Union Budget: `கூட்டணிக்கு என்றே ஒரு மத்திய பட்ஜெட்டா?’ - ஓர் அலசல்

2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பல்வேறு கேள்வி கூத்துகளுக்கு உள்ளாகியிருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு பா.ஜ.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஆளும் மாநிலங்களுக்கே பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் வாரிவழங்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியிருப்பதோடு, எதிர்வரும் நிதி ஆயோக் கூட்டத்தையும் புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்திருக்கின்றனர்.

மத்திய பட்ஜெட் - மோடி - நிதிஷ் குமார்

மத்திய பட்ஜெட் 2024-25 ஒரு பார்வை:

ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டை(Union Budget) தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வாசித்தார். அந்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், வரி சலுகைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு, நாடு முழுவதும் ஒரு கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய சான்றிதழ் மற்றும் பிராண்டிங் உதவி, கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்கு ரூ. 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு, நாடு முழுவதும் கிராமம், நகரங்களில் உள்ள ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு, உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கல்விக்கடன், வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகையுடன் 3 திட்டங்கள், விண்வெளி பொருளாதாரத்தை அதிகரிக்க ரூ.1,000 கோடியில் கூட்டு மூலதன நிதி, தேசிய தொழில் வழித்தடம் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 12 தொழில்துறை பூங்காக்கள் அறிவிப்பு, முத்ரா கடனுதவி திட்டத்தின் உச்சவரம்பு 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக அதிகரிப்பு, சூரிய சக்தி திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல வரிச்சலுகைகளைப் பொறுத்தவரையில், ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு, 25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு, லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு, தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்ககான சுங்க வரி 6 சதவீதமாக குறைப்பு, பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைப்பு, மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கு அடிப்படை இறக்குமதி வரிவிகிதம் குறைப்பு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 35 சதவீதமாக குறைப்பு, அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு என பலவற்றிற்கு வரிச்சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பொதுவான நலத்திட்டங்கள் இத்தனை இருந்தாலும் மாநிலங்களுக்காக அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள், நிவாரணம், நிதி ஒதுக்கீட்டில் கடுமையான பாரபட்சம் காட்டப்பட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்

பீகார், ஆந்திராவுக்கு மட்டும் தனி கவனிப்பு:

குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாத பா.ஜ.கவுடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதீஷ்குமாரின் பீகார் மாநிலத்துக்கும், சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர மாநிலத்துக்கும் நிதியை வாரிவழங்கியிருக்கிறது பா.ஜ.க அரசு. குறிப்பாக, பீகார் மாநிலத்துக்கு சாலைத் திட்டங்களுக்காக ரூ.26,000 கோடியும், மின்சார திட்டங்களுக்காக 21,400 கோடியும், வெள்ளம் தடுப்புக்காக 11,500 கோடியும் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஆந்திர தலைநகர் வளர்ச்சிக்கு சிறப்பு நிதியுதவிகள்,போலவரம் பாசன திட்டத்தை விரைவாக நிறைவேற்ற நிதி, விசாகப்பட்டினம்- சென்னை இடையே தொழில்துறை மேம்பாட்டு வழித்தடம், சென்னை-ஹைதராபாத் இடையே தொழில்துறை மேம்பாட்டு வழித்தடம் ஆகிய திட்டங்களுக்கு கூடுதல் நிதியுதவி, ஆந்திராவின் ராயலசீமா, பிரகாசம், வடக்கு கடற்கரையோர பின் தங்கிய பகுதிகளுக்கு மானியம் என பல்வேறு சிறப்புத் திட்ட நிதிகளும் ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Union Budget | மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்

இந்த இருமாநில முதல்வர்களும் தங்கள் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என பிடிவாதம் பிடித்துவந்த நிலையில் அவர்களை சமாதானம் செய்வதற்காகவும், கூட்டணியில் அவர்களின் இருப்பை தக்கவைத்துக்கொண்டு ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தந்திரமாக மத்திய பட்ஜெட்டில் மற்ற மாநிலங்களை புறக்கணித்துவிட்டு பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு மட்டும் பல்லாயிரம் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது பா.ஜ.க என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் உரையின்போது பீகார், ஆந்திர மாநிலங்களின் பெயர்கள் 5 முறை உச்சரிக்கப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணியின் எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, டெல்லி, பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களின் பெயர் ஒருமுறை கூட உச்சரிக்கப்படவில்லை. வழக்கமாக சொல்லப்படும் திருக்குறள் கூட உரையில் சேர்க்கப்படவில்லை.

எரிச்சலடைந்த எதிர்க்கட்சிகள்:

ஒருதலைப் பட்சமான இந்த மத்திய பட்ஜெட்டை எதிர்கட்சித் தலைவர்கள் சரமாரியாக விமர்சித்திருக்கின்றனர். குறிப்பாக காங்கிரஸ் எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ``இது பா.ஜ.கவின் பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்கான பட்ஜெட். கூட்டணி கட்சிகள்ஆளும் மாநிலங்களை திருப்திபடுத்தம் விதமான பட்ஜெட். சாமானிய இந்தியர்களுக்கு எந்தப் பலனும் தராமல் அம்பானி, அதானிக்கு பலன்தரும் பட்ஜெட்!" என விமர்சித்திருக்கிறார்.

தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, ``வால் நாயை ஆட்டுகிறது என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு, அதுதான் இந்த பட்ஜெட்டிலிருக்கும் அரசியல் செய்தி!" என்று கிண்டலடித்திருக்கிறார். அதேபோல, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, ``இது ஆந்திரா-பீகார் பட்ஜெட்! அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்!" என்றிருக்கிறார்.

ராகுல் காந்தி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ``மத்திய பாஜக ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களைங்களையும் நிதியமைச்சர் மறந்தே போய்விட்டார். தமிழ்நாடு என்ற சொல்லே நிதி நிலை அறிக்கையில் இல்லை என்று சொல்வதைவிட, மத்திய பாஜக ஆட்சியாளர்களின் சிந்தனையிலும், செயலிலும் தமிழ்நாடு இல்லை. பாரபட்சமும் ஏமாற்றமும்தான் இந்த பட்ஜெட்டில் இருக்கிறது. மைனாரிட்டி பா.ஜ.கவை, மெஜாரிட்டி பா.ஜ.கவாக ஆக்கிய ஒரு சில மாநிலக் கட்சிகளை திருப்திப்படுத்தும் வகையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். அறிவித்திருக்கிறாரே தவிர, அதையும் நிறைவேற்றுவார்களா என்பது சந்தேகம்தான்!" என விமர்சித்திருக்கிறார்.

Union Budget - ஸ்டாலின் - திமுக

அதேபோல அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழ்நாட்டின்மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது!" காட்டமாக விமர்சித்திருக்கிறார். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், ``NDA பட்ஜெட்டுக்கு வாழ்த்துகள். விரைவில் INDIA பட்ஜெட் வரும் என நம்புகிறோம்!" என தன்பாணியில் கிண்டலடித்திருக்கிறார்.

மேலும், உத்தவ் தாக்கரே சிவசேனாவின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, ``இந்த பட்ஜெட்டை `பிரதமர் அரசைக் காப்பாற்றிக்கொள்ளும் திட்டம்' என்றுதான் அழைக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த அரசை காப்பாற்றிக்கொள்ள தங்கள் கூட்டாளிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பீகார், ஆந்திராவுக்கு நிதி வழங்கியிருக்கிறார்கள். மத்திய அரசு மகாராஷ்டிராவை தொடர்ந்து புறக்கணித்துவருகிறது" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார். எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் இதர மாநில கட்சிகளும் பா.ஜ.கவின் இந்த பட்ஜெட்டை விமர்சித்திருக்கின்றன.

ஏழு முறை பட்ஜெட், ஏழு நிற புடவைகள்

இந்த நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``பட்ஜெட்டில் நிறைய மாநிலங்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லையென்றும், இரண்டு (பீகார், ஆந்திரா) மாநிலங்களைப் பற்றி மட்டுமே பேசியதாகவும் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) கூறுகின்றனர். காங்கிரஸ் இந்த நாட்டில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. பல பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்திருக்கிறது. அனைத்து பட்ஜெட்டுகளிலும், அனைத்து மாநிலங்களின் பெயர்களையும் குறிப்பிடும் வாய்ப்பு கிடைக்காது என்பது காங்கிரஸுக்கு நன்றாகத் தெரியும்.

கடந்த பிப்ரவரி மற்றும்இப்போது தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிறைய மாநிலங்களின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை. உதாரணமாக இதில், மகாராஷ்டிராவின் பெயரை நான் குறிப்பிடவில்லை. ஆனால், மகாராஷ்டிராவின் வடாவன் பகுதியில் துறைமுகம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருக்கிறது. இதற்கு, ரூ. 76,000 கோடி நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது, மகாராஷ்டிராவின் பெயரை நான் குறிப்பிடாததால், மகாராஷ்டிரா புறக்கணிக்கப்படுகிறது என்று அர்த்தமா... சில மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடாததால் இந்திய அரசின் திட்டங்கள் அங்கு செல்லாது என்று அர்த்தமா...

ஆனால், நம் மாநிலங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் மேற்கொள்ளும் திட்டமிட்ட முயற்சிதான் இது. நான் சவால் விடுகிறேன், காங்கிரஸ் தனது முந்தைய பட்ஜெட்டுகளில் அனைத்து மாநிலங்களையும் குறிப்பிட்டிருக்கிறதா?” என நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.

இதே போல, செய்தியாளர்களை சந்தித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இது காங்கிரஸ் ஆட்சி காலத்தை விட, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 7 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.” என தெரிவித்தார்.

இருப்பினும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், நிதி ஆயோக் கூட்டம் புறக்கணிப்பு என அதிரடி ஆட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/zH5cd2E

Post a Comment

0 Comments