ஆள்மாற்றி ரெய்டு நடத்திய அதிகாரிகள்; `சமாஜ்வாடி பெர்ஃபியூம்' விவகாரத்தில் ட்விஸ்ட்!

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் சிகர் பான்மசாலா மற்றும் பெர்ஃபியூம் தயாரிக்கும் பியூஸ் ஜெயின் என்பவரின் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பியூஸ் ஜெயின் வீட்டிலிருந்து ரூ.250 கோடி அளவுக்கு பணம், 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த ரெய்டு சம்பவத்தை உத்தரப்பிரதேச தேர்தலுக்கு பா.ஜ.க பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் ரெய்டு சம்பவத்தை சுட்டிக்காட்டி சமாஜ்வாடி கட்சியை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். பியூஸ் ஜெயின் `சமாஜ்வாடி அத்தர்' என்ற பெயரில் பெர்ஃபியூம் வெளியிட்டதால்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே சமாஜ்வாடி அத்தர் பெர்ஃபியூமை பியூஸ் ஜெயின் வெளியிடவில்லை என்றும், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த புஷ்பராஜ் ஜெயின் என்பவர்தான் வெளியிட்டார் என்றும், சமாஜ்வாடி கட்சி தெரிவித்திருக்கிறது.

பியூஸ் ஜெயின் வீட்டில்

``பா.ஜ.க-வினர் ஆள் மாற்றி சொந்த ஆளிடமே தவறுதலாக ரெய்டு நடத்திவிட்டனர். பியூஸ் ஜெயினுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது" என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருக்கிறார்.

அகிலேஷ் யாதவ்

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தனது ட்விட்டரில், ``ரெய்டில் காமெடியான தவறுகள் நடந்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த காமெடி இத்தோடு நிற்கப்போவதில்லை. பா.ஜ.க-வும், சமாஜ்வாடியும் ஒருவரை ஒருவர் குறை சொல்லும் போது, மேலும் பலர் பெயர்கள் வெளியில் வரும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். சமாஜ்வாடி அத்தர் வெளியிட்ட புஷ்பராஜ் ஜெயின் இது குறித்து கூறுகையில், ``எனக்கும் பியூஸ் ஜெயினுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இந்த அளவுக்கு கீழ்த்தரமான அரசியல் செய்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்த ரெய்டு என்னை குறிவைத்து தவறுதலாக பியூஸ் ஜெயினிடம் நடத்தப்பட்டு இருக்கலாம்" என்று தெரிவித்தார்.

புஷ்பராஜ் ஜெயின்

இது குறித்து ஜி.எஸ்.டி வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``தவறுதலாக வேறு ஒருவர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை. வரி ஏய்ப்பு செய்வதாக எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த ரெய்டு நடத்தப்பட்டது" என்றனர். ரெய்டு ஆள் மாறி நடத்தப்பட்டாலும் வரி ஏய்ப்பு செய்த நபர் பிடிபட்டது அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: `வீட்டில் ரூ.250 கோடி ரொக்கம்; சொந்த ஊரில் எளிமையோ எளிமை!’ -உ.பி. பெர்ஃபியூம் வியாபாரி கைது பின்னணி



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments