`கார் இன்ஜினையே மாத்திட்டாங்க..!’ - ரூ.3,76,136 நஷ்டஈடு; ஏல நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

திண்டுக்கலை சேர்ந்த தனியார் கார் விற்பனை நிறுவனம், வாடிக்கையாளருக்கு மோசடியாக கார் விற்பனை செய்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 3,76,136 ரூபாயை நிறுவனம் வழங்கவேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இதுகுறித்து நீதிமன்ற அலுவலர்களிடம் விசாரித்த தகவலின் படி, "சிவகாசி நேஷனல் காலனியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர், கடந்த 19.8.2023-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் பித்தளைப்பட்டியில் உள்ள ஸ்ரீராம் ஆட்டோமால் எனும் தனியார் நிறுவனத்தில் நடைபெற்ற பயன்படுத்தப்பட்ட கார் மறுவிற்பனை ஏலத்தில் கலந்துகொண்டார். இந்த ஏலத்தில், TN30 AX1181 என்ற பதிவெண் கொண்ட மகிந்திரா பொலிரோ காரை முத்துக்கிருஷ்ணன் ரூ.2,60,000-க்கு ஏலத்தில் எடுத்துள்ளார்.

நீதிமன்றம்

கார் டெலிவரி செய்யப்படுவதற்கு முன்பாக ரூ.10,000 முன்பணம் கட்டிய முத்துக்கிருஷ்ணன், மீதத்தொகை மற்றும் வரிவகைகள் உள்பட ரூ.2,56,136 ரூபாயை கடந்த 25.08.2023-ம் தேதி ரொக்கமாக செலுத்தி காரை டெலிவரி எடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, விலைக்கு வாங்கிய காரில் பழுது ஏதும் உள்ளதா? என சோதித்து பார்ப்பதற்காக சிவகாசியில் உள்ள கார் மெக்கானிக்கிடம் முத்துக்கிருஷ்ணன் ஒப்படைத்துள்ளார். இந்தநிலையில், கார் சோதனைசெய்யப்பட்டதில் அந்த காரினுடைய அசல் இன்ஜின்-க்கு பதிலாக வேறொரு பழைய காரின் இன்ஜின் மோசடியாக பொருத்தப்பட்டு கார் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையறிந்த முத்துக்கிருஷ்ணன், கார் என்ஜின் முறைகேடு குறித்து தனியார் கார் ஏல நிறுவனத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால், ஏல நிறுவனம் அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து, காரை திரும்பப்பெற்றுக்கொண்டு, தான் கொடுத்த பணத்தை திருப்பிதரும்படி ஏல நிறுவன அதிகாரிகளுக்கு முத்துக்கிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு, பொய்யான காரணங்களை சொல்லி முறையான பதில் அளிக்காத நிலையில், இந்த மோசடி குறித்து கடந்த ஜனவரியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் முத்துகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தி, வழக்கில் தீர்ப்பளித்தார்.

கார்

அதன்படி, `ஸ்ரீராம் ஆட்டோமால் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தான் விற்பனை செய்த பொலிரோ காரை முத்துக்கிருஷ்ணனிடம் இருந்து திரும்ப பெற்றுக்கொள்ளவேண்டும். அதோடு, காருக்காக செலுத்திய மொத்த தொகை ரூ.2,66,136-ஐ முத்துகிருஷ்ணனுக்கு திரும்ப வழங்கவேண்டும். அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஒரு லட்ச ரூபாயும், வழக்கு செலவுத்தொகையாக 10,000ரூபாயும் சேர்த்து மொத்தம் ரூ.3,76,136-ஐ நஷ்ட ஈடாக 6 வார காலத்திற்குள் கார் ஏல நிறுவனம் வழங்கவேண்டும். தவறும் பட்சத்தில் வழக்கு செலவுத் தொகை நீங்கலாக உத்தரவு பிறப்பித்த தேதியிலிருந்து 9 சதவீத வருட வட்டியுடன் சேர்த்து தொகையினை முத்துக்கிருஷ்ணனுக்கு வழங்கவேண்டும்” என நீதிபதி சக்கரவர்த்தி தீர்ப்பளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/WGYh6wy

Post a Comment

0 Comments