தாயிடம் அத்துமீறிய முதியவர், துண்டு துண்டாக வெட்டி வீசிய பதின்வயது மகள்கள்; வயநாட்டில் நடந்தது என்ன?

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் இருக்கும் அம்பலவயல் காவல் நிலையத்திற்கு 15 ,16 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுமிகள், பெண் ஒருவரை அழைத்து வந்துள்ளனர். ``நாங்கள் ஒருவரை வெட்டிக் கொலை செய்துவிட்டோம். எங்களை கைது செய்யுங்கள்" என அவர்கள் பணியில் இருந்த காவலர்களிடம் கண்ணீருடன் சொல்லியிருக்கிறார்கள். இதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்து வந்த காவலர்கள் 3 பேரிடமும் விசாரிக்க ஆரம்பித்தனர்.

கொலையான முகமது

காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்த அந்தச் சிறுமிகள், ``நாங்கள் இருவரும் சகோதரிகள். இவர் எங்களின் அம்மா. நாங்கள்‌ மூன்று பேரும் அம்பலவயல் பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தோம். 68 வயதான முகமது என்பவர் அவரது வீட்டிற்கு அருகில் இருக்கும் வீட்டை எங்களுக்கு வாடகைக்குக் கொடுத்திருந்தார். முகமது எங்களுக்கு உறவினர். நேற்று முன்தினம் மதியம் நாங்கள் இருவரும் வீட்டிற்கு வெளியே வேலை செய்து கொண்டிருந்தோம். திடீரென எங்கள் அம்மாவின் அலறல் சத்தம் கேட்டது. பதறி இருவரும் ஓடிப்போய் பார்த்தபோது, முகமது எங்கள் அம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்.

Also Read: சென்னை: மருமகள்மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மாமியார்! - கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

இதைப் பார்த்த ஆத்திரத்தில் அவரை இழுத்துத் தள்ளி அம்மாவைக் காப்பாற்ற முயன்றோம். ஆனால், அவர் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தார்.

அக்கம்பக்கத்திலும் ஆள்கள் யாருமே இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் விறகு பிளக்க வைத்திருந்த கோடாரியை எடுத்து அவர் மீது தாக்கினோம். அதில் ஏற்பட்ட காயத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். முகமதுவின் உறவினர்களுக்குத் தெரிந்தால் எங்களை கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் உடலை வீட்டிற்கு இழுத்து வந்து, கத்தியில் துண்டாக வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டினோம். பின்னர் யாருக்கும் தெரியாமல் தூக்கிச் சென்று அருகில் இருக்கும் வறண்ட கிணற்றுக்குள் வீசினோம்.

கொலை செய்ய பயன்படுத்திய கத்தி, கோடாரி

ஒரு காலை மட்டும் பையில் போட்டு அம்பலவயல் பஜாரில் உள்ள குப்பைத் தொட்டியில் வீசினோம்‌. அம்மாவை ஆறுதல்படுத்த முயன்றோம். ஆனாலும், எங்களின் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. போலீஸில் சரணடையலாம் என முடிவு செய்து மூன்று பேரும் காவல் நிலையத்துக்கு வந்து விட்டோம்" என்று இருவரும் தெரிவித்தனர்.

அம்பலவயல் காவல்துறையினர் உடனடியாக தங்களின் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து அடுத்தகட்ட விசாரணையைத் துவக்கினர். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் கொலை நடந்த இடத்தில் ஆய்வு செய்து, கொலைக்குப் பயன்படுத்திய கோடாரி, கத்தி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். சரணடைந்த மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தனர்.

கொலை செய்ய பயன்படுத்திய கோடாரி

Also Read: கேரளா: `இளைஞர் முகத்தில் ஆசிட் வீசிய 37 வயது பெண்... விபரீதத்தில் முடிந்த முகநூல் காதல்!'

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த கேரள காவல்துறை அதிகாரிகள், ``கொலையான முகமதுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்தப் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இரண்டு சிறுமிகளையும் சிறார் காப்பகத்தில் சேர்த்திருக்கிறோம். சிறுமியின் அம்மாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments