கேரளா மாநிலம் திருச்சூர் குண்டுவாற பகுதியைச் சேர்ந்தவர்கள் வாசு - பேபி தம்பதி. இவர்களின் பிள்ளைகள் விபின் மற்றும் வித்யா. மர வேலைகள் செய்து வந்த வாசு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்தார். இதனால் குடும்ப பாரம் மகன் விபினின் தலைக்கு மாறியது.
20 வயதான விபின் முதலில் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்தார். கொரோனா லாக்டெளன் காரணமாக அந்த வேலை பறிபோனது. இதையடுத்து வீட்டின் பக்கத்தில் ஒரு சர்வீஸ் ஸ்டேஷனின் வேலைக்குச் சேர்ந்தார். இதற்கிடையே விபினின் சகோதரி வித்யாவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால், வித்யா கடந்த இரண்டு ஆண்டுகளாக கைப்பமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிதின் என்பவரை காதலிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் வித்யாவுக்கும் நிதினுக்கும் திருமணம் செய்ய தேதி முடிவு செய்யப்பட்டது. கடந்த 12-ம் தேதி (டிசம்பர் 12) திருமணம் நடத்துவதாக நிச்சயக்கப்பட்டது.
காதலியை கரம்பிடிப்பதால் வரதட்சணை போன்றவற்றை நிதின் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆனாலும் திருமணத்தின்போது சகோதரிக்கு கொஞ்சம் நகையும், பணமும் கொடுக்க வேண்டும் என விபின் விரும்பியுள்ளார். அதற்காக தனது மூன்று சென்ட் நிலத்தையும், அதில் உள்ள வீட்டையும் அடமானமாக வைத்து வங்கியில் கடன் கேட்டுள்ளார். முதலில் ஒரு வங்கி மறுத்த நிலையில், மற்றொரு நிதி நிறுவனம் பணம் கொடுக்கச் சம்மதித்துள்ளது.
Also Read: கேரளா: ``என் சாவுக்கு யாரும் காரணமில்லை!'' - தற்கொலை செய்துகொண்ட ஆளுநரின் கார் டிரைவர்
இதனால் மனம் மகிழ்ந்த விபின் கடந்த 6-ம் தேதி தாய் மற்றும் சகோதரியை நகைக் கடைக்கு அழைத்துச் சென்று நகைகளைத் தேர்வு செய்யும்படி கூறியிருக்கிறார். மேலும், `நிதி நிறுவனத்தில் தருவதாகக் கூறிய பணத்தை வாங்கி வருகிறேன்' எனச் சென்றிருக்கிறார் விபின்.
கடைசி நேரத்தில் லோன் தரமுடியாது என அந்த நிதிநிறுவனம் மறுத்துள்ளது. தங்கையின் திருமணத்துக்குக் கடன் கிடைக்காததால் மனம் உடைந்த விபின் வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார்.
விபினை நீண்ட நேரம் காணாததால் நகைக்கடையில் இருந்த தாயும், சகோதரியும் அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்போதுதான் விபின் தற்கொலை செய்துகொண்ட விவரம் அவர்களுக்குத் தெரியவந்தது. விபினின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் கதறி அழுதனர். விபினின் மரணத்தை தாங்க முடியாத அவரது தாத்தா ராமசாமியும் மரணம் அடைந்தார். இந்த மரணங்கள் கேரள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Also Read: `திமுக பிரமுகர்கள் டார்ச்சர்; தற்கொலை செஞ்சுக்கப்போறேன்!’ - ஆடியோ வெளியிட்ட வேலூர் எஸ்.ஐ
இந்நிலையில், விபினின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருந்தார், கல்யாண மாப்பிள்ளை நிதின். நிதின் - வித்யா திருமண ஏற்பாடுகள் நடந்தன. இதற்கிடையே விபின் விரும்பியபடி வித்யாவிற்கு நகை போன்றவை வாங்க சிலர் நிதி உதவி அளித்தனர். இதையடுத்து கடந்த 29-ம் தேதி திருச்சூர் பாறமேக்காவு கோயிலில் வைத்து நிதின் - வித்யா திருமணம் எளிமையாக நடைபெற்றது. இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்துகொண்டனர். ஜனவரி மாதம் 15-ம் தேதி வாக்கில் வெளிநாடு செல்லும் நிதின் தன்னுடன் வித்யாவையும் அழைத்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழலும், வேலைவாய்ப்பின்மையும் மிடில் க்ளாஸ் குடும்பங்களிலும், மிடில் க்ளாஸ் குடும்பத்து இளைஞரிகளிடமும் காட்டும் கோர முகத்துக்கு, விபின் மரணம் ஓர் உதாரணம் என்று கேரள மக்கள் வருத்தம் பகிர்கின்றனர்.
from தேசிய செய்திகள்
0 Comments