மகாத்மா காந்தி குறித்து அவதூறுப் பேச்சு; இந்து மதத்துறவி கைது!

மகாராஷ்டிராவின் அகோலாவை அடுத்த சிவாஜி நகரில் வசித்து வந்தவர் அபிஜித் சரக் என்ற காளிச்சரண் மஹாராஜ். இந்து மதத்துறவியான இவர் ராய்பூரில் அண்மையில் பேசிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. ராய்பூரில் கடந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் இந்து மதக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய காளிச்சரண் மஹாராஜ், மகாத்மா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாகவும், காந்தியைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே குறித்துப் புகழ்ந்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

காளிச்சரண் மஹாராஜ்

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதையடுத்து, காளிச்சரண் மஹாராஜின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், மகாத்மா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதற்காக ராய்பூர் போலீஸார் காளிச்சரண் மஹாராஜ் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இன்று காலை 4 மணியளவில், மத்தியப் பிரதேச மாநிலம் பாகேஸ்வர் தாம் பகுதியிலிருந்த காளிச்சரண் மஹாராஜை ராய்பூர் போலீஸார் மத்தியப் பிரதேச போலீஸாரின் உதவியுடன் கைது செய்தனர்.

கைது

அதைத் தொடர்ந்து, இன்று மாலை காளிசரண் மஹாராஜை போலீஸார் ராய்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்து மதத்துறவியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், ``காந்தியைக் அவதூறாகப் பேசி, சமூகத்தில் விஷத்தைப் பரப்பி, தங்கள் நோக்கத்தில் வெற்றிபெறலாம் என நினைத்தால் அது சாத்தியப்படாத ஒன்று" எனக் கூறியிருக்கிறார்.

Also Read: மகாராஷ்டிரா: 250 நாய்க்குட்டிகளைக் கொன்ற குரங்குகள் - மிருகங்களுக்கும் பழிவாங்கும் குணம் இருக்கிறதா?



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments