ஜனநாயகன் தணிக்கை சான்று விவகாரம்: 'அங்கு சென்று சொல்லுங்கள்'- வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

தணிக்கை சான்றிதழ் கேட்டு ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் ஜனவரி ஒன்பதாம் தேதி திரைக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக டிக்கெட் எல்லாம் கூட விற்பனை செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததை அடுத்து படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

ஜனநாயகன்
ஜனநாயகன்

இதை அடுத்து திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி தணிக்கை வாரியம் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் இந்த படத்தை மறு ஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரிய தலைவர் பரிந்துரைத்துள்ளதாக இமெயில் அனுப்பி உள்ளதாகவும ஆனாலும் கூட தங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என கூறியிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி ஆஷா அமர்வு கடந்த 9ம் தேதி வழங்கிய தீர்ப்பில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரிய பெரும்பான்மை உறுப்பினர்கள் கருத்துக்கள் அடிப்படையில் யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததோடு, அம்மனு அன்று மாலையே அவசர வழக்காகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனத்திற்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியதோடு, ஜனநாயகம் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.

மேலும் மேல்முறையீட்டு மனு மீது நோட்டீஸ் பிறப்பித்ததோடு வழக்கை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இன்னொரு பக்கம் தங்கள் தரப்பு கருத்துக்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என வலியுறுத்தி மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வான தீபங்கர் தத்தா மற்றும் ஏ ஜி மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

Jana Nayagan - Vijay
Jana Nayagan - Vijay

அப்போது பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஏற்கனவே படத்தின் திரைப்படத் தேதியை ஒன்பதாம் தேதி என நாங்கள் அறிவித்தோம் இந்தியா முழுவதும் 5000 திரையரங்குகளில் படத்தை திரையிடவும் ஏற்பாடுகளை செய்து விட்டோம் ஆனால் கடைசி நேரத்தில் திரைப்படத்தில் 10 இடங்களை நீக்கினால் தான் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் தரப்படும் என தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது எனவே இதில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அப்போது பேசிய நீதிபதிகள் இந்த நீதிமன்றத்தை நீங்கள் அணுகி இருக்கக்கூடியது மிகவும் அதிவேகமான செயல்பாடு. இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் இருபதாம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஏன் இவ்வளவு அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நாடினீர்கள்? அது மட்டும் இல்லாமல் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என திரைப்பட தணிக்கை வாரியம் சொன்னபோது அதை ஏன் நீங்கள் எதிர்த்து இந்த நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பியதோடு இது தொடர்பாக மீண்டும் நீங்கள் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு செல்லுங்கள் என திட்டவட்டமாக கூறினார்கள்

அதற்கு பதில் அளித்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தங்களது படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இருப்பது முற்றிலும் தீய எண்ணத்துடன் கூடிய செயல்பாடு மேலும் குறிப்பிட்ட தேதியில் தங்களது திரைப்படம் வெளியிடப்படவில்லை என்றால் அது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

Jana Nayagan - Vijay
Jana Nayagan - Vijay

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் உங்களது இந்த எந்த வாதத்தையும் நாங்கள் ஏற்க விரும்பவில்லை. இந்த வழக்கிலும் நாங்கள் தலையிட விரும்பவில்லை என திட்டவட்டமாக கூறினார்கள்.

தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதங்களை வைக்க முற்பட்டபோது மன்னிக்கவும் நீங்கள் போகலாம் என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். மேலும் வரும் இருபதாம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். உங்களுக்கு எதை சொல்ல வேண்டும் என்றாலும் அவர்களிடம் சென்று சொல்லுங்கள் என தெரிவித்தனர்.



from India News https://ift.tt/2Rc7T8H

Post a Comment

0 Comments