Target Gen Z: விஜய், சீமானுக்கு எதிரான தி.மு.க-வின் வியூகம் எடுபடுமா?

2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் வாக்குகளை டார்கெட் செய்து, அதற்கென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம். சமீப காலமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், கல்லூரிகள் தோறும் தமிழ் மன்றங்கள் தொடங்குவதன் பின்னணியும் இதுவே என்கிறார்கள் விவரப்புள்ளிகள்!

சீமான், விஜய்

2021 சட்டமன்றத் தேர்தலில் 6.8% வாக்குகளைப் பெற்ற சீமானின் நாம் தமிழர் கட்சியும், இம்முறை புதிதாகக் களமிறங்கும் தமிழக வெற்றிக் கழகமும் கணிசமான வாக்குச் சதவிகிதத்தை பெறும் என கணிக்கப்படுகின்றன. இந்த இரு கட்சிகளுமே இளைஞர்களின் வாக்குகளை தன்வசப்படுத்துவதில் குறியாக இருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “விஜய்யின் மாநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களின் கூட்டத்தை எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுபோல நா.த.க தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும் பல முன்னணி நிர்வாகிகள் விலகினாலும் இளைஞர்களை ஈர்க்கும் இடத்திலேயே அக்கட்சி உள்ளது. இச்சூழலில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் தி.மு.க, இளைஞர்களின் வாக்குகளை கவருவதில் தீவிரம் காட்டிவருகிறது” என்கிறார்கள்.

‘உதயநிதிக்கு முன்னுரிமை!’

“2014 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக கட்சிகள் சேர்ந்து 68 சதவிகித வாக்குகளைப் பெற்றன. ஆனால் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 47 சதவிகித வாக்குகளையே அந்த இரண்டு கட்சிகளும் சேர்த்துப் பெற்றிருக்கின்றன. அதேபோல, 2016 சட்டமன்றத் தேர்தலில் 73 சதவிகித வாக்குகளைப் பெற்ற அதிமுக, திமுக கட்சிகள் 2021 சட்டமன்றத் தேர்தலில் 71 சதவிகிதம் பெற்றுள்ளன. திராவிடக் கட்சிகளின் வாக்குகள் குறைந்துபோக, இளைஞர்களை ஈர்க்கத் தவறியதும் முக்கிய காரணம் என்கிறார்கள்" என வியூக வகுப்பாளர்கள் சிலர் கூறினர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து, “2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து 2024 தேர்தல் முடிந்தவுடன் உதயநிதியை துணை முதல்வராக நியமித்தது தி.மு.க. தொடர்ந்து தி.மு.க-விலும் மக்கள் மன்றத்திலும் அவருக்கான ஸ்பேஸ் அதிகமாகிக்கொண்டே போகிறது. அதற்கேற்ப இளைஞர்களைச் சென்றடையும் வகையில் சுவாரஸ்யமாகவும் நகைப்புடனும் பேசிவருகிறார் உதயநிதி. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மீதும், விஜய் குறித்து மறைமுகமாக விமர்சிப்பதும் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. உதயநிதியின் பிறந்தநாள் விழா, இளைஞரணியின் அறிவுத் திருவிழா, அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வு என அவரை லைம் லைட்டிலேயே வைத்திருக்கிறது தி.மு.க” என்றனர்.

‘கல்லூரி தோறும் தமிழ்மன்றம் தொடங்கும் தி.மு.க மாணவரணி!’

நம்மிடம் பேசிய தி.மு.க முக்கியப் புள்ளிகள், “கேரள அரசியலில் இளைஞர்கள் இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பக்கபலமாக இருப்பதற்கு, கல்லூரிகள் தோறும் அழுத்தமாக நிறுவப்பட்டுள்ள மாணவர் மன்றங்களே ஒரு முக்கிய காரணம். அந்த பார்முலாவை தமிழ்நாட்டில் கையிலெடுத்துள்ளது தி.மு.க.

திமுக
திமுக

அதன்படி, கல்லூரிகள் தோறும் மாணவர் தமிழ்மன்றங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக லயோலா கல்லூரி, வேல்ஸ் பல்கலைக்கழகம், சத்யபாமா பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரி, கே.சி.ஜி பொறியியல் கல்லூரி, தங்கவேல் கல்லூரி, பாரத் சட்டக் கல்லூரி மாணவர்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டோர் முதல்வர் முன்னிலையில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி இணைந்திருக்கிறார்கள். அதோடு தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளில் மாணவர் மன்றத்தைத் தொடங்கும் பொறுப்பு மாணவரணிக்கு அசைன் செய்யப்பட்டிருக்கிறது” என்றனர்.

தொடர்ந்து மாணவரணி நிர்வாகிகள் சிலர், “முதல்வரின் வழிகாட்டுதலில், அணிச் செயலாளர் ராஜீவ் காந்தி முன்னெடுப்பில் கல்லூரி தோறும் தமிழ் மன்றம் தொடங்கிவருகிறது. தமிழ் மன்றத்தில் இணையும் மாணவர்களுக்கு திராவிட இயக்க வரலாறு, சமூக நீதியின் முக்கியத்துவம், தத்துவமற்ற அரசியலால் ஏற்படும் ஆபத்துகளைப் பிரசாரமாக தமிழ் மன்றம் முன்னெடுக்கிறது. தமிழ் மன்ற நிர்வாகிகளாகிய மாணவர்கள் தி.மு.க-விலும் இணைந்துவருகிறார்கள். ” என்றனர்.

தமிழ்மன்ற மாணவர்கள் சந்திப்பு

நல்ல முன்னெடுப்புதான்., ஆனால்?

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “இன்றைய சூழலில் விஜய் ரசிகர்களும், சீமான் ஆதரவாளர்களும் தங்களது இயக்கங்கள்மீது பற்றாக இருப்பது தி.மு.க-வுக்கு ஒரு வகையில் இடையூறுதான். தி.மு.க மேற்கொள்ளும் இந்த முன்னெடுப்பு 2026 சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் எதிர்காலத்தில் மாணவர்கள் மத்தியில் கட்சியை வலுப்படுத்த அருமையான திட்டம். அனைத்துக் கட்சிகளும் கல்லூரிகளில் மாணவர் மன்றங்களை தொடங்குவது காலத்தின் கட்டாயம். உதாரணமாக, கேரளாவில் சி.பி.எம் சார்பில் SFI (Students’ Federation of India), காங்கிரஸ் சார்பில் KSU (Kerala Students’ Union), பா.ஜ.க சார்பில் ABVP ஆகிய அமைப்புகள் வலுவாக இருப்பதால் இளைஞர்கள் தொடக்கத்திலேயே அரசியல்படுத்தப்படுகிறார்கள்” என்றனர்.



from India News https://ift.tt/PrcWpNe

Post a Comment

0 Comments