திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,
"மாற்றத்தை விரும்பிய மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றி உள்ளார்கள். த.வெ.க ஆட்சி குறித்து மூன்று மாதங்களுக்கு பின் பேசலாம். அ.தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது. எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-வில் சில சலசலப்புகள் நடந்துள்ளது. இதையெல்லாம் கடந்து பாராளுமன்ற தேர்தலிலேயே அ.தி.மு.க சாதனை படைக்கும்.
காங்கிரஸ், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறியது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது. அமைச்சராக வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் இதை செய்துள்ளது. கம்யூனிஸ்ட், வி.சி.க இருவரும் அமைச்சர் கேட்கவில்லை. அப்படி கேட்டிருந்தால் அவர்கள் மானம் போயிருக்கும்.
த.வெ.க-வினர், அ.ம.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-வை அபகரித்துள்ளார்கள். அ.தி.மு.க-வை ஊழல் கட்சி, மற்றும் சில கட்சி என ஏளனமாக விஜய் பேசினார். அந்த விஜயை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆதரிப்பது எப்படி நியாயம்?. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் தொடர்கிறோம்.

இன்னொரு தேர்தல் வந்து விடும் உள்ளிட்ட காரணங்களை கூறி த.வெ.க-விற்கு சில கட்சிகள் ஆதரவு அளித்தது தர்மத்திற்கு எதிரானது. த.வெ.க ஆட்சியின் ஆயுள் காலம் ஊசலாடி கொண்டுள்ளது. அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சிலர் எடுத்துள்ள விஜய் ஆதரிக்கும் முடிவு அவர்களையே பாதிக்கும். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள், அ.ம.மு.க சார்பில் வெற்றி பெற்றவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், சி.பி.ஐ விசாரணை கோருவோம்.
அரசியல் கட்சியின் தலைவர் தான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும். த.வெ.க-வில் அமைச்சராக நியமிக்கப்பட்டவர்கள் மீது பல்வேறு புகார்கள் வந்துள்ளது. ரீலில் ஆட்சி நடத்த முடியாது. ரியலை மக்கள் புரிந்து கொள்வார்கள்.
ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். த.வெ.க, அ.தி.மு.க-வை அழிக்க பார்க்கிறது. இதை, அ.தி.மு.க-வினர் புரிந்து கொள்ள வேண்டும். த.வெ.க-வை ஆதரிப்பது அறம் என கூறினால், அதை அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பதவிக்காக அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-வை ஆதரித்தால் வரலாறு அவர்களை மன்னிக்காது. அ.தி.மு.க-வை அழிக்க த.வெ.க-வின் ஏஜெண்டாக செங்கோட்டையன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க-வில் நடைபெறும் உட்கட்சி பிரச்னையை பார்த்து பா.ஜ.க தலைவர்கள் வருத்தப்படுகிறார்கள். கட்சி கைவிட்டு போய்விட கூடாது என த.வெ.க-வை ஆதரிப்பது அ.தி.மு.க-வை அழிப்பதற்கு சமம். அ.தி.மு.க-விற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் கூறும் பொய் அவருக்கு எதிராக தான் திரும்பும். காமராஜ் காரில் அமர்ந்து கையெழுத்து போட்டதை வீடியோ எடுத்தது யார் என்பது எனக்கு தெரியும். த.வெ.க செய்தது குதிரை பேரம் தான் என்பதை நிரூபிப்போம். குதிரை வேகத்தில் செயல்படுவோம் என கூறும் விஜய் பேரம் பேசி தான் குதிரையை வாங்கி உள்ளார்" என்றார்.
from India News https://ift.tt/1K8F4bC
0 Comments