கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 14 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் ஷாஜகான் வெளியிட்டார்.

முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இரண்டாம் கட்டமாக திருச்சூர், பாலக்காடு, மலப்புறம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு டிசம்பர் மாதம் 11-ஆம் தேதியும் தேர்தல் நடக்க உள்ளது.

கேரளா

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். நவம்பர் மாதம் 14-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும். நவம்பர் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும்.

நவம்பர் 22-ம் தேதி முதல் நவம்பர் 24-ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். நவம்பர் 24-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் தேர்தலுக்கான விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.

1200 உள்ளாட்சி அமைப்புகளில் 23,576 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் மாதம் 21-ம் தேதி முதல் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவிகளை ஏற்றுக் கொள்வார்கள். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு

கேரளாவில் 2 கோடியே 84 லட்சத்து 30 ஆயிரத்து 761 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஒன்றரை கோடிக்கும் அதிகமாக பெண் வாக்காளர்கள் உள்ளனர். 281 திருநங்கை வாக்காளர்களும் உள்ளனர்.

கேரளாவில் அரசியல் கட்சிகள் அடிப்படையில் மக்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு உள்ளதாக கருதுகின்றன. எனவே கேரள மாநில அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தும்.

சி.பி.எம் தலைமையில் எல்.டி.எஃப் கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் யு.டி.எஃப் கூட்டணியும், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியும் தேர்தலுக்காக வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



from India News https://ift.tt/vbk4afx