சர்ச்சையான கருத்துகளைப் பேசி நெட்டிசன்களிடம் சிக்கிக் கொள்வதை பல்வேறு அரசியல் தலைவர்களும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி ஜனார்தன் மிஸ்ரா, `ரூ.15 லட்சத்துக்கு மேல் ஊழல் செய்தவர்களைப் பற்றி மட்டும் என்னிடம் புகாரளியுங்கள்' என்று பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய ஜனார்தன் மிஸ்ரா, ``கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்கள் பலரும் ஊழல் செய்துவருவதாக மக்கள் என்னிடம் புகாரளிக்கிறார்கள். அப்படிப் புகாரளிப்பவர்களிடம், `ரூ. 15 லட்சம் வரை ஊழல் செய்திருந்தால் என்னிடம் வராதீர்கள்; அதற்கு மேல் ஊழல் செய்திருந்தால் மட்டுமே என்னிடம் புகாரளியுங்கள்' என்று விளையாட்டாகச் சொல்லுவேன். காரணம், பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட ரூ.7 லட்சம் செலவாகும். அடுத்த தேர்தலில் போட்டியிட இன்னொரு 7 லட்சம் ரூபாய் தேவைப்படும். அதிகரித்து வரும் பணவீக்கத்தால் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் செலவாகலாம். அதனால், 15 லட்சத்துக்கு மேல் ஊழல் செய்தால் மட்டும் புகாரளியுங்கள். இதுதான் இன்றைய சூழ்நிலை'' என்று பேசியிருந்தார். இவ்வாறு ஜனார்தன் மிஸ்ரா பேசியது குறித்த வீடியா சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Also Read: `பரதநாட்டியம்தானேம்மா...' டு `என்னது வள்ளுவரா..?' - திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி உளறுவது ஏன்?!
``கிராம பஞ்சாயத்தில் ஊழல் செய்வது குறித்து விளையாட்டாகப் பேசி, ஊழலை நியாயப்படுத்துகிறார் ஜனார்தன் மிஸ்ரா. கிராமங்களின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் ஊழலை நாட்டின் ஆளுங்கட்சியான பா.ஜ.க-வின் எம்.பி-யே ஆதரித்து பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என ஜனார்தன் மிஸ்ராவுக்கு எதிராகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. மேலும், பல்வேறு தரப்பினரும் ஜனார்தன் மிஸ்ராவின் பேச்சுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.
from தேசிய செய்திகள்
0 Comments