ஜம்முவின் கேத்ராவில் உள்ள மலைக்கோயிலான வைஷ்னுதேவி கோயிலில் நேற்றிரவு இரவு பக்தர்கள் புத்தாண்டு சாமி தரிசனத்துக்காக திரளான அளவில் காத்திருந்தனர். அதிகாலையில் புத்தாண்டு பிறந்தவுடன் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரியும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது திடீரென, கருவறைக்கு வெளியில் பக்தர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கூட்டநெரிசலில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
இந்த நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 13 பக்தர்கள் காயம் அடைந்தனர். அதிகாலை 2.45 மணிக்கு ஏற்பட்ட
சம்பவத்தை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பக் சிங் கூறுகையில், பக்தர்கள் கருவறைக்கு வெளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்றார். இச்சம்பவத்தை தொடர்ந்து கோயில் அடைக்கப்பட்டது. 26 பேர் வரை காயம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பிரதமர் நரேந்திரமோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததோடு இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதோடு இச்சம்பவம் குறித்து உயர்மட்டக்கமிட்டி விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். நிலைமையை நேரில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். உயிரிழந்தவர்கள் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
from தேசிய செய்திகள்
0 Comments