Bangladesh தேசத்தை விட்டே வெளியேறிய `தேசத்தந்தை' மகள்; வங்க வரலாறும் Sheik Hasina வீழ்ந்த கதையும்!

வெடித்த இட ஒதுக்கீடு போராட்டமும்... அதகளமான வங்கதேசமும்!

இந்தியாவின் அண்டை மாநிலமான வங்கதேசத்தில் 17 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் ஷேக் ஹசீனா ஆட்சி செய்துவந்தார். கடந்த ஜூலையில் வஙகதேசத்தின் பிரதமரும் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா, புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார். அதில், 'வங்கதேச விடுதலைக்காக கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் பங்கேற்ற முன்னாள் வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்' எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பு வெளியான மறுகணமே மாணவ அமைப்புகள் கொதித்து போனார்கள். ஆங்காங்கு போராட்டம் வெடித்தது. மேலும் இந்தச் சட்டத்திற்கு எதிராக அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஷேக் ஹசீனா - Sheik Hasina

அதை விசாரித்த நீதிமன்றம், 'இட ஒதுக்கீட்டு அளவை 30 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதமா குறைக்க வேண்டும்' என உத்தரவிட்டது. மாணவர்களின் தீவிர போராட்டமும், நீதிமன்ற உத்தரவும் ஷேக் ஹசீனாவின் முடிவை மாற்றிக்கொள்ளச் செய்தது. ஆனால் மாணவ அமைப்புகளின் போராட்டம் மட்டும் குறையவில்லை. அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டன, பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து ஹசீனா, நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தார். மாணவ அமைப்புகள் எதையும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

'போராட்டம்... சூறையாடப்பட்ட பொது சொத்துகள்..'

தலைநகர் டாக்காவில் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். இந்தசூழலில்தான், "வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறைக்கு எதிர்க்கட்சியினரின் மாணவர் அமைப்புகள்தான் காரணம். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் அல்ல. அனைவருமே குற்றவாளிகள்தான். போராட்டத்தை கைவிடவில்லை என்றால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன்" என ஹசீனா கொதித்தார். மறுபக்கம் மாணவ அமைப்புகள், 'பிரதமர் பதவியில் இருந்து ஹசீனா வெளியேற வேண்டும்' என மாணவ அமைப்புகள் தெரிவித்தன.

ஷேக் ஹசீனா

மேலும் அவர்கள் டாக்காவை நோக்கி நெடிய பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்தச் சூழலில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ராணுவ தலைவர் ஜெனரல் வக்கார் உஸ் ஸமான் உத்தரவிட்டார். ஆனால் கீழ்நிலை ராணுவ அதிகாரிகள் அதற்கு தயாராக இல்லை. அந்த நிலையில்தான் திட்டமிட்டபடி கடந்த 5-ம் தேதி ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேரணியாக பிரதமர் அலுவலகம் நோக்கி வந்த போராட்டக்காரர்கள், வழிநெடுகிலும் பெரும் சேதாரத்தை ஏற்படுத்தினார்கள்.

'தீவிரமான போராட்டம்... தப்பிய ஹசீனா..'

ஒரு கட்டத்தில் பிரதமரின் அலுவல் இல்லத்திற்குள் நுழைய நேரிடும் நிலை ஏற்பட்டது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதிய ஹசீனா, சகோதரியுடன் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக வங்கதேசத்தில் இருந்து தப்பினார். இதற்கிடையில் மக்களிடம் பேசிய ராணுவ தளபதி வக்கார் உஸ் ஸமான், "ஹசீனா பதவியில் இருந்து விலகிவிட்டார். மேலும் அவர் நாட்டை விட்டே தப்பிச் சென்றுவிட்டார்" என்றார். இன்று ஹசீனா சொந்த நாட்டை விட்டே தப்பி சென்றிருக்கிறார். ஆனால் தொடர்ந்து 5-வது முறையாக பதவிக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல.

ஷேக் ஹசீனா, பிரதமர் மோடி

ஷேக் ஹசீனா கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடானது. அதாவது வங்கதேசத்தின் ஸ்தாபக தந்தையும் முதல் ஜனாதிபதியுமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மூத்த மகள், ஹசீனா. 1980-களில் ஜெனரல் ஹுசைன் முஹம்மது எர்ஷாத் ஆட்சிக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். 1996-ம் ஆண்டு முதன்முறையாக அரசமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு கலீதா ஜியா தலைமையிலான பி.என்.பி-யிடம் தோல்வியடைந்தார். 2006-2008-ல் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது ​​மிரட்டிப் பணம் பறித்த குற்றச்சாட்டில் ஹசீனா கைதுசெய்யப்பட்டார். பின்னர் 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெற்ற வெற்றி, தற்போது வரையில் தொடர்கிறது. முன்னதாக 1975-ம் ஆண்டு அவரது கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரி தவிர முழு குடும்பமும் கொல்லப்பட்டது.

அதாவது கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையானவர்கள் பெங்காலிதான் பேசுகிறார்கள். 1949-ல் பாகிஸ்தானில் உருது மட்டுமே ஒரே அதிகாரபூர்வ தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. முகம்மது அலி ஜின்னா கிழக்கு வங்கத்தில் இருக்கும் மக்களும் உருதுவையே தங்கள் தேசிய மொழியாக ஏற்க வேண்டும் என்று அறிவித்தார். இதற்கு கிழக்கு பாகிஸ்தானில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அந்த அதிருப்தியை ஒருங்கிணைத்து முஜிபுர் ரஹ்மான் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தார். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார். தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறி சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். வெளியிலும் மக்கள் கிளர்ச்சி வெடித்தது. இதையடுத்து முஜிபுர் ரஹ்மான் விடுதலை செய்யப்பட்டார். அந்த நேரத்தில் முஸ்லீம் லீக் கட்சியிலிருந்து விலகி அவாமி லீக் கட்சியில் இணைந்தார்.

இந்திரா காந்தியுடன் ஷேக் முஜிபுர் ரஹ்மான்

இந்தச் சூழலில்தான் கடந்த 1956-ம் ஆண்டு கிழக்கு வங்கம், கிழக்கு பாகிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது 'வங்க மொழியை அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும்' என முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார். பிறகு 1958-ம் ஆண்டில் அரசியல் அமைப்பை ரத்து செய்துவிட்டு ராணுவ ஆட்சியை ஜெனரல் அயுப் கான் கொண்டு வந்தார். இதை எதிர்த்து மீண்டும் முஜிபுர் போராட்டம் நடத்தினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 1961 வரை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்தவர் வங்க மக்களுக்காக போராடினார். இதையடுத்து வங்காளிகளால் வங்கபந்து (வங்காளிகளின் நண்பர்) என அழைக்கப்பட்டார்.

இதையடுத்து 1970-ல் நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத் தேர்தல்களில் முஜிபுர் ரஹ்மான் தலைமையிலான அவாமி லீக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று வென்றது. ஆனால் பாகிஸ்தான் ராணுவமும், இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் முஜிபுர் ரஹ்மான் பாகிஸ்தான் பிரதமராக வருவதை எதிர்த்தனர். மேலும் பூட்டோவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்கலாம் என முடிவு செய்தனர். அதன்படி பூட்டோ ஜனாதிபதியாகவும் முஜிபுர் பிரதமராகவும் பதவியேற்க முடிவு செய்தார்கள். ஆனால், அப்போதைய ஜனாதிபதி யாஹியா கான் அரசு அமைவதைத் தள்ளிப்போட்டார். மேலும் ராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவாமி லீக் கட்சியை தடைசெய்தார். மேலும் முஜிபுர் கைதும்செய்யப்பட்டார். இதனால் மீண்டும் புரட்சி வெடித்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் முஜிபுர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்டார்.

வங்கதேசம்

அப்போதுதான் முக்தி வாஹினி படை உருவானது. மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். இந்திய ராணுவம் சம்பந்தப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்தது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் முக்தி வாஹினி படை பாகிஸ்தான் ராணுவத்தினருடன் போரிட்டது. இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது. இதையடுத்து வங்க தேசம் உருவானது. முஜிபுர் அதன் முதல் பிரதமரானார். ஆனால் ராணுவத்தினர் செய்த சதியினால் 1975-ல் வெளியூரில் படித்துக்கொண்டிருந்த இரு மகள்கள் தவிர குடும்ப உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். பிறகு 1975-ம் ஆண்டில் முஜிபுர் கொல்லப்பட்டார்.

ஆனால் ஜெர்மனியில் இருந்ததால் மகள்களான ஷேக் ஹசீனாவும், அவரது சகோதரி ஷேக் ரெஹானாவும் மட்டுமே உயிர் பிழைத்தனர். 1981-ல் வங்கதேசம் திரும்பிய ஷேக் ஹசீனா, மக்களாட்சி மலர்வதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1991-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தோல்வியடைந்தாலும், 1996-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வங்கதேசத்தின் பிரதமராக முதல்முறையாக பொறுப்பேற்றார் ஷேக் ஹசீனா. அப்போது முதல் 15 ஆண்டுக்காலம் அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். இந்தச் சூழலில்தான் மாணவர் போராட்டத்தால் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்திருக்கிறது.

ஷேக் ஹசினாவுடன் மோடி

ஆனால் பதவியில் இருக்கும் வரையில் இந்தியாவுடன் நட்பை பேணி வந்தார். சமீபத்தில்கூட வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கான அனுமதியை இந்தியாவுக்குக் கொடுத்தார். மேலும் வங்கதேச இந்திய எதிர்ப்பு போராட்டக் குழுக்களை ஹசீனா கட்டுப்படுத்தினார். ஆனால் அந்த நாட்டில் ஹசீனாவின் செல்வாக்கு குறைந்த பிறகு, இந்தியாவுக்கு எதிரான குரலும் வலுவாகியிருக்கிறது. இது வங்கதேசத்தில் என்னவெல்லாம் நடக்கப்போகிறது?, இந்தியா, சீனாவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!



from India News https://ift.tt/BtPA1CK

Post a Comment

0 Comments