கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக 3-வது முறையாக வென்ற ராஜேஷ்குமார் இப்போது த.வெ.க கூட்டணி ஆட்சியில் அமைச்சராகவுள்ளார்.
கல்லூரி படித்தபோதே அனைத்து கல்லூரி மாணவர் பேரவை தலைவராக இருந்தார் ராஜேஷ்குமார். பின்னர் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்த சமயத்தில் மக்கள் பிரச்னைக்காகப் போராட்டங்கள் நடத்தியதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பிரபலம் ஆனார்.
அவரை இளைஞர் கூட்டம் பின் தொடர்ந்தது. அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக வளர்ந்த ராஜேஷ்குமார் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து கட்சியை வலுப்படுத்தினார்.
கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஜான் ஜேக்கப் தீவிர ஜி.கே.வாசன் ஆதரவாளர். எனவே, ஜி.கே.வாசன் த.மா.க தொடங்கியதும் ஜான் ஜேக்கபும் அவருடன் சென்றார். அதைத்தொடர்ந்து கடந்த 2016 சட்டசபை தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு ராஜேஷ்குமாருக்குக் கிடைத்தது.
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் கோட்டை என்பதாலும், களத்தில் நன்கு அறிமுகம் ஆனவர் என்பதாலும் ராஜேஷ்குமார் வெற்றிபெற்றார். 2021 தேர்தலில் இரண்டாவதுமுறை வென்றவர் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக ஆனார். இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்டு, த.வெ.க அலையில் சிக்காமல் வென்று எம்.எல்.ஏ ஆனார்.
பின்னர் த.வெ.க கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தது. காங்கிரஸில் வென்ற 5 எம்.எல்.ஏ-க்களில் சீனியர் என்பதால் மீண்டும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ஆக்கப்பட்டார்.
மேலும், த.வெ.க கூட்டணியில் காங்கிரஸுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதும் ராஜேஷ்குமார் பெயரே மேலோங்கி நின்றது.

இன்று ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் ராஜேஷ்குமார் அமைச்சராகப் பதவியேற்க உள்ளார். தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அதிக சீட்டுகள் வேண்டும் எனவும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனவும் முதலில் குரல்கொடுத்தவர் ராஜேஷ்குமார்.
அந்தக் கருத்தில் உறுதியாகவும் இருந்தார். தேர்தலுக்கு முன்பு ஜூனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் பேசிய ராஜேஷ்குமார், "அதிகமான தொகுதி வேண்டும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஆட்சி வேண்டும் என்று கேட்டேன். ஆட்சியில் பங்கு வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் கேட்கிறோம்.
எங்கள் தலைமை நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். அமைச்சரவையில் காங்கிரஸ் அங்கம் வகித்தால்தான் கூட்டணி சார்பில் கொடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எங்களாலும் முடியும்" என்றார்.

ராஜேஷ்குமார் விரும்பியது போன்று 59 ஆண்டுகளுக்குப்பின் தமிழ்நாட்டில் காங்கிரஸ் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் காலம் பிறந்திருக்கிறது எனத் தொண்டர்கள் உற்சாகமாகக் கூறுகின்றனர்.
கடந்த தி.மு.க ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் வென்ற மனோ தங்கராஜ் அமைச்சர் ஆனார். மனோதங்கராஜின் வீடு மற்றும் வாக்குரிமை ஆகியவை கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கருங்கல் பகுதியில் உள்ளன. அவர் அமைச்சராக இருந்த சமயத்தில் கருங்கலை அடுத்த பாலூரில் உள்ள அவரது வீடு முகாம் அலுவலகமாகச் செயல்பட்டது.
அதுபோன்று ராஜேஷ்குமாரின் வீடும் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கருங்கல் பகுதியாகும். எனவே கிள்ளியூர் தொகுதியைச் சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி யோகம் அடித்திருக்கிறது.
from India News https://ift.tt/8XVvy4B
0 Comments