மத்தியில் பா.ஜ.க தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அதிகாரத்துக்கு வந்த பிறகு, மத்திய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் தொடர்பான திட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
முதன்முறையாக வேலையில் சேரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு முதல் மாத சம்பளமாக அரசு சார்பில் நிதி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்பது முன்னுரிமைத் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். அதன்படி, வேளாண் துறையில் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய மனித வள மேம்பாடு மற்றும் சமூகநீதி, உற்பத்தி மற்றும் சேவைகள், நகர்ப்புற வளர்ச்சி, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்புத் தாக்கம், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் ஆகியவை முன்னுரிமைத் திட்டங்கள் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.
இதில், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு என்ற வகையில், முதல் முறையாக வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு முதல் சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமைப்பு சார்ந்த துறைகளில், அதாவது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எஃப்.ஓ) பதிவு செய்யும் புதிய தொழிலாளர்கள், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். அவர்களின் முதல் மாத சம்பளமாக ரூ.15,000-ஐ அரசு வழங்கும். இது மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு மாதமும் அவர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படும்.
இந்தத் திட்டத்தால், தொழிலாளர்கள், வேலை வழங்குபவர்கள் என இரண்டு தரப்பினருமே பயனடைவார்கள். அதிகபட்சமாக, தொழிலாளர்களின் சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது இதற்கான நிபந்தனையாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 1.2 கோடிப் பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிதாக வேலைக்கு சேருபவரை, பணியில் சேர்ந்து ஓராண்டு காலத்துக்குள் வேலையிலிருந்து அனுப்புவது என்று நிறுவனம் முடிவு செய்தால், அவருக்கு அரசால் கொடுக்கப்பட்ட மானியத்தை நிறுவனம் அரசுக்குத் திருப்பிக்கொடுக்க வேண்டும். இந்தத் திட்டத்தால், அரசுக்கு ரூ.23,000 கோடி செலவாகும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.
வேலைவாய்ப்பு சார்ந்த இன்னொரு ஊக்குவிப்புத் திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, புதிதாக வேலையைக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள், பயிற்சி மேற்கொள்பவர்கள், குறிப்பிட்ட துறையில் அனுபவம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சம்பளம் இல்லாமல் வேலைக்கு சேருபவர்கள் ஆகியோருக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான கொள்கை வகுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.
அடுத்த ஐந்தாண்டுகளில், இந்தியாவின் 500 முன்னணி நிறுவனங்களில் மாணவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பயிற்சி வழங்குவது தொடர்பான கொள்கை வகுக்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கோடி இளைஞர்கள் பயனடைவார்கள் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.
மேலும், இந்தத் திட்டத்தின்படி, மாத உதவித்தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். இதுபோக, அத்தகைய இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.6000 வழங்குவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். முதல் முறையாக வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு உற்பத்தித்துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88
from India News https://ift.tt/opibdI5
0 Comments