சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூர் `சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட்' நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 10 நாள்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஊதியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும். தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வேண்டும். 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட வேண்டும். தொழிலாளர்களின் நியாமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நூற்றுக்கணக்கான (90 சதவிகித ஊழியர்கள் ) சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தொழிற் சங்க மையத்தினர் (சிஐடியூ) போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுத்து இப்போராட்டத்தை முன்நின்று நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
சர்வதேச அளவில் செயல்படும் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்கள் தொழிற் சங்கங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில்லை என்பதை எழுதப்படாத சட்டமாகவே வைத்திருக்கின்றன. அதையே காரணம் காட்டி தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்து வருகிறது ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவனம்.
நிறுவனத்திற்கு எதிரிலேயே நடக்கும் இவ்வளவு பெரிய தொடர் போராட்டத்தை, கண்டும் காணாமல் `நிறுவனமே பற்றி எரிந்தாலும் உற்பத்தி - லாபம்தான் முக்கியம்' என ஒப்பந்த ஊழியர்களை வைத்து எந்தவித பாதிப்புமின்றி நிறுவனத்தின் பணியைச் செய்து வருவதாகப் போராடும் தொழிலாளர்கள் தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்துகின்றனர். இதுதவிர, போராடும் தொழிலாளர்கள் பந்தல் அமைத்திருக்கும் இடத்திற்கு அனுமதி மறுக்க வைக்கும் முயற்சி, உணவு விநியோகத்தை நிறுத்தப் பார்ப்பது, ஆதரவு தருபவர்களைத் தொந்தரவு செய்வது எனப் பல இடர்பாடுகளைக் கொடுத்து போராட்டத்தைக் கலைக்கத் திட்டமிடுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சிஐடியூ அமைப்பினர், "செப்டம்பர் 9ம் தேதி ஆரம்பித்து 10 நாட்களாகத் தொடரும் போராட்டத்தில் இதுவரை 5 முறை அரசு தலையீட்டில் ஸ்ரீபெரும்புதூர் 'சாம்சங் இந்தியா எலக்ரானிக்ஸ்' நிறுவனத்திற்கும், போராடும் தொழிலாளர்களுக்கிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உறுதியான பதில்கள் ஏதுமில்லை, தொழிற்சங்கத்திற்கு ஆங்கீகாரம் வழங்குவதையும் அந்நிறுவனம் ஏற்கவில்லை.
ஆறாவது முறையாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். அதிலும் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். 'தொழிற்சங்கம் அமைப்பது தொழிலளர்களின் உரிமை' என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. அதன்படி, நீதிமன்றத்தை நாடி சட்டப் போராட்டத்தை நடத்துவோம்" என்று உறுதியாகக் கூறிகின்றனர்.
தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்பட்டு, நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும் என்பதே போராடும் தொழிலாளர்களின் உறுதியான நிலைப்பாடாக இருக்கிறது. இல்லையெனில், போராட்டம் தொடரும் என்பதே அவர்களின் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.
from India News https://ift.tt/IOYLxXq
0 Comments