்கு செய்வதற்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த ஓர் சிங் என்பவர் இந்து முறைப்படி தலையில் மொட்டை அடித்துக் கொண்டார். மேலும், குரங்கின் ஆன்மா சாந்தியடைய வேண்டி இறுதிச் சடங்குகளை தொடர்ந்து மக்கள் பணம் சேகரித்து வரவேற்பு தாள்கள் அச்சிட்டு, 1500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு விருந்து ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விருந்தில் பங்கேற்ற மக்கள் பந்தலுக்கு கீழ் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கிராம தலைவர் அர்ஜுன் சிங் சவுகான் நேற்று பி.டி.ஐ அளித்த பேட்டியில்,"எங்கள் ஊரில் குரங்குகள் இறந்தால் அவற்றிற்கு மனிதர்களைப் போலவே ஊரே ஒன்று கூடி ஈமச்சடங்கு நடத்துவது வழக்கம். நாங்கள் குரங்குகளை அனுமனின் அவதாரமாக பார்க்கிறோம்" என்றார்.
மேலும், இந்த குரங்கு அந்த கிராம மக்களால் வளர்க்கப்படவில்லை என்றும்; அடிக்கடி கிராமத்திற்கு வந்து செல்லும். அவ்வாறு தான் இருபத்தி ஒன்பதாம் தேதி அன்று குளிரால் நடுங்கி உடல்நிலை மோசமுற்று குரங்கு வந்ததாகவும், மருத்துவமனை கொண்டு சென்ற சிறிது நேரத்தில் குரங்கின் உயிர் பிரிந்ததாகவும் அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஒமிகிரான் தொற்று பெருமளவில் பரவி வரும் இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மக்கள் ஒன்றுகூடியதற்காக மத்திய பிரதேச போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த கிராமத்தைச் சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கிராமவாசிகள் பலர் போலீஸுக்கு பயந்து தலைமறைவாகி உள்ளனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/3nf2GLK
0 Comments