சென்னையில் நேற்று நள்ளிரவில் போராடிய மாற்றுத்திறனாளிகளை இரக்கமற்ற முறையில் அப்புறப்படுத்தி அகற்றியிருக்கிறது காவல்துறை.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்து 5 நாட்களாக போராடி வருகின்றனர். நேற்று காலை சிவானந்தம் சாலையில் கூடிய 1000 க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முதல்வரிடம் மனு கொடுக்க திட்டமிட்டிருந்தனர்.
சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நடப்பதால், முன்னெச்சரிக்கையாக அவர்களை கைது செய்த காவல்துறையினர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் அடைத்து வைத்திருந்தனர்.
'மாலைக்கு மேல் எங்களை காவல்துறையினர் கலைந்து போக சொன்னார்கள். ஆனால், நாங்கள் போராட்டத்தை தொடர விரும்பினோம். காவல்துறையும் நீங்கள் போராட்டத்தை தொடருவதாக இருந்தால் இங்கே தொடர முடியாது. திருமங்கலத்தில் நீங்கள் தங்க ஒரு மண்டபம் ஏற்பாடு செய்கிறோம். அங்கே உங்களுக்கு இரவு உணவும் சொல்லிவிடுகிறோம். நீங்கள் அங்கிருந்து போராட்டத்தை தொடருங்கள்' என்றனர்.
நாங்களும் அவர்களின் பேச்சை நம்பினோம். எங்களை அழைத்துச் செல்ல 16 பேருந்துகளை அழைத்து வந்தனர். ஒவ்வொரு பேருந்திலும் கொஞ்சம் பேராக ஏறினோம். கடைசி பேருந்தில் ஏறுவதற்குள் முந்தைய பேருந்தில் ஏறியவர்கள் எங்களை அழைத்தார்கள். 'எங்கே அழைத்து செல்கிறார்கள் என்றே தெரியவில்லை. சில பேருந்துகள் கிளாம்பாக்கம் நோக்கி செல்கிறார்கள். சில பேருந்துகள் கோயம்பேட்டையும் அரும்பாக்கத்தையும் நோக்கி செல்கின்றனர். சிலர் மயக்கமடைந்து விட்டனர்' என்கிற தகவல் எங்களுக்கு கிடைத்தது.
நாங்கள் கடைசிப் பேருந்தில் ஏறாமல் ஒரு 50 பேர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலேயே அமர்ந்து எங்கள் ஆட்களை மீண்டும் இங்கேயே அழைத்து வர வேண்டுமென போராட்டத்தை தொடர்ந்தோம். எங்களுக்கு காவல்துறை உணவும் தண்ணீரும் கூட கொடுக்கவில்லை. 7 மணிக்கு மின்விளக்கையும் அணைத்துவிட்டார்கள். மொபைல் டாய்லெட்டை மூடிவிட்டார்கள். இந்த காம்பவுண்ட்டுக்கு வெளியே ஒரு பொது கழிப்பறை இருக்கிறது. அதையும் பூட்டு போட்டு மூடிவிட்டார்கள். யூரின் கூட போகவிடாமல் எங்களை சித்ரவதை செய்தார்கள்' எனக் குமுறினார் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி ஜான்சி ராணி.
விஷயமறிந்து 10:30 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு நேரில் சென்றோம். செய்தி எடுப்பதற்காக மைதானத்திற்குள் செல்ல முயல்கையில் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், 'உங்களை உள்ள விட்டா எங்களுக்கு பிரச்னை ஆகிடும். நாங்க ரிலீஸ் பண்ணிட்டோம். அவங்கதான் போக மாட்டக்குறாங்க. நீங்க எதுவா இருந்தாலும் கேட்டுக்கு வெளியே இருந்தே பாருங்க' என கறாராக கூறினர். 'எங்க ஆளுங்களை அங்க அங்க நடுத்தெருவுல இறக்கி விட்ருக்காங்க. நாங்க என்ன சாதாரண மனுசங்களா. நடுத்தெருவுல இறக்கிவிட்டா எங்க ஆளுங்க என்ன பண்ணுவாங்க. இங்க இப்போ வரைக்கும் நைட்டு சாப்பாடு கொடுக்கல.
எங்க ஆளுங்க வெளிய போயி தண்ணி வாங்கிட்டு வரவும் விடமாட்றாங்க. எங்களுக்கு 1500 ரூபாய் உதவித்தொகை கொடுக்குறாங்க. மகளிர் உதவித்தொகையே 2000 ரூபாய் கொடுக்குறேன்னு சொல்ற ஸ்டாலின் ஐயா எங்களுக்கும் மனசு வச்சு உதவித்தொகையை அதிகப்படுத்தணும்னுதான் போராடுறோம். அதுக்கு எங்களுக்கு தண்ணி கூட கொடுக்காம யூரின் போக விடாம கொடுமைப்படுத்துவிங்களா?' என கேட்டுக்கு உள்ளே இருந்தே நம்மிடம் வெதும்பினர் மாற்றுத்திறனாளிகள்.
இரவு 11:30 மணியளவில் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் நாகை மாலியும் சின்னதுரையும் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் வந்த பிறகே நம்மையும் உள்ளே அனுமதித்தனர். மின் விளக்கு கூட அணைத்து வைக்கப்பட்டிருக்கு இருளில் நடு இரவிலும் போராடும் மாற்றுத்திறனாளிகளை பார்த்து ஆறுதல் கூறிய எம்.எல்.ஏக்கள் 'என்னய்யா காவல்துறை இவ்வளவு அட்ராசிட்டி பண்றாங்க' என புலம்பினர்.
அங்கிருந்தபடியே தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை கலெக்டர், லோக்கல் எம்.எல்.ஏக்கள், மந்திரிக்கள் என பலருக்கும் போனில் முயற்சி செய்து பார்த்தனர். யாரும் லைனுக்கு வரவில்லை.
போராடும் ஆட்களுக்கு டீயும் பிரெட்டுமாவது வாங்கிக் கொடுங்கள் என காவல்துறையிடம் கம்யூ எம்.எல்.ஏக்களும் மாற்றுத்திறனாளிகளும் பிரதிநிதிகளும் முறையிட்டனர். 'இப்போ எந்தக் கடையும் இருக்காது சார். மவுண்ட் ரோட்ல ரெண்டு பெரிய கடைங்கதான் இருக்கும். அங்க டீ 50 ரூபாய். பன்னு 60 ரூபாய். தலைக்கு குறைஞ்சது 100-200 ஆகிரும். அவ்வளவு எப்படி சார்....' என அலட்சியமாக பதில் கூறினர். 'நாங்கள் கூட காசு தருகிறோம்' என அங்கிருந்தவர்கள் கூறியும் மசியவில்லை. இடையில் ஒரு நேம் பேட்ச் இல்லாத அதிகாரி ஒருவர் வந்து, 'சாருங்க யாரு...ரெண்டு பேரும் எம்.எல்.ஏங்களா....நமக்கு தெரியாது..' என தலையை சொரிந்து விட்டுச் சென்றார்.
அதிகாரிகளும் திமுகவின் அமைச்சர்களும் லைனுக்கு வராததால் நாகை மாலியும் சின்னதுரையும் தங்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருடன் பேசினர். பின்னர் காவல்துறையிடம் இவர்களையெல்லாம் ஒரே இடத்தில் தங்க வைக்கவாது ஏற்பாடு செய்து கொடுங்கள் என்றனர். அதற்கும் காவல்துறை இறங்கி வரவில்லை. 'சென்னைக்குள்ள இப்போலாம் மண்டபம் கிடைக்குறதே இல்ல. ஒரு தடவை மண்டபம் கொடுத்தவங்க, திரும்ப கொடுக்க மாட்றாங்க. போராடுறவங்க எதையாவது உடைச்சு வச்சிட்டு வந்துடுறாங்க. அதனாலயே மண்டபக்காரங்க பயப்படுறாங்க. அதுவும் இந்நேரத்துக்கு மண்டபம்லாம் சான்ஸே இல்ல. இவங்களை கலைஞ்சு போயிட்டு நாளைக்கு வந்து போராட சொல்லுங்க' என்றனர்.
கம்யூன்ஸ்ட்டுகள் தங்களின் அலுவலங்கள் எதிலும் இவர்களை தங்க வைக்க முடியுமா என சில நிமிடங்கள் கலந்தாலோசித்தனர். ஆனால், 1000 க்கும் மேற்பட்டோரை தங்க வைக்கும் வசதி இல்லாததால் மீண்டும் காவல்துறையிடம் எம்.எல்.ஏக்கள் கலந்தாலோசித்தனர். இறுதியாக இறங்கி வந்த காவல்துறை, '1500 பேரும் இருக்குற அளவுக்கு இடம்னா கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குதான் போகணும். வேணும்னா பஸ் ஸ்டாண்டுல தங்க சொல்லுங்க. கூட்டிட்டு போக பஸ்ஸூ நாங்க ஏற்பாடு பண்றோம்' என்றனர்.
கையைப் பிசைந்த கம்யூ எம்.எல்.ஏக்கள் வேறு வழியில்லாமல் இந்த ஐடியாவுக்கு ஒத்துக்கொண்டனர். போராடிய மாற்றுத்திறனாளிகளிடம் போய் விஷயத்தை கூறினர். ஆனால், அவர்கள் இதை ஏற்கவில்லை. 'இப்படித்தான் சாயங்காலம் மண்டபத்திற்கு அழைத்து செல்கிறோம் என்றனர். கொஞ்ச நேரத்துக்கு முன்பாகக் கூட சைதாப்பேட்டை, கிண்டி, அரும்பாக்கத்தில் மண்டபம் கிடைத்துவிட்டது அங்கே போகலாம் என்றனர். மாற்றி மாற்றிப் பேசி எங்களை ஏமாற்றுகின்றனர். இவர்களை நம்ப முடியாது. நடுத்தெருவில் இறக்கிவிடப்பட்ட எங்களின் ஆட்களை இங்கே அழைத்து வரச் சொல்லுங்கள். நாங்கள் இங்கேயே போராடுகிறோம்' என்றனர் உறுதியாக. 'சரி தொடர்ந்து போராடுங்கள்' என கம்யூ எம்.எல்.ஏக்களும் செய்வதறியாது கிளம்ப தயாராகினர்.
அவர்களிடம் 'ஐயா நீங்க இவ்வளவு நேரம் இங்க பேச்சுவார்த்தை நடத்துனீங்க. என்னாச்சுன்னு செய்திக்காக சொல்லிட்டு போங்க' என்றேன். இருவருமே எதுவும் பேசாமல் மௌனமாக கடந்து சென்றனர்.
எம்.எல்.ஏக்கள் கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் மைதானத்துக்குள் வந்த 30 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த நம்மை அப்படியே பிடித்து காம்பவுண்ட்டுக்கு வெளியே தள்ளி கேட்டை பூட்டினர்.
பேருந்தை வர வைத்து ஒன்றாக அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளை குண்டுக்கட்டாக தரதரவென இழுத்து பேருந்தில் ஏற்றி அடைத்தனர். 'ஏம்மா...நீ என்ன ரொம்ப பண்ற ஒழுங்கா பஸ்ல ஏறிடு இல்லன்னா...' என பெண் மாற்றுத்திறனாளிகளை ஒருமையில் பேசி அதட்டி பேருந்துக்குள் அள்ளிப் போட்டனர். பேருந்துக்குள்ளும் 10 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஏறிவிட்டனர். பேருந்து காம்பவுண்டை விட்டு வெளியேறுகையிலேயே நெருக்கடியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு விட்டது. நம்மிடம் பேசிய அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜான்சி ராணி பேருந்துக்குள்ளேயே மயக்கம் போட்டார். 'பஸ்ஸை நிறுத்துங்க...பஸ்ஸை நிறுத்துங்க...' என கூச்சல் போட்டும் பஸ்ஸை நிறுத்ததால் சில மாற்றுத்திறனாளிகள் பேருந்தின் சாவியை உருவி டிரைவரின் கையைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தினர்.
'ஏன் சார்...எங்களை இவ்வளவு கொடுமைப்படுத்துறீங்க' என மாற்றுத்திறனாளிகள் கதற ஜான்சி ராணியை ஆம்புலன்சில் ஏற்றிவிட்டனர். ஆத்திரத்தில் பேசிய மாற்றுத்திறனாளிகளிடம் பதிலுக்கு முண்டிக் கொண்டு வாக்குவாதம் செய்த காவல்துறையினர் 'முதல்ல கதவ மூடுய்யா..' என டிரைவரை அதட்டி பஸ்ஸை கிளப்ப வைத்தனர்.
'

'சென்னைக்கு நடுவுல முடியாத மக்கள் மேல ஈவு இரக்கம் கூட இல்லாம இப்படி காட்டுமிராண்டித்தனமா அராஜகம் பண்றாங்களே...' என்ற மாற்றுத்திறனாளிகளின் குரல் மட்டும் பேருந்து கிளம்பிய பிறகும் ஒலித்துக் கொண்டே இருந்தது.
சமூக நீதி பேசும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இந்த குரல்கள் கேட்குமா?
from India News https://ift.tt/5RAUfxC
0 Comments