உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க அரசின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக பதவி வகித்துவந்த பிரசாத் மவுரியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அகிலேஷ் யாதவ் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அந்த மாநிலத்தில் ஆளுங்கட்சியின் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான பிரசாத் மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தான் அகிலேஷ் யாதவின் கட்சியில் இணைந்திருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், அவருடன் ரோஷன் லால் வர்மா, பகவதி சாகர், வினய் சாக்யா, பிரிஜேஷ் குமார் பிரஜபதி ஆகிய 4 எம்.எல்.ஏ-க்களும் பா.ஜ.க-விலிருந்து விலகி அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் இணைந்திருக்கின்றனர்.
இது தொடர்பாக பிரசாத் மவுரியா பா.ஜ.க தலைமைக்கு எழுதியிருக்கும் ராஜினாமா கடிதத்தில், ``முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரநிதித்துவம் அளிக்காததாலேயே பதவி விலகுகிறேன். மேலும், தற்போது அகிலேஷ் யாதவின் கட்சியில் இணைந்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அவர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், ``என்னுடைய இந்த முடிவானது உ.பி தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பா.ஜ.க நன்கு அறியும்" என்றார்.
பிரசாத் மவுரியாவின் அதிரடி முடிவை வரவேற்கும் விதமாக அகிலேஷ் யாதவ் அவரை கட்சிக்குள் வரவேற்பதாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். ஆளுங்கட்சி அமைச்சர் உட்பட 5 பேர் கட்சி தாவியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
- அர்ச்சுணன்
from தேசிய செய்திகள் https://ift.tt/3FiyhlV
0 Comments