`நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவுமே தெரியாதா?' - பட்டியலின பெண் MLA-விடம் கோபப்பட்ட நிதிஷ் குமார்

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் பேசுபொருளாக இருக்கும் மாநிலம் பீகார். அந்த பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், மாநில முதல்வருமான நிதிஷ் குமார், அவ்வப்போது பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் கூறி பின்னர் மன்னிப்பும் கேட்பார். கடந்த ஆண்டு கூட, `பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தால், குழந்தைப் பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், கணவரை எப்படிச் சமாளிப்பது என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்' என்று சட்டமன்றத்திலேயே கூறியிருந்தார்.

நிதிஷ் குமார்

அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க தரப்பிலிருந்து எதிர்ப்புகள் பலமாகக் கிளம்ப, தனது கருத்தைத் திரும்பப் பெற்று மன்னிப்பும் கேட்டார். இந்த நிலையில், அதேபோல சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ-வை நோக்கி பேசியிருக்கும் விஷயம் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. முன்னதாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாநில இட ஒதுக்கீட்டை 65 சதவிகிதமாக உயர்த்தும் முன்மொழிவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது, மத்தியில் ஆளும் பா.ஜ.க கூட்டணியில் அங்கம் வகித்து மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தராதது போன்றவற்றைக் குறிப்பிட்டு சட்டமன்றத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஐக்கிய ஜனதா தளத்தை தாக்கின.

அதையடுத்து, இட ஒதுக்கீட்டை உயர்த்தும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருப்பது பற்றியும், பீகாரின் கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவித்திருப்பது பற்றியும் முதல்வர் நிதிஷ் குமார் விளக்க ஆரம்பித்தார். அப்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளம் பெண் எம்.எல்.ஏ ரேகா பஸ்வான் குறுக்கிடுவதற்காக எழுந்ததைக் கண்டு கோபப்பட்ட நிதிஷ் குமார், ``நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாதா... பாருங்கள் அந்தப் பெண் பேசுகிறார்.

நிதிஷ் குமார்

எதிர்க்கட்சியினர் பெண்களுக்கு எதாவது செய்திருக்கிறார்களா... நாங்கள் பேசுவோம், நீங்கள் கேட்கவில்லையென்றால் அது உங்களின் பிரச்னை. சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்கு இந்த அரசு நிறைய செய்திருக்கிறது'' என்றார்.

இதற்கு தன்னுடைய X சமூக வலைதளப் பக்கத்தில் எதிர்வினையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், `` `நீங்கள் ஒரு பெண், உங்களுக்கு எதுவும் தெரியாதா?'. பெண்களுக்கு எதிராக மலிவான, தேவையற்ற, நாகரீகமற்ற மற்றும் கீழ்த்தரமான கருத்துகளை வெளியிடுவது முதல்வர் நிதிஷ் குமாரின் வழக்கமாகிவிட்டது.

தேஜஸ்வி யாதவ்

இது மாநிலத்துக்கு மிகவும் தீவிரமான மற்றும் கவலையளிக்கும் பிரச்னை. சில நாள்களுக்கு முன்பு, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஒருவரின் அழகு குறித்து மோசமான கருத்து தெரிவித்த முதல்வர், இன்று இரண்டு முறை எம்.எல்.ஏ-வான பட்டியலின பெண் ரேகா பாஸ்வான் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். நிதிஷ் குமார் சிறந்த அறிவாளி. அவரைத் தவிர, யாருக்கும் எதுவும் தெரியாது" என்று விமர்சித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/aMAkuLY

Post a Comment

0 Comments