கேரளாவின் சில்வர்லைன் திட்டம்: `4 மணிநேரத்தில் 532 கி.மீ. தூர பயணம்!’ - எதிர்ப்புக்கு என்ன காரணம்?

சில்வர்லைன் திட்டம்... ஏன்? எதற்கு?

ரூ.63,941 கோடி செலவில் 532 கி.மீ. தூரம் மாநிலத்தின் இரு முனைகளுக்கு இடையேயான பயண நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைக்கும் திட்டமே சில்வர்லைன் திட்டம். கொச்சி, திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களுடன் இந்த வழித்தடத்தை இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கேரள இரயில் மேம்பாட்டுக் கழகம் (கே-ரயில்), இரயில்வே அமைச்சகம் மற்றும் கேரள அரசு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இந்தத் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. திட்டத்திற்கான காலக்கெடு 2025-ம் ஆண்டு ஆகும். இந்த கட்டுமானத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், இத்திட்டம் முடிவடைந்தால் குறைந்தது 11,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் கூறியிருக்கிறார்.

சில்வர்லைன் திட்டம்

சில்வர்லைன் திட்டத்தின் தற்போதைய நிலை:

சில்வர்லைன் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு தொடங்கியுள்ளது. கையகப்படுத்த வேண்டிய 1,383 ஹெக்டேரில், 1,198 ஹெக்டேர் தனியார் நிலமாக இருக்கும். அரசின் மத்திய முதலீட்டுப் பிரிவான கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திடம் (KIIFB) இருந்து ரூ.2,100 கோடி பெறுவதற்கான நிர்வாக அனுமதிக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்ட கையகப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, உள்ளூர் வருவாய்த்துறை மற்றும் கே-ரயில் அதிகாரிகள் களத்தில் இறங்கி, நிலம் வரையறுத்து, எல்லைக் கற்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திட்டத்திற்கு எழும் எதிர்ப்புகள்:

பொதுமக்களும் சூழலியல் ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலத்தை கையகப்படுத்துவதற்கு முன்பு மாநில அரசு தங்களுக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியதாக உள்ளூர்வாசிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ள மனைகளின் சர்வே எண்கள் குறித்த அறிவிப்புகளை உள்ளூர் வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது. ஆனால் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவோ அல்லது அவர்களின் அச்சத்தைப் போக்க அரசு தரப்பில் வேறு எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்.

இதனிடையே, அரசியல் கட்சிகளும், K-Rail SilverLine Viruddha Janakeeya Samiti போன்ற குடிமக்கள் அமைப்புகளும் தனித்தனியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

ரயில் பயணம்

கேரளத்தை சேர்ந்த 17 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்து, மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பப்பட்ட மனுவில், இந்த திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என்றும் 30,000 குடும்பங்கள் இடம்பெயர்வதற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. சமிதி மற்றும் பசுமை ஆர்வலர்கள், சில்வர்லைன் விலைமதிப்பற்ற சதுப்பு நிலங்கள், நெல் வயல்கள் மற்றும் மலைகள் வழியாக செல்வதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குற்றம் சாட்டுகின்றனர். இரயில் பாதை அமைக்கும்போது இருபுறமும் தடுப்புகள் கட்டப்படும். இது மழை நீர் வடிகாலை பாதிக்கும். சூழலியல் நிபுணர்களின் மன்றமான கேரள பரிஸ்திதி ஐக்கிய வேதி, திட்டத்தைக் கைவிட்டு, நிலையான தீர்வுகளை ஆராயுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/3EDXdUs

Post a Comment

0 Comments