அரசுப் பணிகளில் ஓய்வு வயதை 62-ஆக கூட்டினால்...?!

சமீபத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்துவதாக செய்தி ஒன்று மிகவும் வேகமாக பரவியது. இந்த செய்தியின் உண்மையை ஆராயும்போது 'இது பொய்யான தகவல்' என்பது தெரியவந்தது.

பொதுவாக இந்தியாவில் மத்திய அரசு வேலைக்கு ஓய்வு வயது 60. கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தியது. ஆனால் 2021-ம் ஆண்டுக்கு முன்னரே, உயர் பதவிகளில் இருக்கும் சில அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 60 நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

ஓய்வு வயது 62-ஆ?!

இந்த நிலையில் தான் சமீபத்தில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது. 'இது பொய்யான தகவல்' என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.

தற்போது இருக்கும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறித்தும், ஓய்வு வயதை உயர்த்துவது குறித்தும் சிலரிடம் கருத்து கேட்டோம்...

ஆர்.ஆறுமுகம், பொதுச் செயலாளர், AITUC:

பணி ஓய்வு பெறுபவர்களுக்கு கொடுக்க வேண்டிய பி.எஃப், பணிக்கொடை, ஓய்வூதியம் போன்றவைகள் அரசுக்கு நிதி சுமையை கூடுதலாக்கும் என்பது தான் ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தியதின் முக்கிய காரணம்.

தமிழ்நாட்டில் அரசு துறைகளில் பணி ஓய்வு மற்றும் இறப்பு காரணமாக கிட்டதட்ட 5 லட்சத்திற்கும் மேலான காலி பணியிடங்கள் உள்ளன. தற்போது ஓய்வு வயதின் விளிம்பில் இருப்பவர்கள் ஓய்வு பெற்றால், இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரிக்கும்.

ஆர்.ஆறுமுகம், பொதுச் செயலாளர், AITUC

ஒருவேளை இவர்களுக்கு ஓய்வு வயதைக் கூட்டினால், தற்போது படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்போகும். ஏற்கனவே மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிரந்தர தன்மை உள்ள பணிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இதனால் இளைஞர்களுக்கு தங்களது எதிர்காலம் குறித்து அரசு மீது நம்பிக்கையின்மை ஏற்படும்.

மேலும் அரசு பணிகளில் பல துறைகளில் சி மற்றும் டி பிரிவில் பணிபுரிந்து வரும் ஊழியர்களின் உடல்நிலையையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். இப்போது இருந்து வரும் காலி பணியிடங்களே, இவர்களது பணிச் சுமை கூட்டிக்கொண்டு தான் போகிறது. இந்த நிலையில் ஓய்வு வயதையும் கூட்டினால் உடல்நிலைப் பாதிப்பு, மனநிலை பாதிப்பு என மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

அதனால் பணி ஓய்வு நீட்டிப்பு என்பது இல்லாமல் இருப்பது தான் அனைவருக்கும் நல்லது".

எம்.ராதாகிருஷ்ணன், அறப்போர் இயக்கம்:

"அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு என்பது பல லட்ச இளைஞர்களின் வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்டது ஆகும்.

இன்னொரு பக்கம், ஒவ்வொரு துறைக்கும் அதில் இருக்கும் பிரிவுகளுக்கும் ஏற்ப ஊழியர்களின் பணி மாறுபடும். இதனால் ஓய்வு வயதைக் கூட்டும்போது தூய்மை பணியாளர்கள் போன்ற வேலைப்பிரிவுகளில் இருப்பவர்களின் உடல்நிலையை கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் இன்றைய காலக்கட்டத்தில் தினம் தினம் தொழில்நுட்பங்கள் வளர்ந்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பணி ஓய்வுக்காலத்தை அதிகரிக்கும்போது, இவர்களால் அந்தத் தொழில்நுட்பத்தை எளிதாக ஏற்றுக்கொண்டு செயல்பட முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி.

M.ராதாகிருஷ்ணன், அறப்போர் இயக்கம்

இவை அனைத்தையும் வைத்து மட்டும் 'இப்போதிருக்கும் பணி ஓய்வுக்காலமே போதும்' என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. அதனால் பணி ஓய்வு வயதைத் நிர்ணயம் செய்ய நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும். அவர்களின் பரிந்துரைப்படி ஓய்வு வயதை முடிவு செய்வது அனைவருக்கும் நல்லது.

இப்போது அரசு தரப்பில் இந்த செய்தி வதந்தி என்று கூறியுள்ள போதும், இது போன்ற வதந்திகள் மீண்டும் வந்து கொண்டே தான் இருக்கும். எனவே, இது போன்ற செய்திகளுக்கு விளக்கம் பொதுவெளியில் அறிவிக்கப்படவேண்டும்.

உதாரணத்திற்கு, ஏற்கனவே இருக்கும் உச்சபட்ச வயது எதன் அடிப்படையில் சட்டமாக்கப்பட்டது, அதற்கான விளக்கமும் சேர்த்து சொல்லப்படவேண்டும்."

அரசு பணித் தேர்வுக்கு தயாராகிவரும் தேர்வர் வைஷ்ணவி:

"அரசு ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு என்ற செய்தியை கேட்டதும் எனக்கு ரொம்பவே அதிர்ச்சியா தான் இருந்துச்சு. என்னை மாதிரி லட்சக்கணக்கான பேருக்கு அரசு வேலைங்கறது பெரிய கனவு.

என்ன தான் அரசு வேலையில லட்சக்கணக்கான காலி பணியிடங்கள் இருக்குனு சொன்னாலும், எக்ஸாம் எழுதிட்டு காத்திட்டு இருங்கறவங்களும் நிறைய பேரு. இதுவே இப்படியிருக்கையில, ஓய்வு வயதைக் கூட்டும்போது அதுவும் நம்ம வேலைய பாதிக்குமோனு ரொம்ப பயமா இருந்துச்சு. அப்படியில்லனு தெரிஞ்சதும் தான் நிம்மதியாவே இருந்துச்சு.

பணி ஓய்வு வயசைக் கூட்டாம, காலி பணியிடங்களுக்கு இளைஞர்களை கொண்டுவந்தா டெக்னாலஜிய புரிஞ்சுக்கறது அல்லது துறைக்கு புதுசா கொண்டுவர்றது, வேலைகளை இன்னமும் சீக்கிரம் முடிக்கறதுனு நிறைய நல்ல மாற்றங்கள் அரசு துறைகள்ல நடக்கும்" என்று கூறுகிறார்.



from India News https://ift.tt/0yAYaOx

Post a Comment

0 Comments