மும்பை மேற்கு புறநகர்ப் பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் காணாமல் போய்க்கொண்டிருந்தன. போலீஸாருக்கு வந்த புகார்களின் அடிப்படையில் அவர்கள் விசாரித்து வந்தனர். இருசக்கர வாகனங்கள் திருட்டு நடந்த இடங்கள் அனைத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாமல் இருந்தது. இதனால் திருடர்கள் எங்கு கண்காணிப்பு கேமரா இல்லாமல் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு, அதன் பிறகே திருடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர் என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது போலீஸாருக்கு மிகவும் சவாலாக இருந்தது.
கடந்த மாதம் கோரேகாவ் பகுதியில் இது போன்று ஒரு இருசக்கர வாகனம் காணாமல் போனது. அதையடுத்து, போலீஸார் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கோரேகாவ் பகுதியில், சந்தீப் கெய்க்வாட் என்ற மாணவர் அடிக்கடி கல்லூரிக்கு மாணவிகளை கவர பலவகையான இருசக்கர வாகனங்களில் வருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் கெய்க்வாட்டை பிடித்து சென்று விசாரித்த போது, இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரும் அவர் நண்பர்கள் மகேஷ் ஸ்வாமி, கணேஷ் சவான், யோகேஷ் ஆகியோரும் இருசக்கர வாகனங்களை சாவி இல்லாமல் எப்படி ஸ்டார்ட் செய்வது என்பதை யூடியூப் பார்த்து தெரிந்துகொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத மற்றும் கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களைத் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தது விசாரசணையில் தெரியவந்தது.
இதில் மகேஷ் ஸ்வாமிதான் முதலில் தன் அப்பாவின் இரு சக்கர வாகனத்தை சாவி இல்லாமல் திறந்து பார்த்திருக்கிறார். அதைத் தன் நண்பர்களிடம் காட்டியிருக்கிறார். உடனே அவர்கள் தங்களுக்கும் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சந்தீப்பும் கற்றுக்கொடுத்தார். நான்கு பேரும் ஜாலிக்காக மட்டுமே இருசக்கர வாகனங்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ``திருடிச்செல்லும் பைக்கில் எரிபொருள் காலியாகிவிட்டால் உடனே அப்படியே அங்கேயே விட்டுச்செல்வதை நான்கு பேரும் வழக்கமாக கொண்டிருந்தனர். திருடிய இருசக்கர வாகனங்களில் மாணவிகள் முன் பந்தா காட்டுவதற்காக நான்கு பேரும் சென்றுள்ளனர். நான்கு பேருமே கல்லூரி மாணவர்கள். அவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
Also Read: இன்ஸ்டாகிராம் நண்பரைத் தேடி ஸ்வீடனிலிருந்து மும்பை வந்த சிறுமி; இன்டர்போல் தகவல் மூலம் மீட்பு!
from தேசிய செய்திகள்
0 Comments