'கட்சி பிரச்னைகளில்கூட ஆதாயம்; மா.செ மீது கொதிப்பில் கட்சியினர்?!' - ஓயாத தென்காசி திமுக சர்ச்சை

தென்காசி மாவட்டத்தில், ஆரம்பம்தொட்டே மாவட்ட தி.மு.க.வுக்குள் அடிதடி, புகார்கள் என பரபரப்புக்கு பஞ்சமில்லாத நிலை தொடர்கிறது. அறிவாலய தலைமையின் அதிரடி ஆக்‌ஷனுக்கு பிறகு நிகழ்ந்த மாவட்ட செயலாளரின் மாற்றமும் கூட, தென்காசி மாவட்டத்தில் சிறிதும் மாற்றம் தரவில்லை என்கிறார்கள் உடன் பிறப்புகள். மாறாக மாவட்ட செயலாளர் ஜெயபாலன், கலெக்ஷன், கமிஷன் என தனி ரூட்டில் பயணிப்பதால், கட்சி முன்பிருந்ததை விட மோசமான நிலைக்குத்தான் சென்றுள்ளது என பரபரப்பை கிளப்பினர் தி.மு.க.வட்டத்தினர்.

மாவட்டச் செயலாளர் ஜெயபாலன் மீது அடுக்கடுக்கான புகார்களை கொட்டிய தி.மு.க.தொண்டர்கள் சிலர் இதுகுறித்து நம்மிடம் பேசுகையில், "தென்காசி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன். முன்னாள் மா.செ.வான சிவபத்மநாதனின் பதவி பறிப்புக்கு பின்னர், தலைமையால் நியமிக்கப்பட்ட இவர், கட்சிக்குள் பிளவுப்பட்டு கிடந்த தொண்டர்களை சமாதானப்படுத்த இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தன் அதிகாரத்திற்குட்பட்டு ஆட்களை நியமிக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கும், பரிந்துரைக்கும் சொந்தக்கட்சி தொண்டர்களிடமே கமிஷன் கேட்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் பரிசீலனையின்போது, கனிமொழி எம்.பி.யிடம் நேரடியாக காய்நகர்த்தி ராணி ஸ்ரீகுமாரை வேட்பாளராக நிறுத்தியதன் மூலமாக தென்மாவட்டத்தில் பவர் சென்டராக விளங்கும் கனிமொழி எம்.பியிடம் தனக்கு நல்ல செல்வாக்கு உள்ளதென காட்டிக்கொண்டு, ரியல் எஸ்டேட், கான்டிராக்ட் விஷயங்களில் கணிசமாக தொகை வசூலித்து விடுகிறார்.

நினைவு மேடை

தி.மு.க. வசம் உள்ள பேரூர், நகர, கிராம பஞ்சாயத்துகளில், கட்சியினரிடையே ஏதேனும் பிரச்னை என்றால், அதில் தனக்கென்ன லாபம் கிடைக்கிறதென கணக்கு பார்த்துத்தான் மா.செ. தலையிடுகிறார். அமைப்பு நிர்வாகிகளுடன் ஒத்துழைப்பில்லாமல் செயல்படுவதால் எங்களால் முழுமையாக பணியாற்ற முடிவதில்லை. இந்தநிலையில் பணிகளில் சுணக்கத்தை சுட்டிக்காட்டி, தலைமை கேட்கும் கேள்விகளுக்கு எங்களையே நேரடியாக பலிகடாவாக்குவது எந்தவகையில் நியாயம். சமீபத்தில் மேலகரம் பஞ்சாயத்தில் பேரூர் கழகச் செயலாளராக உள்ள சுடலை, உட்கட்சிபூசலில் ஏற்பட்ட முன்விரோத்தால் மாவட்ட பிரதிநிதியான சம்முக்குட்டியை கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தின் ஆரம்ப பகை மாவட்ட செயலாளருக்கு நன்கு அறிந்ததே. அப்போதே இதற்கு தீர்வு கண்டிருந்தால் இவ்வளவு பெரிய அதிர்ச்சிகர சம்பவம் நடந்திருக்காது" என படபடக்க பேசினார்கள்.

மற்ற பகுதிகளான செங்கோட்டை, கடையம் மற்றும் தென்காசி வட்டத்தில் கட்சி சீனியர்கள் சிலரிடம் கேட்கையில், "தேர்தலின்போது, மாவட்ட செயலாளர் ஜெயபாலன் மூலமாக பரிந்துரைக்கப்பட்டு, கனிமொழி எம்.பி.யின் ஆதரவின்பேரில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியவர்தான் ராணி ஸ்ரீகுமார். வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரின் வெற்றிக்குப்பிறகு தென்காசி மாவட்டத்தில், தொகுதியின் பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனை மீறிய செல்வாக்கு, தனக்கு இருப்பதாக காட்டிக்கொள்கிறார் ஜெயபாலன். இதன்மூலம், தென்காசி மாவட்டத்தில் கட்சியே நான்தான் என்ற பிம்பத்தை உருவாக்கி சொந்தக்கட்சி பிரச்னைகளில் கூட ஆதாயம் தேட ஆரம்பித்துவிட்டார்.

தற்போதுகூட, சுரண்டையில் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்காக அமைத்திருக்கும் மேடை ஏற்பாடுகளுக்காக தனது பொறுப்பை பயன்படுத்தி, காண்டிராக்டர்களிடம் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறார் என அவரின் நெருங்கிய வட்டத்தினரே கூறுகின்றனர். ஜெயபாலன் செயல், பதவியில் இருப்பவர்களுக்கு ஆதரவாகவும், சாதாரண தொண்டனின் மனக்குமுறலுக்கு எதிராகவும் இருப்பதை மறுப்பதற்கில்லை. மொத்தத்தில் தென்காசி மாவட்ட தி.மு.க.வில் கட்சி கட்டுப்பாட்டுக்குள் இல்லை. கலகம் மற்றும் உட்கட்சிப்பூசலில்தான் கட்சி நடக்கிறது" என்றனர்.

அமைச்சருடன்..

குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்து மாவட்ட செயலாளர் ஜெயபாலன், "அடிப்படையில் எளிய தொண்டனாக இருந்து, இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தவன் நான். என்மீது சொல்லப்படும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன். பொறுப்பாளர்கள் யாருடைய சுதந்திரத்திலும் நான் தலையிடுவதில்லை. யாரையும் கட்டுப்படுத்தி செயல்படவிடாமல் தடுக்கவும் இல்லை. மேலும் கட்சிக்குள் கூறப்படுவதைபோல, வசூல் நடத்தி கலைஞர் நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யவில்லை. எல்லாமே என்னுடைய சொந்த செலவில் நடக்கிறது. கமிஷனையும், கலெக்ஷனையும் முக்கியமாக கருதி செயல்பட்டிருந்தால் கட்சி என்மீது எப்பவோ நடவடிக்கை எடுத்திருக்கும். கட்சிக்குள் என்னை பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே கிளப்பிவிட்ட அபாண்டமான குற்றச்சாட்டுகள் தான் இவை" என மறுத்தார்.

தொகுதியின், பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், கட்சிக்குள் நல்லவிதமாக செயல்பட்டு வருகிறார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் கழகப்பெயரை காப்பாற்றும்படி சிறப்பான தேர்தல் முடிவைத்தான் தேடித்தந்திருக்கிறார். கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்கள், இதுபோல புகாரை கிளப்பிவிட்டுள்ளனர். ஜெயபாலன், மூத்த நிர்வாகிகளுடன் ஒருங்கினைந்தே செயல்படுகிறார், எந்த குறையும் இல்லை" என்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/kjzruSV

Post a Comment

0 Comments