அக்டோபர் 2-ம் தேதி மது, போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இந்த மாநாட்டில் அனைத்துக் கட்சியினரும் (பா.ம.க, பா.ஜ.க தவிர) கலந்துகொள்ளலாம் என வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்தது, அரசியல் களத்தில் பேசுபொருளானது.
குறிப்பாக அ.தி.மு.க-வினரும் மாநாட்டில் பங்கேற்கலாம் என திருமாவளவன் கூறியதால், இந்த மாநாடு வி.சி.க தேர்தல் கூட்டணிக்கான யுத்தியாக இருக்கலாம் என்ற பேச்சுகள் எழுந்தன. திருமாவளவன் மாநாட்டையும் தேர்தல் கூட்டணியையும் முடிச்சுப்போட வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
வி.சி.க - தி.மு.க கூட்டணியில் விரிசல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என திருமாவளவன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோ சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்றைய தினம் முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினார் திருமாவளவன்.
படிப்படியாக மது ஒழிப்பைக் கொண்டுவருவதற்கான கோரிக்கையை முதல்வரிடத்தில் வைத்ததாகத் திருமாவளவன் தெரிவித்தார். மேலும் தி.மு.க சார்பில் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அ.தி.மு.க மாநாட்டில் பங்கேற்குமா என்பது கேள்விக்குறியாக இருந்துவருகிறது.
பா.ஜ.க, பா.ம.க தனிக் கூட்டணியில் இருக்கின்றன. பா.ம.க இல்லாத அ.தி.மு.க கூட்டணியில், வி.சி.க அங்கம் வகிப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இதனால் வி.சி.க-வின் மாநாட்டின் அ.தி.மு.க கலந்துகொள்ளும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தி.மு.க-வுடன் அ.தி.மு.க மேடையைப் பகிர்ந்துகொள்ளுமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க-வைப் பொறுத்தவரையில் தி.மு.க-தான் எங்களுக்கு எதிரணி. மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காக நல்ல மனமுடையவர்கள், எங்கள் கட்சியுடன் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் கூட்டணிக்கு வந்தால் இணைத்துக்கொள்வோம்" என்றார்.
வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு, "அ.தி.மு.க-வுக்கு முறையான அழைப்பு விடுக்கப்பட்டால், மூத்த தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம்" என பதிலளித்துள்ளார்.
from India News https://ift.tt/Kbr5LXM
0 Comments