`ஆத்துல மூழ்கி இறந்துட்டாங்கன்னு நினைச்சோம்!' - 40 ஆண்டுகளுக்குப் பிறகு தாயைக் கண்ட மகன் நெகிழ்ச்சி

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கரிமன்னூர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு, மயங்கிய நிலையில் கிடந்த 80 வயது மூதாட்டியை போலீஸார் மீட்டனர். அவரது உடல் சோர்வாக இருந்ததால் அவரை முதியோர் காப்பகத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உணவும், மருந்துகளும் கொடுக்கப்பட்டன. அவரை முதியோர் இல்லத்தில் வைத்து பராமரித்துள்ளனர். அவரது உடல்நிலை முன்னேறியதை அடுத்து அவரிடம் சிலர் பேச முயன்றனர். அவர் பெரிதாக பேசவில்லை. அவர் பேசியதையும் அங்குள்ள பலரும் சரியாக புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தமிழ் தெரிந்த அதிகாரி ஒருவர் மூதாட்டியிடம் பேச்சுகொடுத்துளார். அப்போது, தனது பெயர் மாரியம்மா எனவும். தமிழ் நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் தஞ்சாவூர் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டுள்ளனர்.

40 ஆண்டுகளுக்குப்பின் குடும்பத்தினருடன் இணைந்த மாரியம்மா

40 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர்களின் பட்டியலை எடுத்து இறுதியாக மாரியம்மாவின் மகன் கலை மூர்த்தியைக் கண்டுபிடித்தனர். மாரியம்மாவுக்கு இப்போது 80 வயதாகிறது. திருமணமாகி கணவர் மற்றும் ஐந்து குழந்தைகள் இருந்துள்ளனர். 40 ஆண்டுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மாரியம்மாள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். அதன்பிறகு கரிமன்னூரில் யாசகம் பெற்று வாழ்ந்துள்ளார். 2019-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் சாலையில் மயங்கிய அவரை போலீஸார் மீட்டு முதியோர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

மாரியம்மாவின் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள மூன்று பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள் மாரியம்மாவைக் கரிமன்னூரில் இருந்து அழைத்துச் சென்றனர். இதுகுறித்து மாரியம்மாவின் மகன் கலை மூர்த்தி கூறுகையில், "தாய் எங்களைவிட்டு பிரியும்போது நாங்கள் சின்ன பிள்ளைகளாக இருந்தோம். தாய் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருக்கலாம் என கருதினோம். அவர் இப்போது உயிருடன் இருப்பதை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

மகன் கலை மூர்த்தியுடன் மாரியம்மா

போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் பாடல் மூலம் நன்றி தெரிவித்த மாரியம்மா கூறுகையில், "இறப்பதற்கு முன்பு சொந்த பிள்ளைகளையும், சொந்த ஊரையும் காண வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. இனி என் உறவுகளுடன் இருப்பேன்" என்றார். 40 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு மாநிலம் கடந்து வந்த மூதாட்டி குடும்பத்தினருடன் சேர்த்த நெகிழ்ச்சியான தருணத்தை கண்ட முதியோர் காப்பகத்தில் இருந்தவர்கள் கண்கள் குளமாயின. மூதாட்டியை குடும்பத்துடன் சேர்த்த சமூக நீதித்துறை மற்று காவல்துறை அதிகாரிகளை அப்பகுதியினர் பாராட்டினர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/N9bWaF8

Post a Comment

0 Comments