`கணவனை இழந்த பெண்கள் தான் குறி!' - 26 பேரிடம் ரூ.2.5 கோடி மோசடி செய்த புதுவை நபர் கைது!

மும்பை தானே பகுதியைச் சேர்ந்த 32 வயது கணவனை இழந்த பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்வதற்காக மேட்ரிமோனியல் இணையதளத்தில் தன் தகவல்களைப் பதிவு செய்திருந்தார். அவரின் தகவல்களைப் பார்த்த புதுச்சேரியைச் சேர்ந்த பிரஜித் தாயல் காலித் (44) என்பவர், அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டார். அந்தப் பெண்ணை காலித் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்திருந்தார். இதனால் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்துப் பேசியதோடு, நெருங்கிப் பழகியதாகவும் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், அந்தப் பெண்ணின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்ற காலித், 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரூ.16.8 லட்சம் அளவுக்கு மோசடி செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண் உடனடியாக போலீஸில் புகார் அளித்தார். அவரின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு காலித்தை கைது செய்தனர்.

கைது

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி வினய் ரத்தோடு கூறுகையில், ``காலித் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தனக்கு பாரீஸில் ஹோட்டல் இருப்பதாகவும், அதை விற்றுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் ஹோட்டல் விற்ற பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி அனுமதிக்கவில்லை என்றும், அதற்கான நடைமுறைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதோடு தற்போது தனக்கு நிதிப்பிரச்னை ஏற்பட்டிருப்பதால், பணம் கொடுத்து உதவினால் கொடுத்த பணத்தை இரண்டு மடங்காகக் கொடுத்துவிடுவேன் என்று காலித் அந்தப் பெண்ணிடம் கூறியிருக்கிறார். அதை நம்பி அந்தப் பெண்ணும் ரூ.16.8 லட்சத்தைக் கொடுத்திருக்கிறார்.

கைது செய்யப்பட்ட காலித்

பணத்தை வாங்கிக்கொண்டு காலித் தலைமறைவாகிவிட்டான். அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் அவனைத் தேடி வந்தோம். காலித் பண விவகாரத்தில் பலவீனமானவன் என்று விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீஸார் சொன்னபடி பாதிக்கப்பட்ட பெண் காலித்தை தொடர்புகொண்டு சமீபத்தில் வீடு ஒன்றை விற்பனை செய்ததாகவும், தன்னிடம் அதிகப் பணம் இருப்பதாகவும், அதில் குறிப்பிட்ட பகுதியைக் கொடுக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். ஆனால் பணத்தை ரொக்கமாகத்தான் கொடுப்பேன் என்று தெரிவித்தார். உடனே காலித் பணத்தை வாங்க மும்பை தானேவுக்கு ந்தான். அவனை மடக்கி கைது செய்தோம். அவனது சொந்த ஊர் புதுவை மஹி பகுதியாகும். அவனிடம் விசாரணை நடத்தியதில், மும்பை, கொல்கத்தா, கேரளா, பெங்களூர் போன்ற பகுதியில் கணவனை இழந்த பெண்கள் சுமார் 26 பேரிடம் ரூ.2.5 கோடி அளவுக்கு இதே முறையில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

Also Read: `விவாகரத்தான பெண்கள் தான் டார்கெட்!' - மும்பை பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது!



from தேசிய செய்திகள்

Post a Comment

0 Comments