கேரள மாநிலம் திருவனந்தபுரம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லாலன் சைமன் (51). இவரது வீட்டில் மகளின் அறையில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து கையில் கத்தியுடன் அங்கு சென்றிருக்கிறார். மகளின் அறைக்கதவு உள்பக்கமாகப் பூட்டியிருந்ததால், கதவை உடைத்துவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். அங்கு ஒரு வாலிபர் நிற்பதைப் பார்த்து லாலன் சைமன் அதிர்ச்சியடைந்தார். அவரைப் பார்த்ததும் அந்த வாலிபர் பாத்ரூமுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றிருக்கிறார். ஆனால் லாலன் சைமன் வேகமாகச் சென்று அந்த வாலிபரைக் கத்தியால் குத்தியிருக்கிறார். அதில், அந்த வாலிபர் ரத்த வெள்ளத்தில் சரிந்ததும், அருகில் உள்ள பேட்டை காவல்நிலையத்துக்குச் சென்ற லாலன் சைமன், ``என் வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டான். அவனை நான் கத்தியால் குத்திவிட்டேன்" எனக்கூறியிருக்கிறார். போலீஸார் விரைந்து லாலன் சைமனின் வீட்டுக்குச் சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அந்த வாலிபர் இறந்தார்.
இதுபற்றி போலீஸார் நடத்திய விசாரணையில், லாலன் சைமன் கத்தியால் குத்தியதில் இறந்த வாலிபர் அனீஷ் ஜார்ஜ் (19) எனத் தெரியவந்தது. லாலன் சைமனின் வீட்டிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது அனீஷின் வீடு. அனீஷ் ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் ஒரு கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்துவந்திருக்கிறார். இதையடுத்து அனீஷின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவர் இறந்த தகவலைத் தெரிவித்தனர். தன் மகன் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கிறான் என நினைத்த அனீஷின் தந்தை ஜார்ஜ், தாய் டோலி, சகோதரர் அனூப் ஆகியோர் கதறி அழுதனர்.
அனீஷ் பல நாள்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். பின்னர் உடல் நலம் தேறி வந்த நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டார் அனீஷ். இந்த கொலை வழக்கு குறித்த விசாரித்த போலீஸார், லாலன் சைமன் தெரிந்தேதான் அனீஷ் ஜார்ஜைக் குத்தி கொலை செய்ததாகத் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``லாலன் சைமனின் பிளஸ் 1 படிக்கும் மகளும் அனீஷும் பழகி வந்திருக்கின்றனர். இது அந்தப் பகுதியினர் யாருக்கும் தெரியாது. அனீஷ் மற்றும் அவர் குடும்பத்தினரை லாலன் சைமனுக்கு ஏற்கெனவே தெரியும். லாலன் சைமனின் வீட்டுக்கு அவர் மகளைச் சந்திக்க அனீஷ் அதிகாலையில் அங்கு சென்றிருக்கிறார். அனீஷ் எனத் தெரிந்த பிறகுதான் லாலன் சைமன் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். பின்னர் காவல் நிலையத்துக்கு வந்து திருடன் என நினைத்துக் குத்தியதாக நாடகமாடியிருக்கிறார். இது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர். மகளைச் சந்திக்க வீட்டுக்கு வந்த வாலிபரைக் கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையின் செயல் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: கேரளா: ``என் சாவுக்கு யாரும் காரணமில்லை!'' - தற்கொலை செய்துகொண்ட ஆளுநரின் கார் டிரைவர்
from தேசிய செய்திகள்
0 Comments